தேடுதல்

பிலிப்பைன்சில் Taal எரிமலை வெடிப்பு பிலிப்பைன்சில் Taal எரிமலை வெடிப்பு 

எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள்

மணிலா நகருக்கு தெற்கே, ஏறத்தாழ எழுபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஏரியின் நடுவிலுள்ள Taal எரிமலையின் கரும்புகைகள், 15 கிலோ மீட்டர் வரை வானில் பரவியுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பைன்சில் Taal எரிமலை வெடித்து சிதறியதால் லாவா குழம்புகள் வெளியேறி, வானில் கரும்புகைகள் நிறைந்துவரும்வேளை, இப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் செபிக்கவும், உதவிகள் புரியவும் வேண்டுமென்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் பேரிடர் குறித்து ஊடகங்களிடம் பேசியுள்ள Lipa பேராயர் Gilbert Garcera அவர்கள், அடர்த்தியான கரும்புகைகளுக்குள் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்குச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Lipa உயர்மறைமாவட்டம் மூவாயிரத்திற்கு அதிகமான மக்களுக்கு உதவிவரும்வேளை, அவ்வுயர்மறைமாவட்டம் மேற்கொண்டுவரும் நிவாரணப் பணிகளுக்கு நன்கொடைகள் வழங்குமாறும், பேராயர் Garcera அவர்கள், கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே, இறைவார்த்தை சபையின் குருத்துவ பயிற்சி நிறுவனமும், மற்ற துறவு சபைகளும், எரிமலை வெடிப்பால் வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் அளித்து வருகின்றன.

மேலும், மணிலாவில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 240 பன்னாட்டு மற்றும் உள்ளூர் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தற்காலிக விமான நிலையமாக கிளார்கில் உள்ள விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதுவரை ஏறத்தாழ எட்டாயிரம் பொதுமக்கள், 38 நிவாரண முகாம்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று, பிலிப்பீன்ஸ் அரசு பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2020, 15:48