தேடுதல்

Vatican News
தென் கொரிய கிறிஸ்தவ சமூகம் தென் கொரிய கிறிஸ்தவ சமூகம்   (AFP or licensors)

20 ஆண்டுகளில் கத்தோலிக்கர் 50 விழுக்காடாக உயர்வு

தென் கொரியாவிலுள்ள கத்தோலிக்கத் திருஅவை, கிழக்கு ஆசியாவிலே வேகமாக வளர்ந்துவரும் திருஅவையாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவில், கடந்த இருபது ஆண்டுகளில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐம்பது விழுக்காடு அதிகரித்துள்ளது என்று, கொரிய ஹெரால்டு நாளிதழ் கூறியுள்ளது.

தென் கொரிய கத்தோலிக்க மேய்ப்புப்பணி மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 1999ம் ஆண்டில், 39 இலட்சத்து 46 ஆயிரத்து 844 கத்தோலிக்கர் இருந்தனர், இவ்வெண்ணிக்கை, 2018ம் ஆண்டில் 58 இலட்சத்து 66 ஆயிரத்து 510 ஆக, 48.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் தென் கொரியாவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை, 8.3 விழுக்காட்டிலிருந்து, 11.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும், 2000 மற்றும், 2001ம் ஆண்டுகளில் 3.2 மற்றும், 3.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும், அந்த அறிக்கை கூறுகிறது.

இவ்வெண்ணிக்கை, 2009ம் ஆண்டில் 2 விழுக்காடாகவும், 2010ம் ஆண்டில் மேலும் 1.7 விழுக்காடாகவும், 2014ம் ஆண்டில் மேலும் 2.2 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது என்றும், இதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தென் கொரியத் திருத்தூதுப் பயணமே முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டில், ஆறாவது ஆசிய இளைஞர் நாளுக்கென தென் கொரியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 January 2020, 15:34