தேடுதல்

Vatican News
அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களுக்கும், எகிப்து சுல்தான், அல் கமில் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களுக்கும், எகிப்து சுல்தான், அல் கமில் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு 

பாகிஸ்தானில் அமைதியை உருவாக்கும் கருவிகளாக...

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களுக்கும், எகிப்து சுல்தான், அல் கமில் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் 8ம் நூற்றாண்டு நிறைவையொட்டி, பாகிஸ்தானின் லாகூரில் பல் சமய கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களுக்கும், எகிப்து சுல்தான், அல் கமில் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் 8ம் நூற்றாண்டு நிறைவையொட்டி, பாகிஸ்தானின் லாகூரில் பல் சமயக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

1219ம் ஆண்டு நிகழ்ந்த இச்சந்திப்பின் 8ம் நூற்றாண்டு நினைவு, 2019ம் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டதையடுத்து, அந்நிகழ்வுகளின் சிகரமாக, அண்மையில், லாகூரில் நடைபெற்ற கூட்டத்தை, லாகூர் பேராயர் செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

இக்கூட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய மதத் தலைவர்களும், இந்து மதத் தலைவர்களும் கலந்துகொண்டனர் என்றும், அரசு தரப்பில், பஞ்சாப் மாநிலத்தின் மனித உரிமை மற்றும் பல் சமய துறையின் தலைவரான இஜாஸ் அலாம் அகஸ்டின் (Ijaz Alam Augustine) அவர்கள் கலந்துகொண்டார் என்றும் பீதேஸ் செய்தி கூறுகிறது.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய 'அமைதியின் கருவி' என்ற செபத்தையும், "நாம் அனைவரும் ஒன்றே" என்ற பொருள்படும் "Is percham k saye talay eik hain" என்ற பாகிஸ்தான் பாடலையும், பிரான்சிஸ்கன் இளையோர், இக்கூட்டத்தில் பாடியதோடு, புனித பிரான்சிஸ் மற்றும் சுல்தான் இருவருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பை, ஒரு நாடகமாக நடித்தனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

"பாகிஸ்தானில் அமைதியை உருவாக்கும் கருவிகளாகச் செயல்படுவோம்" என்ற விருதுவாக்கை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், ஒருங்கிணைந்து முழங்கினர் என்று பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது. (Fides)

22 January 2020, 15:10