தேடுதல்

“காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.” (மத்தேயு 4: 16) “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.” (மத்தேயு 4: 16) 

பொதுக்காலம் 3ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

தன்னலம் அறவே இல்லாத மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்க, இறைமகன் இயேசு முயன்றார். 'இறையரசு' என்ற அவ்வியக்கத்தை உருவாக்க, அவர் மேற்கொண்ட முதல் முயற்சிகளை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 3ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

சனவரி 26, இஞ்ஞாயிறன்று, இந்தியாவில், 71வது குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள், மன்னர்களின் முடியாட்சி, சில நூறு ஆண்டுகள், அன்னியரின் ஆதிக்கம், என்ற சுமைகளால் துன்புற்ற இந்திய மக்கள், இனி வேறு யாரும் எங்களை ஆட்சி செய்யவேண்டாம்; எங்களை நாங்களே ஆட்சி செய்வோம் என்று, 1950ம் ஆண்டு, சனவரி 26ம் தேதி, உலகறியப் பறைசாற்றிய நாள், குடியரசு நாள்.

இந்திய மக்கள் பறைசாற்றிய குடியரசு உரிமையை, கடந்த 70 ஆண்டுகளாக, அரசியல்வாதிகள், சிறிது, சிறிதாகப் பறித்துக்கொண்டனர் என்பது, வேதனையான உண்மை. குறிப்பாக, அண்மைய சில ஆண்டுகளில், மத அடிப்படைவாதம், பணமதிப்பிழப்பு, குடியுரிமை சட்டத்திருத்தம், போன்ற கொடுமைகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இத்தகையச் சூழலில், குடியரசு என்ற உன்னதக் கனவை, மக்கள் கொண்டாடமுடியாமல் தவிக்கின்றனர்.

ஆயினும், ஒவ்வோர் ஆண்டும், அரசு சார்பில், குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாடங்களின் ஒரு முக்கிய நிகழ்வாக, மத்திய, மாநில அரசுகள், இராணுவம், காவல்துறை ஆகியவற்றின் சக்தியை விளம்பரப்படுத்த, அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இந்த அணிவகுப்புக்கள் வழியே, தங்கள் அடக்குமுறைகளை வலியுறுத்த நினைக்கும் அரசுகளுக்கு எதிராக, சாதாரண, எளிய மக்கள், அவ்வப்போது திரண்டு எழுவது, மக்கள் சக்தி என்ற உண்மையின் மீது நமது நம்பிக்கையை வளர்த்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன், 2017ம் ஆண்டு, சனவரி மாதம், பொங்கல் திருநாளையொட்டி, ஏறத்தாழ இரு வாரங்கள், தமிழகமெங்கும், உண்மையான குடியரசு விழா கொண்டாடப்பட்டதை அறிவோம். குடிமக்கள், கட்டுப்பாட்டுடன், தங்களையே வழிநடத்தமுடியும் என்பதையும், இளையோரின் சக்தி ஒருங்கிணைந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதையும், அந்நாள்களில் உலகிற்கு உணர்த்தினோம். 'ஜல்லிக்கட்டு' என்ற பாரம்பரிய விளையாட்டைக் காப்பதற்காக, சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழ்நாட்டின் வேறுபல நகரங்களிலும், இளையோரும், மக்களும், இணைந்து மேற்கொண்ட அறப்போராட்டம், பெருமளவு வெற்றிபெற்றது.

இந்தப் போராட்டத்தை, மீண்டும் எண்ணிப்பார்க்க, இந்தியாவில், தற்போது, ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய நடுவண் அரசு, குடியுரிமை சட்டத்தில் மாற்றங்களைப் புகுத்தி, டிசம்பர் 12ம் தேதி வெளியிட்ட புதிய சட்டத்திற்கு, நாடெங்கும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, இளையோர், இந்த சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். அதிலும் சிறப்பாக, புது டில்லியில், பெண்களால் துவக்கப்பட்ட ஓர் அமைதியான மறியல் போராட்டம், ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. புது டெல்லியில், ஷாஹீன் பாக் (Shaheen Bagh) என்ற இடத்தில் துவங்கிய இம்மறியல் போராட்டம், 40நாள்களைக் கடந்து, இன்னும் தொடர்ந்து வருகிறது என்பதும், இப்போராட்டத்தில், இளையோர், முதியோர், என்று, இருபால் இனத்தவரும் கலந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

2017ம் ஆண்டின் துவக்கத்தில், தமிழ்நாட்டில், இளையோரும், மக்களும் மேற்கொண்ட 'ஜல்லிக்கட்டு' போராட்டமும், 2019ம் ஆண்டின் இறுதியில், இந்தியாவின் பல இடங்களில், குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து, மக்கள் மேற்கொண்டுள்ள இப்போதைய போராட்டங்களும், கட்டுப்பாட்டுடன் நடைபெறுவது, ‘மக்கள் இயக்கம்’ என்ற கருத்திற்கு  சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன. எந்த ஒரு தனி மனிதரும், தன் சுய இலாபத்தைத் தேடிக்கொள்ளாமல், சமுதாயத்தின் நன்மைக்கென உழைப்பது, ‘மக்கள் இயக்கத்’தின் இதயத் துடிப்பாக அமைகிறது.

தன்னலம் அறவே இல்லாத மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்க, இறைமகன் இயேசு முயன்றார். 'இறையரசு' என்ற அவ்வியக்கத்தை உருவாக்க, அவர் மேற்கொண்ட முதல் முயற்சிகளை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இயேசு, தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், சீடர்கள் நால்வரை அழைத்ததையும், நற்செய்தியைப் பறைசாற்றியதையும், மக்களைக் குணமாக்கியதையும், இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

இயேசு ஆரம்பித்த பணிவாழ்வினை, ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயாவும், அதே வரிகளை, நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.” (எசாயா 9: 2; மத்தேயு 4: 16) என்ற அழகிய வரிகள் நம்மை சிந்திக்க அழைக்கின்றன.

விளம்பரங்களை நம்பி வாழும் அரசியல் கட்சிகளுக்கும், அர்த்தமுள்ள பயனுள்ள பணியாற்றும் மக்கள் இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க, ஒளி, ஓர் அழகிய உருவகம். ஒளியின் இரு வடிவங்களாக, நாம் காணும் மின்னலும், சூரியஒளியும் இந்த வேறுபாட்டை அழகாக விளக்குகின்றன.

அரசியல் கட்சிகளை, மின்னலுக்கு ஒப்பிடலாம். பளீரெனத் தோன்றி மறையும் ஒவ்வொரு மின்னலிலும், மனிதர்களுக்குத் தேவையான கோடான கோடி வாட்ஸ் (Watts) மின்சக்தி வெளிப்படுகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால், அச்சக்தியைச் சேமித்து வைக்கும் கருவிகள் இல்லாததால், மின்னல்கள், பயனின்றி, தோன்றி மறைகின்றன. பலவேளைகளில், மின்னல்களின் தாக்குதல், தீமைகளை விளைவிப்பதும் உண்டு. அரசியல் கட்சிகள், மின்னலைப் போன்றவை.

இதற்கு மாறானது, சூரியஒளி. இரவு முடிந்து, பகலவன் எழும்போது, பளீரென உதயமாவதில்லை. அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல், சிறு, சிறு ஒளிக் கீற்றுக்களாய், உதயம் உருவாகும். ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாய் உதிக்கும் சூரியஒளியால், பல்லாயிரம் உயிர்கள் பயனடைகின்றன. இயேசுவின் பணி வாழ்வு, பகலவனைப் போல் உதயமானது.

மின்னலைப்போல் பளீரெனத் தோன்றிய பல நிறுவனங்கள், பல அரசியல் கட்சிகள் வரலாற்றில் எவ்விதச் சுவடும் பதிக்காமல் சென்றுள்ளன. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லத் தேவையில்லை.

இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் எடுத்துக்காட்டாக, புனித அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த, பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். உடலெல்லாம் புண்ணாகி, நாற்றம் எடுத்து, சாக்கடைக்கருகில் சாகக்கிடந்த ஒரு நோயாளிக்குச் செய்த பணியில் ஆரம்பமானது, இத்துறவுச்சபை. பிறந்த நாட்டைவிட்டு, வேறொரு நாட்டில், தனியொரு பெண்ணாக, அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த அற்புதப் பணிக்கு எந்த ஆரம்பவிழாவும், நடத்தவில்லை. அந்த அன்னையின் மன உறுதியைக் கண்டு, இன்னும் 12 பெண்கள் அவருடன் சேர்ந்தனர்.

இந்தியா குடியரசாக மாறிய 1950ம் ஆண்டு, அன்னை தெரேசா அவர்கள் உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையும் செயலாற்றத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 70 ஆண்டுகளாக, இத்துறவு சபை, உலகெங்கும், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தன் பணிகளைத் தொடர்கின்றது. அர்த்தமுள்ள ஒரு வரலாறு எழுதப்பட்டு வருகின்றது.

பிறரன்புப் பணிக்கென தன்னையே அர்ப்பணித்த ஓர் அன்னையைச் சுற்றி 12 பெண்கள் கூடிவந்தனர் என்ற இந்த வரலாற்றுக் குறிப்பு, நம் நினைவை 20 நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச்செல்கிறது. அன்று நிகழ்ந்ததை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த நிகழ்வையும், தன் பன்னிரு சீடர்களில் ஒரு சிலரை அழைத்ததையும் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். ஆர்ப்பாட்டம் ஏதுமற்ற, அடக்கமான, ஆழமான ஆரம்பம் இது.

ஒவ்வொரு தலைவனும், தன் பணியைத் துவக்கும் வேளையில், மக்கள் முன்னிலையில் சொல்லும் முதல் சொற்கள், செய்யும் முதல் பணி ஆகியவை, அத்தலைவன் எப்படிப்பட்டவர் என்பதை, மக்களுக்குக் காட்டும் அடையாளங்கள். இயேசு என்ற தலைவன், தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், மக்கள் முன் சொன்ன முதல் செய்தியை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்: "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." (மத்தேயு 4:17; மாற்கு 1:15) என்பதே, இயேசு கூறிய முதல் சொற்கள் என்று, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் பதிவு செய்துள்ளனர். இச்செய்தியைத் தொடர்ந்து, இயேசு செய்த முதல் பணி, தன் பின்னே வரும்படி, ஒரு சில மீனவர்களை அழைத்தது.

உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசு, மக்கள் முன், தன் பொதுவாழ்வை ஆரம்பித்த விதம், ஏமாற்றம் தருவதாக உள்ளது. பெரும் புதுமையொன்றைச் செய்து, அவர் தன் பொதுவாழ்வை ஆரம்பித்திருக்கலாம். இதைத்தான் அலகை அவருக்குச் சொல்லித்தந்தது. எருசலேம் ஆலயத்தின் உச்சியிலிருந்து அவரை குதிக்கச்சொன்னது. (மத். 4:5-7; லூக். 4:9-12) ஆலய கோபுரத்திலிருந்து இயேசு குதித்திருந்தால், அதுவும் எருசலேம் கோவில் திருவிழாவையொட்டி, அவர் அவ்வாறு செய்திருந்தால், ஒரு நொடியில், ஒரு மின்னலைப்போல், மக்களின் தலைவராக மாறியிருக்கலாம். ஆனால், இயேசுவோ, தன் பணிவாழ்வை, ஆரம்பித்த விதம், பகலவனின் உதயத்தைப்போல், அமைதியாக இருந்தது. அவர் முதன்முதலாகச் சொன்ன வார்த்தைகள், புதிராகவும் இருந்தன. "மனம் மாறுங்கள்" என்று மக்களுக்குச் சொன்னார். "என் பின்னே வாருங்கள்" என்று மீனவர்கள் சிலரிடம் சொன்னார். கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்கள் இவை: மனமாற்றம், இயேசுவைப் பின்தொடர்தல்.

மனமாற்றம், அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தேவையானது. இதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், இயேசுவைப் பின்தொடர்தல் என்பது, துறவறத்தார், அருள்பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் தேவையானது; அது, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அல்ல என்பது, நாமாகவே எடுத்துக்கொண்ட ஒரு முடிவு. ஆழச் சிந்தித்தால், மனம் மாறுவதும், இயேசுவைப் பின்தொடர்வதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்ற உண்மை விளங்கும்.

மாற்றம் உருவாக, குறிப்பாக, மனமாற்றம் உண்டாக, ஒரு முக்கிய உந்துதலாக இருப்பது, அன்பு, பாசம், காதல். நாம் மற்றொருவர்மீது ஆழமான ஈடுபாடு கொள்ளும்போது, அந்த இன்னொருவருக்காக, நமக்குள் எத்தனையோ அடிப்படை மாற்றங்களைச் செய்துகொள்ள தயாராகிறோம்.

கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்களான மனம் மாறுங்கள், என் பின்னே வாருங்கள் என்ற இந்த இரு அழைப்புக்களையும் நாம் இவ்விதம் இணைத்துப்பார்க்க முடியும். இயேசுவின் மீது கொண்ட ஆழமான ஈடுபாட்டால், அவரைப் பின்செல்ல நாம் ஆரம்பித்தால், மனமாற்றங்கள், வாழ்வின் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். தங்கள் வாழ்வின் ஆதாரங்களாய் இருந்த மீன்பிடிக்கும் தொழில், படகுகள், தங்கள் தந்தை என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, இயேசுவைப் பின்சென்ற சீடர்களின் வாழ்வு, முற்றிலும் மாறியதைப்போல், நமது வாழ்வும், இயேசுவின்மீது கொண்ட ஈடுபாட்டால், முற்றிலும் மாறவேண்டும் என்ற ஆவலுடன், அவரைப் பின்தொடர முயல்வோம்.

மாற்றத்தைப் பற்றிப் பேசும்போது, 'மாற்றங்கள் நாமாக இருப்போம்' (‘Let’s be the change’ – The Hindu, January 24, 2014) என்ற தலைப்புடன், இந்திய நாளிதழ் ஒன்றில், சில ஆண்டுகளுக்குமுன் வந்த ஒரு செய்தி மனதில் தோன்றுகிறது. அன்றையச் சூழலில், அணுகிவந்த பாராளுமன்றத் தேர்தலும், குடியரசு நாளும் இளையோர் மனதில் உருவாக்கிய ஒரு முக்கிய எண்ணம் என்ன என்று அந்த நாளிதழ், கருத்து கேட்டபோது, இளையோரில் பலர் கூறியது இதுதான்: "இந்தியாவில் எத்தனையோ நல்ல மாற்றங்கள் தேவை. அந்த மாற்றங்கள் என்னிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்று விரும்புகிறேன்" என்ற அற்புதமான கருத்து, பல இளையோரிடமிருந்து வந்தது. இந்த உறுதி, இளையோர் அனைவரிடமும் பரவினால், இந்தியா, நிச்சயம், ஒரு தலைசிறந்த குடியரசாக தலைநிமிர்ந்து நிற்கும். நாளையத் தலைமுறையினர், இந்தியாவை நல்வழியில் அழைத்துச் செல்வர் என்று நம்பிக்கை கொள்வோம்.

17 வயது நிறைந்த சுவீடன் நாட்டு இளம்பெண் கிரேட்டா துன்பர்க் அவர்களைத் தொடர்ந்து, தங்கள் எதிர்காலத்திற்காக, குறிப்பாக, சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்க, இளையோர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், நம்பிக்கை தருகின்றன. அதேபோல், சீன அரசின் அடக்குமுறைக்கு எதிராக, ஹாங்காங் இளையோர் நிகழ்த்திவரும் போராட்டங்கள், சிலே, வெனிசுவேலா போன்ற நாடுகளில், இளையோரின் போராட்டங்கள், இந்திய நடுவண் அரசின் பிரித்தாளும் அரசியல் சட்டங்களுக்கு எதிராக, இளையோர் மேற்கொண்டுவரும் போராட்டங்கள், நம்பிக்கையைத் தருகின்றன.

அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளையோருக்குத் தோள்கொடுப்போம். அவர்களை, நம் செபங்களால் தாங்கி நிற்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2020, 15:06