தேடுதல்

Vatican News
வேளாங்கன்னியில் இந்திய மறைமாவட்ட அருள்பணியாளர்கள் அவை வேளாங்கன்னியில் இந்திய மறைமாவட்ட அருள்பணியாளர்கள் அவை  

அருள்பணித்துவத்தின் எட்டுப் பேறுகள்

இயேசுவோடு ஆழமான உறவு கொண்டிருப்பவர், எளிய வாழ்வு வாழ்பவர், எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தும் எண்ணத்தைத் தவிர்த்திருப்பவர் போன்றோரே, மகிழ்வான அருள்பணியாளர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அருள்பணித்துவத்தின் எட்டுப் பேறுகள் பற்றி, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களின் ஏறத்தாழ எழுநூறு அருள்பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார், இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பை பேராயருமான, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

இந்திய மறைமாவட்ட அருள்பணியாளர்கள் அவை, தமிழகத்தின் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில், சனவரி 28, இச்செவ்வாயன்று துவக்கிய நான்கு நாள் மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மகிழ்வாக இருக்கும் அருள்பணியாளர்களின் பண்புகள் பற்றி விளக்கினார்.

‘அருள்பணித்துவத்தின் மகிழ்வு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஏற்கனவே சொல்லப்பட்ட, அருள்பணியாளர்களின் எட்டுப் பேறுகள் பற்றி விவரித்தார்.

இயேசுவோடு ஆழமான ஆள்-ஆள் உறவு கொண்டிருப்பவர், ஆடுகளின் மணத்தைக் கொண்டிருப்பவர், எளிய வாழ்வு வாழ்பவர், சமுதாயத்தின் விளிம்புகளுக்குச் செல்பவர், இரக்கமுள்ள இதயத்தைக் கொண்டிருப்பவர், இறைவார்த்தையால் ஊட்டம்பெற்று,  மற்றவரையும் அதனால் ஊட்டம்பெறச்செய்பவர், எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தும் எண்ணத்தைத் தவிர்த்திருப்பவர், ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர் ஆகியோரே மகிழ்வான அருள்பணியாளர்கள் என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

2001ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய மறைமாவட்ட அருள்பணியாளர்கள் அவை, 2008ம் ஆண்டில் ஒரு கழகமாக அங்கீகாரம் பெற்றது. 2014ம் ஆண்டில் அதன் விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த அவை, வேளாங்கண்ணியில், சனவரி 28, இச்செவ்வா முதல், சனவரி 31, இவ்வெள்ளி வரை, தன் இரண்டாவது மாநாட்டை நடத்தியது. இதில் ஏறத்தாழ 700 அருள்பணியாளர்கள் பங்குகொண்டனர். (AsiaNews)

31 January 2020, 15:07