தேடுதல்

Vatican News
கேரளாவில் தலித் கிறிஸ்தவர்கள் கேரளாவில் தலித் கிறிஸ்தவர்கள் 

இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில் கிறிஸ்தவ தலித் உரிமை வழக்கு

தலித் கிறிஸ்தவர்களின் சார்பில் வழங்கப்பட்டுள்ள மேல்முறையீட்டை, இந்தியாவின் உச்ச நீதி மன்றம் செவிமடுக்கும் என்று அறிவித்துள்ள முடிவை, இந்திய ஆயர்கள் வரவேற்றுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தலித் கிறிஸ்தவர்களின் சார்பில் வழங்கப்பட்டுள்ள மேல்முறையீட்டை, இந்தியாவின் உச்ச நீதி மன்றம் செவிமடுக்கும் என்று அறிவித்துள்ள முடிவை, இந்திய ஆயர்கள் வரவேற்றுள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இந்திய அரசின் பொதுப்பணித்துறையிலும் கல்வி வசதிகளிலும், இந்திய கிறிஸ்தவ தலித்துக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று 2004ம் ஆண்டு விடுக்கப்பட்ட ஒரு விண்ணப்பத்தைச் செவிமடுக்க, உச்ச நீதி மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதைக் குறித்து, இந்திய ஆயர் பேரவையின் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட அலுவலகத்தின் தலைவரான, ஆயர் சரத் சந்திர நாயக் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பத்தை, உச்ச நீதி மன்றம் வரை எடுத்துச் செல்வதில், கிறிஸ்தவ அமைப்புக்கள் அமைதியான, சட்டத்திற்கு உட்பட்ட வழிகளையே பின்பற்றி வந்துள்ளன என்பதை, ஆயர் சந்திர நாயக் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட போராட்டங்களின்போது, அரசு இயந்திரங்கள் கடினமான முறையில் நடந்துகொண்ட வேளையிலும், கிறிஸ்தவர்கள் அமைதி காத்தனர் என்று கூறிய ஆயர் சந்திர நாயக் அவர்கள், தற்போது, இந்த வழக்கு நடைபெறும் வேளையில், கிறிஸ்தவர்கள் தங்கள் செபங்கள் வழியே இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களில், 2.3 விழுக்காட்டினரான, 2 கோடியே 78 இலட்சத்திற்கும் அதிகமானோர் கிறிஸ்தவர்கள் என்றும், இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியான 1 கோடியே 80 இலட்சத்திற்கும் அதிகமானோர், கிறிஸ்தவ தலித்துகள் என்றும், ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. (AsiaNews)

15 January 2020, 15:19