தேடுதல்

Vatican News
பாலஸ்தீனா நாட்டில், கலைஞர் பாங்க்ஸி உருவாக்கியுள்ள "The Scar of Bethlehem", 'பெத்லகேமின் தழும்பு' குடில் பாலஸ்தீனா நாட்டில், கலைஞர் பாங்க்ஸி உருவாக்கியுள்ள "The Scar of Bethlehem", 'பெத்லகேமின் தழும்பு' குடில்  (AFP or licensors)

திருக்காட்சிப் பெருவிழா : ஞாயிறு சிந்தனை

அமைதியின் இளவரசராம் இயேசு பிறந்த பெத்லகேமில், 'பெத்லகேமின் தழும்பாக' இஸ்ரேல் அரசு எழுப்பியுள்ள தடுப்புச்சுவர் தகர்க்கப்பட்டு, 'பெத்லகேமின் விண்மீன்' மீண்டும் அங்கு ஒளிர்விட வேண்டும் என்று மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருக்காட்சிப் பெருவிழா : ஞாயிறு சிந்தனை

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா காலத்தின் நிறைவாக வரும் திருநாள், திருக்காட்சிப் பெருவிழா. இத்திருவிழாவுடன், கிறிஸ்மஸ் காலம் நிறைவுக்கு வருகிறது. கிறிஸ்மஸ் காலத்தின் சிறப்பான அடையாளங்களாக, விளங்குபவை, குடில், கிறிஸ்மஸ் மரம் மற்றும் விண்மீன். நமது இல்லங்களிலும், ஆலயங்களிலும், கிறிஸ்மஸ் காலத்தைப் பறைசாற்றிய இந்த அடையாளங்களை, இன்றோ, நாளையோ, அகற்றி, அவற்றை, பத்திரப்படுத்தி வைக்கிறோம். இந்த அடையாளங்களை அகற்றும் வேளையில், விண்மீனைக் குறித்தும், அந்த விண்மீனின் ஒளியில் வழிநடந்த மூன்று ஞானிகளைக் குறித்தும் சிந்திக்க, திருக்காட்சிப் பெருவிழா நம்மை அழைக்கிறது.

முதலில் விண்மீன்...

‘விண்மீன்’ என்று சொன்னதும், ‘நட்சத்திரம்’, அல்லது, ‘ஸ்டார்’ என்ற சொல், உள்ளத்தில் உதிக்கின்றது. பெரியவர்களைக் காட்டிலும், குழந்தைகளுடன் அதிகத் தொடர்பு கொண்டது 'ஸ்டார்'. Twinkle, twinkle little star என்ற மழலையர் பள்ளிப் பாடல் வரிகளில் ஆரம்பித்து, பல அழகிய கனவுகளுக்கு அடித்தளமாக 'ஸ்டார்' அமைந்துள்ளது. கனவையும், கறபனையையும் வளர்க்கும் 'ஸ்டார்', குழந்தைகளின் உலகிலிருந்து அகற்றப்படுகிறதோ என்ற கவலையை, இன்றைய உலகம் உருவாக்குகிறது.

'ஸ்டார்'களைக் காணவேண்டுமெனில், தெளிவான இரவில், வானத்தை, குழந்தைகள் அண்ணாந்து பார்க்கவேண்டும். இன்றையச் சூழலில், தெளிவான இரவும் இல்லை, குழந்தைகள் வானத்தை அண்ணாந்து பார்ப்பதும் இல்லை. தெளிவான இரவு வானத்தை, நாம் உருவாக்கும் புகை மண்டலம், மறைத்துவிடுகிறது. குழந்தைகள், வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குப் பதில், அவர்கள் கரங்களில் பல கருவிகளைத் திணித்து, குழந்தைகளின் பார்வைகளையும், எண்ணங்களையும், தவறான வழிகளில் கட்டிப்போடுகிறோம். அக்கருவிகளின் வழியே, பல செயற்கையான கற்பனை 'ஸ்டார்'கள் குழந்தைகளின் உலகை நிறைத்துவிடுகின்றன.

போரினால் துன்புறும் நாடுகளில் வாழும் குழந்தைகள், விண்மீன்களை, தங்களைத் தாக்கவரும் விமானங்களாகக் கருதி, அஞ்சுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் CNS என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனம், சிரியாவைப்பற்றி வெளியிட்ட ஒரு செய்தி இது:

இளவயது தந்தை ஒருவரும், அவரது சிறு வயது மகனும், இரவில் நடந்து சென்றபோது, திடீரென, அச்சிறுவன், தந்தையைப் பார்த்து, “அப்பா, அவர்கள் மீண்டும் குண்டுபோட வருகிறார்களா?” என்று கேட்டான். தந்தைக்கு ஒன்றும் விளங்காமல், வானத்தைப் பார்த்தார். வானத்தில் மின்னிய விண்மீன்களை பார்த்து, தன் மகன் அக்கேள்வியைக் கேட்டான் என்பதைப் புரிந்துகொண்டார், தந்தை. அக்கேள்வி, தன் மனதில் ஆழமான காயங்களை உருவாக்கியது என்றும், விண்மீன்களைக் கண்டு, தன் மகன் பயப்படத் தேவையில்லை என்பதை, எப்படி தன் மகனுக்குப் புரியவைப்பது என அறியாமல் தான் கலங்கி நின்றதாகவும், தந்தை, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது மகன், விவரம் தெரிந்த நாள்முதல், வானில் ஒளியைக் கண்டபோதெல்லாம் பயந்து நடுங்கி வாழ்பவன் என்பதை, CNS நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு, பரந்து விரிந்த வானத்தையும், அவற்றில் மின்னும் விண்மீன்களையும் காட்டி, அவர்கள் உள்ளங்களில் பரந்த மனப்பான்மையை வளர்ப்பதற்கு நம் தலைமுறை தவறிவிட்டது. பரந்து விரிந்த வானத்தை காணமுடியாத அளவு, இவ்வுலகை நாம் கூறுபோட்டு, சுவர்களை எழுப்பி வருவதால், குழந்தைகளின் உள்ளங்கள், குறுகிப்போய், அச்சத்திலும், வெறுப்பிலும் வாழும் ஆபத்து உள்ளது.

இங்கிலாந்தில் வாழும் கலைஞர் ஒருவர், 'தெருக் கலைஞர் பாங்க்ஸி' (street artist Banksy) என்ற புனைப்பெயருடன், சமுதாயப் பிரச்சனைகள் பலவற்றிற்கு கலைவடிவம் கொடுத்துவருகிறார். இன்றைய சமுதாயத்தைக் காயப்படுத்தும் பல பிரச்சனைகளை, பாங்க்ஸி அவர்கள், ஓவியங்களாக, பல நகரங்களின் சுவர்களில் தீட்டி வருகிறார்.

பாலஸ்தீனா நாட்டில், இஸ்ரேல் அரசு, அத்துமீறி ஆக்கிரமித்துள்ள பகுதியில் எழுப்பியுள்ள தடுப்புச்சுவருக்கருகே, பாங்க்ஸி அவர்கள், The Walled Off Hotel என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்திவருகிறார். பாலஸ்தீன நாட்டில் நிகழும் அநீதிகளை சித்திரிக்கும் ஓவியங்களையும், சிலைகளையும் இந்த ஹோட்டலில் அவர் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார். அண்மையில் - அதாவது, 2019ம் ஆண்டு, டிசம்பர் 20ம் தேதி - இந்த ஹோட்டலில் ஒரு கிறிஸ்மஸ் குடிலை உருவாக்கியுள்ளார் பாங்க்ஸி. இஸ்ரேல் அரசின் தடுப்புச்சுவரைப் போன்ற ஒரு வடிவம், இக்குடிலின் பின்புலமாக வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்புச்சுவருக்கு முன், அன்னை மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, ஒரு மாடு, மற்றும் ஒரு கழுதை ஆகிய உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. குழந்தை இயேசுவுக்கு நேர் மேலே, அந்தத் தடுப்புச்சுவரின் நடுவே, விண்மீன் இருக்கவேண்டிய இடத்தில், சுவரில், குண்டால் துளைக்கப்பட்ட ஓர் ஓட்டை, விண்மீனைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, கிறிஸ்மஸ் காட்சிகளைச் சித்திரிக்கும்போது, "The Star of Bethlehem", அதாவது, 'பெத்லகேமின் விண்மீன்' என்ற தலைப்பு வழங்கப்படும். ஆனால், பாங்க்ஸி அவர்கள் உருவாக்கியுள்ள இந்தக் குடிலுக்கு, "The Scar of Bethlehem", அதாவது, 'பெத்லகேமின் தழும்பு' என்று பெயர் சூட்டியுள்ளார்.

விண்மீன்களை, காயங்களாக, தழும்புகளாக மாற்றிவிட்ட நம் தலைமுறையினர், மீண்டும், குழந்தைகள், உண்மையான விண்மீன்களைக் காண்பதற்குத் தேவையானச் சூழலை உருவாக்கும் தெளிவையும், துணிவையும் பெறவேண்டுமென செபிப்போம். குறிப்பாக, அமைதியின் இளவரசராம் இயேசு பிறந்த பெத்லகேமில், 'பெத்லகேமின் தழும்பாக' இஸ்ரேல் அரசு எழுப்பியுள்ள தடுப்புச்சுவர் தகர்க்கப்பட்டு, 'பெத்லகேமின் விண்மீன்' மீண்டும் அங்கு ஒளிர்விட வேண்டும் என்று மன்றாடுவோம்.

அடுத்து, மூன்று ஞானிகள்...

திருக்காட்சிப் பெருவிழாவின் நாயகர்களான மூன்று ஞானிகள் மீது நம் சிந்தனைகளைத் திருப்புவோம். மத்தேயு நற்செய்தியில் மட்டும் (மத்தேயு 2:1-12) குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த ஞானிகள், கடந்த 20 நூற்றாண்டுகளாக, பல கோடி மக்களின் மனங்களில் நேர்மறைத் தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இன்று நாம் கொண்டாடும் திருநாள், இறைவன் தன்னை அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழா என அழைக்கப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணிவந்த யூத குலத்தவருக்கு, இந்தத் திருநாளில் பொதிந்திருக்கும் உண்மை, அதிர்ச்சியைத் தந்திருக்கும். வானதூதர்கள் வழியாக, எரியும் புதர் வழியாக, தங்களுக்கு மட்டுமே தோன்றிய இறைவன், இன்று பிற இனத்தவருக்கும் தோன்றினார் என்பது, யூதர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் மதவாதிகள், மற்றும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா, இந்தத் திருக்காட்சிப் பெருவிழா. கடவுளின் பெயரால், அரசியல்வாதிகளும், அடிப்படைவாதிகளும் உருவாக்கும் பிரிவுகளையும், பிளவுகளையும் வேரோடு களையும் உறுதியைப் பெறுவோம்.

இந்த மூன்று ஞானிகள், குழந்தை இயேசுவைச் சந்திக்க வந்த நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும், இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும், நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் நம்மை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதைச் சிந்திக்கலாம். இறைவனைச் சந்திக்கும்போதும், சந்தித்தப்பின்னும், நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்கலாம்.

விண்மீன், இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள், இரவில், தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற அக்காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்லவே. அதுவும், தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனை, பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே, மீண்டும், மீண்டும், அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது, அவ்வளவு எளிதல்லவே. பல இரவுகளில், மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, தங்கள் பயணத்தை அவர்கள் தொடர்ந்திருக்க வேண்டும். இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும், ஒரே குறிக்கோளுடன், பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி, நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்க்கவோ, வானத்தை அண்ணாந்து பார்க்கவோ நமக்கு நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம். அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும் போதும், மீண்டும், வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்... கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள.

சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. கருமேகங்களைத் தாண்டி விண்மீன்களைப் பார்ப்பதற்கு, நமக்கு, வெறும் உடல் கண்கள் போதாது. இதயக் கண்கள் தேவை.

அன்பு மருத்துவர், (Dr Love) என்று புகழ்பெற்ற, லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்ற ஓரு பேராசிரியரிடம், ஜோயல் என்ற மாணவர் படித்துவந்தார். மிகச்சிறந்த அறிவும், பல்வேறு திறமைகளும் கொண்டவர் ஜோயல். பாரம்பரியம்மிக்க யூத குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கடவுளையும், யூத மத நியதிகளையும் விட்டு வெகுதூரம் விலகிச்சென்றார் ஜோயல். ஏன் வாழ்கிறோம் என்பது தெரியாமல் குழம்பிப் போன அவர், ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தார்.

தான் சாவதற்கு முன், தன் அபிமான ஆசிரியர் லியோ புஸ்காலியாவைப் சந்திக்கச் சென்றார். தான் எடுத்திருந்த முடிவை அவரிடம் சொன்னார். "உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், நமது பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வயது முதிர்ந்தோர் இல்லத்திற்குப் போ. அங்கு, வாழ்க்கையின் அர்த்தமுள்ள தொடர்புகளையெல்லாம் இழந்து, வாழ்வோருக்கு, உன்னால் என்ன தரமுடியும் என்பதைச் சிந்தித்துப்பார். அங்குள்ளவர்களில், யார், எந்த ஓர் உறவினரும் வராமல், பல மாதங்கள், அல்லது, வருடங்கள் காத்திருக்கிறார்களோ, அவர்களைச் சென்று பார்" என்று லியோ சொன்னதும், ஜோயல், "அவர்களிடம் என்ன சொல்லவேண்டும்?" என்று கேட்டார். "என்ன சொல்ல வேண்டும் என்று நீயே தீர்மானித்துக் கொள்.. ஆனால், அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை, நம்பிக்கையை உண்டாக்கும்வண்ணம் எதையாவது சொல்" என்று சொல்லி அனுப்பினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பின், ஜோயலுக்கு என்ன ஆயிற்று என்பதை லியோ புஸ்காலியா அவர்கள் மறந்துவிட்டார். ஒரு நாள், அவர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டிக்குப் போய்கொண்டிருந்தபோது, ஜோயல் ஒரு பேருந்தில் வந்து இறங்கினார். அவருடன், முதியோர் இல்லத்திலிருந்து, பத்து, அல்லது, பதினைந்து பேர், சக்கர நாற்காலிகளில் வந்திறங்கினர். ஜோயல், தன் ஆசிரியர் லியோவிடம் சென்று, "சார், இவர்கள் கால்பந்தாட்டப் போட்டியை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எனவேதான் அவர்களை அழைத்து வந்துள்ளேன்" என்று சொன்னார். சிறிது தூரம் சென்றபின், லியோவின் கைகளைப் பிடித்தபடி ஜோயல் பேசினார்: "என் இதயத்தின் கண்களைத் திறந்து மற்றவர் தேவைகளை எனக்குச் சொல்லித் தந்தீர்கள். மிக்க நன்றி." என்று சொன்னார். விரக்தியால் வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஜோயல், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற விண்மீன் கொடுத்த அழைப்பை ஏற்றதால், அவரது வாழ்வு முற்றிலும் மாறியது.

இதயத்தின் கண்களைத் திறந்து பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம். இதைத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர் இன்று நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள், தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தடைகள் பல எழுந்தாலும், தளராமல், விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு, இப்புத்தாண்டின் துவக்கத்தில், நமக்கு மனஉறுதியைத் தந்து, இறைவன் வழி நடத்த வேண்டும் என்று மன்றாடுவோம்.

04 January 2020, 14:50