தேடுதல்

Vatican News
இந்தோனேசியாவின் Surabayaவில் கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலியில் கலந்துகொள்ளும் மக்கள் இந்தோனேசியாவின் Surabayaவில் கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலியில் கலந்துகொள்ளும் மக்கள்  (AFP or licensors)

இந்தோனேசியாவின் புதியவழி நற்செய்திப் பணி

உரையாடல்கள் மேற்கொள்ளப்படும் வேளையில், அடிப்படைவாதக் கொள்கை கொண்டவர்களை பிரித்து, அடையாளப்படுத்த முடியும் - கர்தினால் சுகார்யோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியத் தலத்திருஅவை, 2020ம் ஆண்டில், பல்சமய உரையாடல் வழியே, புதியவழி நற்செய்திப் பணிகளில் ஈடுபட விழைகிறது என்று, ஜகார்த்தா பேராயர், கர்தினால் இக்னேசியஸ் சுகார்யோ (Ignatius Suharyo Hardjoatmodjo) அவர்கள் கூறினார்.

2020ம் ஆண்டு, இந்தோனேசியா எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் குறித்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில், கர்தினால் சுகார்யோ அவர்கள் இவ்வாறு கூறினார்.

இஸ்லாமியரை, பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில், இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மதங்களில், மக்களின் நன்மைகளை முதன்மைப்படுத்தும் அம்சங்களில் இவ்விரு மதங்களைச் சார்ந்தவர்களும் ஈடுபடவேண்டும் என்று கர்தினால் சுகார்யோ அவர்கள் கூறினார்.

மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் நோக்கத்துடன் உரையாடல்கள் மேற்கொள்ளப்படும் வேளையில், அடிப்படைவாதக் கொள்கை கொண்டவர்களை பிரித்து, அடையாளப்படுத்த முடியும் என்று, கர்தினால் சுகார்யோ அவர்கள் தன் பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தோனேசியா விடுதலை பெற்ற நாள் முதல், தலத்திருஅவை, சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் சார்பாக பணியாற்றி வந்துள்ளது என்பதை, இந்நாட்டில் வாழும் கத்தோலிக்கர்களாகிய நாம் நினைவுறுத்தி வருகிறோம் என்பதை, கர்தினால்  சுகார்யோ அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

அமைதியில் அனைவரோடும் ஒருங்கிணைந்து வாழமுடியும் என்பதை எடுத்துக்கும் பஞ்சசீலக் கொள்கையை உலகிற்கு வழங்கிய இந்தோனேசியாவில், அமைதியும், சகிப்புத் தன்மையும் நிலவ, கத்தோலிக்கத் திருஅவை கடினமாக உழைக்கும் என்று கர்தினால் சுகார்யோ அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

08 January 2020, 15:26