தேடுதல்

Vatican News
திருநற்கருணை அப்பங்கள், கோவிலெங்கும் தரையில் வீசி எறியப்பட்டுள்ள காட்சி திருநற்கருணை அப்பங்கள், கோவிலெங்கும் தரையில் வீசி எறியப்பட்டுள்ள காட்சி 

பெங்களூருவுக்கு அருகே திருநற்கருணைக்கு அவமரியாதை

திருநற்கருணைக்கு இழைக்கப்பட்ட இந்த அவமரியாதைக்குப் பரிகாரமாக, பெங்களூரு உயர் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சனவரி 24ம் தேதி, 12 மணி நேர திருநற்கருணை ஆராதனை நடைபெற அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 20, இத்திங்களன்று இரவு, இந்தியாவில், பெங்களூருவுக்கு அருகே அமைந்துள்ள கெங்கேரியில், புனித பிரான்சிஸ் அசிசி கத்தோலிக்க ஆலயத்தில், அடையாளம் தெரியாத சிலர் நுழைந்து, அக்கோவிலின் நற்கருணைப் பேழையில் இருந்த திருநற்கருணை அப்பங்களை, கோவிலெங்கும் தரையில் வீசி எறிந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

திருநற்கருணைக்கு அவமரியாதை

ஆலயத்தில் நிகழ்ந்துள்ள இச்செயல், தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும், புனிதமான திருநற்கருணைக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அவமரியாதை, மனதைப் புண்படுத்துகிறது என்றும், பெங்களூரு பேராயர், பீட்டர் மச்சாடோ அவர்கள் கூறியுள்ளார்.

செவ்வாய் அதிகாலையில் கோவிலுக்குச் சென்ற ஆலயப் பங்கு அருள்பணியாளர் சதீஷ் அவர்கள், ஆலயத்தில் சிதறிக்கிடந்த திருநற்கருணை அப்பங்களைக் குறித்து, பேராயருக்கு உடனடியாகத் தெரிவித்தார் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

கத்தோலிக்கர்களின் உள்ளத்தைப் புண்படுத்த...

கோவிலிலிருந்து எந்த ஒரு பொருளும் களவு போகாத நிலையில், இச்செயல், கத்தோலிக்கர்களின் உள்ளத்தைப் புண்படுத்துவதற்கென மேற்கொள்ளப்பட்ட ஓர் அநாகரீகச் செயலாக மட்டுமே கருதப்படுகிறது என்று, கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூறியுள்ளனர்.

12 மணி நேர பரிகார ஆராதனை

திருநற்கருணைக்கு இழைக்கப்பட்ட இந்த அவமரியாதைக்குப் பரிகாரமாக, பெங்களூரு உயர் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சனவரி 24, இவ்வெள்ளியன்று, 12 மணி நேர திருநற்கருணை ஆராதனை நடைபெறுவதற்கும், அந்த நாளில் பல்வேறு தவ முயற்சிகளை அனைவரும் மேற்கொள்வதற்கும் பேராயர் மச்சாடோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். (AsiaNews)

22 January 2020, 15:24