தேடுதல்

Vatican News
திருத்தந்தை 11ம் பயஸ் திருத்தந்தை 11ம் பயஸ்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-7

திருத்தந்தை 11 பயஸ் அவர்கள் உடலை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அடியிலுள்ள பகுதியில் அடக்கம் செய்வதற்காக , தரையில் இரண்டு அடுக்குகள் தோண்டப்பட்டபோது, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை, புனித பேதுருவின் எலும்புகள் என அறியப்பட்டு, அவை தற்போது வணங்கப்பட்டு வருகின்றன.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் திருமடல்கள்

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், திருஅவையை தலைமையேற்று வழிநடத்திய காலக்கட்டத்தில், உலகில் சர்வாதிகார அரசுகள் வளர்ந்துவருவதைக் கண்டு, இரு திருமடல்களையும் வெளியிட்டார். அவற்றில் ஒன்று, நாத்சி ஜெர்மனிக்கு எதிராக 1937ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிட்ட Mit brennender Sorge என்ற திருமடலாகும். ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்ட ஒரே திருமடலான இது, அவ்வாண்டு குருத்தோலை ஞாயிறன்று அனைத்து பங்கு ஆலயங்களிலும் வாசிக்கப்பட்டது. இதற்கு உதவியாக, மூன்று இலட்சத்திற்கு அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டன. ஆயினும், நாத்சி அரசு, அதற்கு அடுத்த நாள் ஆலயங்களைச் சூறையாடி, அனைத்து பிரதிகளையும் கைப்பற்றியது. இவற்றை அச்சிட்ட அச்சகங்களையும் மூடியது. மேலும், திருத்தந்தை, கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிசத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து Divini Redemptoris (1937) என்ற திருமடலையும் வெளியிட்டார். திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், சோவியத்தின் கிறிஸ்தவத்திற்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்த, தொடர்ந்து எடுத்த முயற்சிகள் பலனின்றி போகவே, இத்திருமடல் வழியாக அதற்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டார். மேலும், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1931ம் ஆண்டில் முசோலினி, கத்தோலிக்க இளைஞர் இயக்கங்களை இரத்து செய்தது, மற்றும், 1938ம் ஆண்டில் ஹிட்லரின் நாத்சி இனப்பாகுபாடு கோட்பாடுகளை ஏற்றதையடுத்து, இத்தாலிய பாசிச அரசு மீது தனது போக்கை கடினப்படுத்தினார். இவர், தனது தலைமைப்பணியின் இறுதிக் காலத்தில், ஹிட்லர், முசோலினி ஆகியோர்க்கு எதிராகக் கடுமையாக குரல் எழுப்பி, அவர்கள், கத்தோலிக்கரின் வாழ்விலும், கல்வியிலும் தலையிடுவதைக் கண்டித்து, கத்தோலிக்கத் திருஅவையின் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுத்தார்.

மெக்சிகோ, இஸ்பெயின்

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், மெக்சிகோவில் திருஅவை மிகக் கொடூரமாக நசுக்கப்படுவதற்கு எதிராகப் பலமுறை குரல் எழுப்பினார். மெக்சிகோவில் நசுக்கப்படும் திருஅவை பற்றி, 1932ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி, Acerba animi  என்ற திருமடலை வெளியிட்டார். 1937ல் மெக்சிகோவில் நிலைமை சீரானபோது, அது நமக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது என்ற பொருளில், Nos es muy conocida என்ற திருமடலை, அதே ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட்டு, கத்தோலிக்கச் செயல்பாடுகளை ஊக்குவிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார். இஸ்பெயினில், குடியரசு கட்சி அரசு, அரசையும் மதத்தையும் கொடூரமாய்ப் பிரித்த நடவடிக்கைக்கு எதிராய் Dilectissima Nobis என்ற திருமடலை வெளியிட்டு, அது வழியாக கண்டனம் தெரிவித்தார்.

கிறிஸ்து அரசர் பெருவிழா

திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், ஆதிக்கச் சக்தியை ஆட்டம்காணச் செய்த, புகழ்பெற்ற ரேரும் நோவாரும் எனப்படும் சமுதாய நீதி திருமடலை வெளியிட்டதன் நாற்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, “நாற்பதாம் ஆண்டு (Quadragesimo anno)” என்ற திருமடல் உள்ளிட்ட 31 திருமடல்களை வெளியிட்டவர் திருத்தந்தை 11ம் பயஸ். பன்னாட்டு நிதி விவகாரத்தில் நிலவும் முதலாளித்துவ பேராசை, கம்யூனிசம் மற்றும், சோசலிஷத்தின் ஆபத்துக்கள், சமுதாய நீதி குறித்த விவகாரங்கள் போன்றவற்றை இவர் தன் திருமடல்களில் வலியுறுத்தினார். இவர், அருள்பணியாளர் ஆதிக்கத்திற்கு எதிராக, Quas primas என்ற திருமடலை வெளியிட்டு, கிறிஸ்து அரசர் பெருவிழாவை உருவாக்கினார். கிறிஸ்துவின் அன்பு நம்மை உந்தித் தள்ளுகிறது என்ற பொருளில், இயேசுவின் திருஇதயம் பற்றிய Caritate Christi compulsi என்ற திருமடலை 1932ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி வெளியிட்டார். கத்தோலிக்க மெய்யியல் மற்றும் இறையியலுக்கு மையமாக புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் சிந்தனைகள் உள்ளன என்று குறிப்பிட்டு, அவர் புனிதராக உயர்த்தப்பட்டதன் ஆறாம் நூற்றாண்டை முன்னிட்டு, 1923ம் ஆண்டு சூன் 29ம் தேதி, Studiorum ducem என்ற திருமடலை வெளியிட்டு, அதில், ஆஞ்சலிக்கம் எனப்படும், உரோம் புனித தாமஸ் அக்குவினாஸ் பல்கலைக்கழகத்தைத் தனித்து குறிப்பிட்டார் திருத்தந்தை 11ம் பயஸ். இவர், 1929ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, கிறிஸ்தவ கல்வி பற்றிய, Divini illius magistri (விண்ணகப் போதகர்) திருமடலை வெளியிட்டார்.  

வெளியிடப்படாத திருமடல்

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் வெளியிட விரும்பிய ஒரு திருமடல் வெளியிடப்படவே இல்லை என சொல்லப்பட்டுள்ளது.  இவர், யூதமதவிரோதப் போக்கை எதிர்த்தவர். அதற்கு மிகவும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க விரும்பிய இவர், இதை அடிப்படையாக வைத்து திருமடல் ஒன்றை வெளியிட விரும்பினார். இப்பணிக்கு, 1938ம் ஆண்டு சூன் 22ம் தேதி, அமெரிக்க இயேசு சபை அருள்பணி John LaFarge அவர்களின் ஒத்துழைப்பை நாடினார். அச்சமயத்தில் உலகளாவிய இயேசு சபை தலைவராகப் பணியாற்றிய அருள்பணி Wlodimir Ledóchowski அவர்களும், யூதமத விரோதப் போக்கிற்கு எதிரானவர் என்பதால், அவர் மேலும் இரு இயேசு சபை அருள்பணியாளர்களை இத்திருமடல் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தினார். அவர்களில் ஒருவர் ஜெர்மானியர் மற்றும், ஒருவர் பிரான்ஸ் நாட்டவர். அருள்பணி John LaFarge அவர்கள், அக்டோபர் முதல் தேதி உரோம் நகருக்கு வந்து, அத்திருமடலை, இயேசு சபை தலைவரிடம் ஒப்படைத்தார். அவரும் அத்திருமடல் பற்றி பரிசீலனை செய்யுமாறு, Civiltà Catholica இதழை நடத்திய, இயேசு சபை அருள்பணி Rosa அவர்களிடம் கொடுத்தார். இறுதியாக திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், அத்திருமடல் பற்றி பலமுறை கேட்டுக்கொண்டதன்பேரில், நான்கு மாதங்கள் சென்று அது அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்திருமடலை பெற்ற இருபது நாள்கள் சென்று, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் இறைபதம் சேர்ந்தார். இத்திருமடல் அறிவுப்புலமையுடன் எழுதப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது.

திருத்தந்தை 11 பயஸ் அவர்கள், கிறிஸ்துவின் மீட்பின் 1900மாம் ஆண்டையொட்டி,  1933ம் ஆண்டில் சிறப்பு ஜூபிலி ஆண்டை அறிவித்தார். இவர், 1939ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி, தனது 81வது வயதில் வத்திக்கான் மாளிகையில் இறைவனடி எய்தினார். அவரது உடல், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அடியிலுள்ள பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது கல்லறைக்காக, தரையில் இரண்டு அடுக்குகள் தோண்டப்பட்டபோது எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை புனித பேதுருவின் எலும்புகள் என அறியப்பட்டு, அவை தற்போது வணங்கப்பட்டு வருகின்றன.

29 January 2020, 13:44