தேடுதல்

திருத்தந்தை 11ம் பயஸ் திருத்தந்தை 11ம் பயஸ்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-6

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், மிகவும் நன்மதிப்பு வைத்திருந்த புனித குழந்தை தெரேசாவை, தனது பாப்பிறைப்பணியின் விண்மீன் என அழைத்தார். இவர், புனிதர்கள் பெரிய ஆல்பர்ட், பீட்டர் கனிசியுஸ், சிலுவை யோவான், இராபர்ட் பெல்லார்மின் ஆகியோரை, திருஅவையின் மறைவல்லுனர்கள் எனவும் அறிவித்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை 11ம் பயஸ் - 3

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1922ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல், 1939ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை, அதாவது அவர் இறக்கும்வரை, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஆற்றினார். இவர், கிறிஸ்தவ கல்வி, திருமணம், சமுதாயப் போதனைகள், புனிதர்கள், வேலைவாய்ப்பின்மை மற்றும், ஆயுதப் போட்டியைக் களைதல் உள்ளிட்ட பல தலைப்புக்களில் 31 திருமடல்களை வெளியிட்டுள்ளார். இவர், புனிதர்கள், பெரிய ஆல்பர்ட் (1200–1280), தாமஸ் மூர் (1478–1535), தொன்போஸ்கோ (1815–1888) புனித சிலுவை யோவான் (1543-1591), இராபர்ட் பெல்லார்மின் (1542-1621), பீட்டர் கனிசியுஸ்(152–1597), லிசிய நகர் குழந்தை தெரேசா (1873-1897), லூர்து நகர் பெர்னதெத் (1844–1879) உட்பட பலரை புனிதர்களாக அறிவித்தார். இவர் மிகவும் நன்மதிப்பு வைத்திருந்த புனித குழந்தை தெரேசாவை, தனது பாப்பிறைப்பணியின் விண்மீன் என அழைத்தார். இவர், புனிதர்கள் பெரிய ஆல்பர்ட், பீட்டர் கனிசியுஸ், சிலுவை யோவான், இராபர்ட் பெல்லார்மின் ஆகியோரை, திருஅவையின் மறைவல்லுனர்கள் எனவும் அறிவித்தார். புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவன்று "அனைத்துக் காரியங்களின் தொந்தரவு எனப்படும் Rerum omnium perturbationem" என்ற திருமடலை 1923ம் ஆண்டு சனவரி 26ம் தேதி வெளியிட்டார். அதே ஆண்டில் புனித தாமஸ் அக்குவினாஸ் பற்றியும், கடவுளின் திருஅவை என்ற தலைப்பில், புனித Josaphat Kuntsevych பற்றியும் இரு திருமடல்களை வெளியிட்டார். 

புதிய முயற்சிகள்

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள்,  தனக்கு முந்தைய திருத்தந்தையர்களால் ஆற்ற இயன்றதையும் கடந்து, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். இவர், கலைகள் மற்றும், அறிவியல் துறையைப் பொறுத்தவரை, வத்திக்கான் நூலகத்தை அங்கீகரித்தார். கிறிஸ்தவ தொல்பொருள் ஆய்வு பாப்பிறை நிறுவனத்தை உருவாக்கினார். வத்திக்கானின் படங்களைச் சேகரித்து வைப்பதற்காக, Pinacotecaவைக் கட்டினார். வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்தை, காஸ்தெல்கந்தோல்போவில் பாப்பிறை மாளிகைக்கு மாற்றினார். 1931ம் ஆண்டில் வத்திக்கான் வானொலியையும், 1936ம் ஆண்டில் பாப்பிறை அறிவியல் கழகத்தையும் ஏற்படுத்தினார். தனக்கு முந்தைய திருத்தந்தையர் போன்று, கிறிஸ்தவத்தில் கிழக்குக்கும், மேற்கிற்கும் இடையே நிலவிய பெரும்பிளவுக்கு முடிவு கட்ட முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் வெற்றிபெறவில்லை. அதேநேரம், உரோமன் கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைக்கும் இடையே (1921–1926) சில உரையாடல்கள் இடம்பெற அனுமதியளித்தார். ஆயினும், முற்றிலும் மாறுபட்ட கோட்பாடுகளில் நம்பிக்கைகொண்ட இத்தகைய தனிப்பட்ட நிறுவனங்களை திருஅவையில் இணைக்க இயலாது என்று சொல்லி, இந்தக் கலந்துரையாடல்களில் கத்தோலிக்கர் பங்குபெறுவதைத் தடை செய்தார்.

இலாத்தரன் ஒப்பந்தம்

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், நவீன உலகிற்கும், பாப்பிறையின் தலைமைப்பணிக்கும் இடையே நிலவிய பதட்டநிலைகளைக் குறைப்பதற்கு செயலில் இறங்கினார். முதலாம் உலகப் போருக்குப் பின்னர், அனைத்து நாடுகளிலும் திருஅவை சுதந்திரமாகப் பணியாற்றுவதை உறுதிசெய்யும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 1922ல் முதலில் லாத்வியா, 1924ல் பவேரியா, 1925ல் போலந்து, 1924ல் லித்துவேனியா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இத்தாலியப் பிரதமர் பெனித்தோ முசோலினியின் ஃபாசிச அரசுடன் 1922ம் ஆண்டு பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்திய பின்னர், 1929ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி மிகவும் புகழ்பெற்ற இலாத்தரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் வழியாக, 1870ம் ஆண்டிலிருந்து, திருஅவைக்கும், இத்தாலிக்கும் இடையே நிலவிய பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேலும், வத்திக்கான் நகரம், தனித்தியங்கும் மற்றும், நடுநிலை வகிக்கும் நாடாகவும், உலகில் சிறிய நாடாக, ஆன்மீக அதிகாரத்துடன் மட்டுமே முன்னோக்கிச் செல்லும் ஒரு நாடாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் திருத்தந்தையின் சுதந்திரத்திற்கு உறுதி வழங்கியது. திருஅவை சட்டத்தை அங்கீகரித்தது, மற்றும், இத்தாலி, கத்தோலிக்கத்தை இத்தாலியின் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றது. திருப்பீடம், இத்தாலியை அரசாகவும், உரோம் அதன் தலைநகரமாகவும் ஏற்றது. இத்தாலியில் பாப்பிறை மாநிலங்கள் இழக்கப்பட்டதற்கு ஈடாக, இத்தாலிய அரசு, 175 கோடி லீராக்களை பாப்பிறையின் பாதுகாப்பு நிதியமைப்பிற்கு நன்கொடையாக வழங்கியது. அரசுப் பள்ளிகளில் மதம் போதிக்கப்படுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. முசோலினி அவர்கள், இந்த ஒப்பந்தத்திற்கென பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது, அமைதி மற்றும், ஒப்புரவில் எந்த ஆர்வமும் காட்டுவதைவிட, இத்தாலியர்களுக்கு கத்தோலிக்க விசுவாசத்தின் முக்கியத்துவம் பற்றியே கவனமாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது.  

நாத்சி ஜெர்மனிக்கு எதிராக

திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1933ம் ஆண்டில் மற்றுமொரு முக்கியமான ஒப்பந்தத்தை, ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லருடன் கையெழுத்திட்டார். ஜெர்மனியில் ஹிட்லர் அரசு, அருள்பணியாளர்களையும், பொதுநிலை விசுவாசிகளையும் நடத்தும்முறை பற்றி மிகுந்த கவலையடைந்த திருத்தந்தை, ஹிட்லரின் நன்னெறியைப் பொறுத்தவரை எழுந்த கடும் எதிர்ப்புகள் மத்தியில், 1933ல் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இது, ஜெர்மனியில் திருஅவையின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு உறுதி அளிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே ஆகும். ஆயினும், 1933ம் ஆண்டு முதல், 1936ம் ஆண்டுவரையுள்ள காலக்கட்டத்தில், திருஅவை நசுக்கப்படுவது அதிகரித்து வந்ததால், நாத்சி அரசை எதிர்த்து 34 செய்திகள் வெளியிட்டார். இறுதியில், 1937ம் ஆண்டில், Mit Brennender Sorge (14,மார்ச்,1933) அதாவது "எரிந்துகொண்டிருக்கும் அக்கறையுடன்" என்று தலைப்பிட்டு, திருமடலை வெளியிட்டு, அந்த ஒப்பந்தம் தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகக் கண்டனம் தெரிவித்து, நாத்சி ஜெர்மனியுடன் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் அறிவித்தார். ஜெர்மானிய மொழியில் திருத்தந்தை வெளியிட்ட இந்த ஒரே திருமடல் வழியாக, நாத்சிகள், கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்கள் என்று கூறி, அந்த திருமடல் எல்லா ஆலயங்களிலும் வாசிக்கப்படுமாறு திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2020, 11:48