தேடுதல்

மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் 

மார்ட்டின் லூத்தர் கிங் காட்டிய துணிவு நமக்குத் தேவை

'அன்பு நிறைந்த சமுதாயம்' என்று மார்ட்டின் லூத்தர் கிங் அவர்கள் கனவு கண்ட இந்த நாடு இன்னும், அந்தக் கனவை அடைவதற்கு வெகு தூரத்தில் உள்ளது - பேராயர் கோமஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இனவெறி, சிறுபான்மையினர் ஒதுக்கப்படுதல், அநீதி ஆகியவை மலிந்திருக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் எடுத்துக்காட்டு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

லூத்தர் கிங் காட்டிய துணிவு

சனவரி 20, இத்திங்களன்று, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், அதையொட்டி அறிக்கை வெளியிட்ட அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள், அநீதிகளை வெல்வதற்கு, மார்ட்டின் லூத்தர் கிங் அவர்கள் காட்டிய துணிவு நம் அனைவருக்கும் இன்று தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

'அன்பு நிறைந்த சமுதாயம்' என்று மார்ட்டின் லூத்தர் கிங் அவர்கள் கனவு கண்ட இந்த நாடு இன்னும், அந்தக் கனவை அடைவதற்கு வெகு தூரத்தில் உள்ளது என்பதை நாம் ஒவ்வொரு நாளும் வேதனையுடன் கண்டு வருகிறோம் என்று பேராயர் கோமஸ் அவர்களின் அறிக்கை கூறுகிறது.

தந்தையர் கண்ட சமுதாயக் கனவு

இறைவனால் படைக்கப்பட்ட நாம் அனைவரும் சரி நிகரானவர்கள் என்ற உண்மைக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டை உருவாக்கிய தந்தையர் கண்ட சமுதாயக் கனவுக்கும் எதிராக நம் நாட்டில் இனவெறி என்ற பாவம் வேரூன்றியுள்ளது என்று பேராயர் கோமஸ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆப்ரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த பல இளையோர், நமது வீதிகளில் தேவையற்ற வழிகளில் கொல்லப்படுகின்றனர், அல்லது, அவர்களில் பலர் தங்கள் மிக முக்கியமான ஆண்டுகளை சிறையில் கழிக்கவேண்டியுள்ளது என்று பேராயர் கோமஸ் அவர்கள் தன் செய்தியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கித் தாக்குதல்கள்

2019ம் ஆண்டில் நடைபெற்ற பல்வேறு துப்பாக்கித் தாக்குதல்களைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் கோமஸ் அவர்கள், யூதர்களுக்கும், கறுப்பினத்தவருக்கும், சிறுபான்மை குழுக்களுக்கும் எதிராக வளர்ந்துவரும் இனவெறியைக் களைவது, கத்தோலிக்கர்களின் முக்கிய கடமை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

1983ம் ஆண்டு முதல், சனவரி மூன்றாம் திங்களன்று சிறப்பிக்கப்பட்டு வரும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் நாள், இவ்வாண்டு சனவரி 20, கடந்த திங்களன்று சிறப்பிக்கப்பட்டது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2020, 15:00