தேடுதல்

Vatican News
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்  (AFP or licensors)

அனைத்து இந்தியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

இந்திய அரசியலமைப்பு சட்டம், மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்றும், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் கூறுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இந்திய நடுவண் அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதேவேளை, அதை நடைமுறைப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று, குஜராத் மாநில கத்தோலிக்க ஆயர்கள், நடுவண் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் மக்களவை மற்றும், மாநிலங்களவைகளில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் சட்டமாகியுள்ள இந்த விவகாரம் குறித்து, சனவரி 27, இத்திங்களன்று அறிக்கை வெளியிட்டுள்ள, குஜராத் மாநில ஆயர்கள், ஒரு நாட்டில் குடியுரிமை வழங்கப்படுவதற்கு, மதம் ஓர் அடிப்படை கூறாக கருதப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இப்புதிய சட்டம் குறித்த தங்களின் கவலையை வெளியிட்டு, அச்சட்டத்திற்கு தங்களது எதிர்ப்பையும் தெரிவித்துள்ள ஆயர்கள், அனைத்து இந்தியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆதரவற்ற சில புலம்பெயர்ந்தோர்க்கு குடியுரிமை வழங்கும் அரசின் தீர்மானத்தை திருஅவை வரவேற்கிறது, அதேநேரம், மதத்தைக் காரணம் காட்டி, ஒரு குறிப்பிட்ட சமுதாயம் ஒதுக்கப்படுவது கவலையளிக்கின்றது என்று, குஜராத் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கெதிரான பாகுபாடு, நாட்டின் அரசியலமைப்பின் மதிப்பீடுகளுக்கு எதிராக அமைகின்றது என்றும், உலகம், ஒரு குடும்பம் என்பதில் திருஅவை நம்பிக்கை கொள்கின்றது என்றும், இதுவும் அரசியலமைப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. (Agencies)

28 January 2020, 15:07