தேடுதல்

Vatican News
புனித பூமியின் கோவில்களில் ஒன்று புனித பூமியின் கோவில்களில் ஒன்று 

பன்னாட்டு ஆயர்கள் குழு புனித பூமிக்கு மேய்ப்புப்பணி பயணம்

புனித பூமியில், உரையாடல் மற்றும், அமைதியை ஊக்குவிப்பதற்கு, பன்னாட்டு ஆயர்கள் குழு ஒன்று, சனவரி 11-16 வரை, மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித பூமியில், உரையாடல் மற்றும், அமைதியை ஊக்குவிப்பதற்கு, பல நாடுகளைச் சார்ந்த கத்தோலிக்க ஆயர்கள் குழு, அப்பகுதிக்கு, சனவரி 11, இச்சனிக்கிழமையன்று, மேய்ப்புப்பணி பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனாவில் அரசியல், சமுதாய மற்றும், பொருளாதார நெருக்கடிகளில் வாழ்ந்துவரும் கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில், திருப்பீடத்தின் வேண்டுகோளின்பேரில், இந்த ஆயர்கள் குழு, கடந்த இருபது ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் இத்தகைய மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆயர்கள், இராமல்லாவில் ஓர் இரவு தங்கி காசா பகுதியைப் பார்வையிட்டு, சனவரி 12, இஞ்ஞாயிறன்று, காசாவில், சிறிய கிறிஸ்தவ சமுதாயத்திற்குத் திருப்பலி நிறைவேற்றுவார்கள்.

அண்மையில் சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பெருவிழாவின்போது, பெத்லகேம் மற்றும், West Bankலுள்ள குடும்பங்களையும், உறவுகளையும் சந்திப்பதற்கு, காசா பகுதி கிறிஸ்தவர்கள் தடைசெய்யப்பட்டிருந்ததால், இந்த ஆயர்கள் பிரதிநிதிகள் குழு, இப்போதைய பயணத்தில், காசா, கிழக்கு எருசலேம் மற்றும், இராமல்லா பகுதிகளில் கவனம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எருசலேம் மற்றும், இராமல்லா பகுதிகளில், இளைஞர்களைச் சந்தித்து அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும், அனுபவங்களையும், ஆயர்கள் கேட்டறிவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11 January 2020, 14:49