தேடுதல்

Vatican News
இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். 

ஆண்டவரின் திருமுழுக்கு : ஞாயிறு சிந்தனை

30 வயது நிறைந்த இளையவர் இயேசு, பற்றியெரியும் ஒரு சுடராக, பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த நிகழ்வைக் கொண்டாட, இந்த ஞாயிறு நாம் கூடிவந்துள்ளோம். யோர்தான் நதியில், இயேசு திருமுழுக்கு பெற்ற நிகழ்வை இன்று கொண்டாடுகிறோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

ஆண்டவரின் திருமுழுக்கு : ஞாயிறு சிந்தனை

நாம் எதிர்பாராத சில வேளைகளில், நம் கண்ணில்படும் ஒரு படமோ, கூற்றோ, நமக்குள் பல சிந்தனைகளைக் கிளறிவிடுவதை நாம் உணர்ந்திருப்போம். என் கண்ணில் பட்ட அத்தகைய ஓர் ஆங்கிலக் கூற்று, இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்கிவைக்கிறது. "He (She) who is on fire, cannot sit on a chair" என்ற அந்த ஆங்கிலக்கூற்றை, தமிழில் இவ்விதம் கூறலாம்: "பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது".

இச்சொற்கள், 1989ம் ஆண்டு வெளியான ஓர் ஆங்கில நூலின் தலைப்பை என் நினைவுக்குக் கொணர்ந்தன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான இராபர்ட் ஃபுல்கம் (Robert Fulghum) அவர்கள் வெளியிட்ட அந்நூலின் தலைப்பு: “It Was On Fire When I Lay Down On It”, அதாவது, "நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது".

நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியுடன், ஃபுல்கம் அவர்கள், இந்நூலை ஆரம்பித்துள்ளார். ஒரு வீட்டின் மேல் மாடியிலிருந்து புகை வெளியேறவே, அங்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் அந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, அங்கு, எரிந்துகொண்டிருந்த ஒரு படுக்கையில் ஒருவர் படுத்திருந்ததைக் கண்டனர். அவரை மீட்டு, தீயை அணைத்தபின், அவரிடம் நடந்ததென்ன என்று கேட்டபோது, "எனக்குத் தெரியாது. நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்று சொன்னாராம்.

"பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது" என்ற முதல் வாக்கியம், பற்றியெரியும் சுடர்களாக இவ்வுலகில் வாழ்வோரைக் குறிக்கிறது. "நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்ற இரண்டாவது வாக்கியமோ, தங்களைச் சுற்றி பல விடயங்கள் பற்றியெரிந்தாலும், கண்மூடித் துயில்வோரைக் குறிக்கிறது.

நம்மைச்சுற்றி பல விடயங்கள் பற்றியெரிந்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். 2019ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல், ஆஸ்திரேலியாவின் ஒரு சில பகுதிகள் பற்றியெறிந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் அவ்வப்போது தீ விபத்துக்கள் நிகழ்வது வழக்கம்தான். எனினும், இம்முறை, மூன்று மாதங்களுக்கும் மேல் பற்றியெரியும் காடுகளுக்கு, அங்கு நிலவிவரும் வறட்சியே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியும், வேறு பகுதிகளைச் சூழும் பெரு வெள்ளமும், சுற்றுச்சூழல் சீரழிவின் எதிரொலிகள் என்று, அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

பற்றியெரியும் ஆஸ்திரேலியா தரும் எச்சரிக்கையைப்பற்றிக் கவலைப்படாமல், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் தந்த எச்சரிக்கையைப்பற்றிக் கவலைப்படாமல், உலகின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியும், வெள்ளமும் தரும் எச்சரிக்கைகளைப்பற்றிக் கவலைப்படாமல், உலகத்தலைவர்கள் உறங்கிக்கிடக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து, நாமும், உறங்கிக்கிடக்கிறோம்.

உள்நாட்டில் பற்றியெரியும் பிரச்சனைகளால் மக்கள் கொதித்தெழாமல் இருக்க, அவ்வப்போது, அவர்களின் கவனத்தைத் திசை திருப்பும்வண்ணம், தலைவர்கள், வெளிநாட்டுடன் மோதல்களை உருவாக்கும் சில தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். புத்தாண்டு புலர்ந்த வேளையில் (2020, சனவரி 3ம் தேதி), அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், ஈரான் படைத்தளபதி ஒருவரை, ஈராக் நாட்டில், கொல்வதற்கு வழங்கிய உத்தரவு, மக்களைத் திசை திருப்பும் தந்திரங்களில் ஒன்று என்பது, பரவலானக் கருத்து. இந்தியா போன்ற நாடுகளில், மக்களை, குறிப்பாக, இளையோரைத் திசைதிருப்ப, 'கிரிக்கெட்' போன்ற விளையாட்டுக்களும், நடிகர்களை மையப்படுத்திய நிகழ்வுகளும், மதக் கலவரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பிரச்சனை, அரசு இயந்திரங்களின் அத்துமீறிய அடக்குமுறை, மக்களைப் பிரித்தாளவும், திசை திருப்பவும் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் தந்திரங்கள் ஆகியவற்றை, இளையோர் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர் என்பதும், அவர்கள், பற்றியெரியும் சுடர்களாக, ஒவ்வொரு நாட்டிலும், தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என்பதும், நம்பிக்கை தரும் செய்திகள்.

சீன அரசின் அடக்குமுறைக்கு எதிராக, ஹாங்காங் இளையோர் நிகழ்த்திவரும் போராட்டங்கள், சிலே, வெனிசுவேலா போன்ற நாடுகளில், இளையோரின் போராட்டங்கள், இந்திய நடுவண் அரசின் பிரித்தாளும் அரசியல் சட்டங்களுக்கு எதிராக, இளையோரின் போராட்டங்கள் ஆகியவை, பற்றியெரியும் சுடர்களாக, இளையோர் வலம்வருகின்றனர் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

தான் வாழ்ந்த காலத்தில், அநீதிகளாலும், அடக்கு முறைகளாலும் இஸ்ரயேல் மக்கள் அடைந்த துன்பத்தைத் தீர்ப்பதற்கு, 30 வயது நிறைந்த இளையவர் இயேசு, பற்றியெரியும் ஒரு சுடராக, பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த நிகழ்வைக் கொண்டாட, இந்த ஞாயிறு நாம் கூடிவந்துள்ளோம். யோர்தான் நதியில், மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக்கொண்டு, இயேசு, திருமுழுக்கு பெற்ற நிகழ்வை இன்று கொண்டாடுகிறோம்.

30 ஆண்டுகள் அமைதியாக, நாசரேத்தில், இயேசு வாழ்ந்தபோது, அவரைச் சுற்றி நடந்த பல அநியாயங்கள், அவர் மனதில், பூகம்பங்களாய் வெடித்திருக்கும். தன் சமுதாயத்தில் மாற்றங்கள் தேவை என்பதை அவர் உணர்ந்திருப்பார். இந்த மாற்றங்களைக் கொணர்வதற்கு, இளையோர் பலர், புரட்சிக் குழுக்களை உருவாக்கியதையும், வன்முறைகளில் ஈடுபட்டதையும் இயேசு அறிந்திருந்தார். தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று அவரும் கட்டாயம் சிந்தித்திருப்பார்.

நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? உள்ளிருந்தா? வெளியிலிருந்தா? என்பதில், கருத்து வேறுபாடுகள் உள்ளன. வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும் - பணம் படைத்தவர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்; அவர் மாறவேண்டும்; இவர் மாறவேண்டும்; அது மாறவேண்டும்; இது மாறவேண்டும் என்ற பட்டியலைத் தயாரித்து, நம்மில் பலர் காத்திருக்கிறோம். அதே வேளையில், நம் ஒவ்வோருவருக்குள்ளும் மாற்றங்கள் தேவை என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.

வெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள், அக்கிரமம், அநீதி இவை அனைத்துமே, மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தானே. உள்ளத்தில் உருவாகும் இந்தக் குழப்பங்களைத் தீர்ப்பதற்கு மனமாற்றம் அவசியம். மனமாற்றம் என்ற கடினமான, கசப்பான, அதேவேளையில் அடிப்படையான உண்மையை உணர்த்த, இயேசு எடுத்த முதல் முடிவு, மக்களோடு மக்களாக, தன்னைக் கரைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு. அந்த முடிவோடு, அந்த முனைப்போடு யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.

மனமாற்றத்தின் வழியே, கலாச்சார மாற்றத்தையும், அவற்றின் விளைவாக, இன்னும் பல உன்னத மாற்றங்களையும் கொணர்வதே தன் பணி, தன் வாழ்வு என்பதைக் குறித்து உறுதியானதொரு முடிவெடுத்தார் இயேசு. அந்த மாற்றங்கள், மேலிருந்து அல்ல, மாறாக, கீழிருந்து, அதாவது, மக்களிடமிருந்து ஆரம்பமாக வேண்டும் என்பதைத் தெளிவாக்க, தன்னையே மக்களில் ஒருவராக கரைத்துக்கொண்டார். தன் பணிவாழ்வின் முதல் அடியை, யோர்தானில் எடுத்துவைத்தார். அவர் எடுத்துவைத்த முதல் அடியை, தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்து வைத்தார். இது, நம் சிந்தனைகளைத் தூண்டும் அழகான ஓர் அடையாளம்.

உறுதியான தரையில் நிற்பதற்கும், ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. இயேசு தன் பணியைத் துவக்கிய வேளையில், இஸ்ரயேல் சமுதாயம் பல வழிகளில் நிலையற்ற ஒரு சமுதாயமாக இருந்தது என்பதை, யோர்தானில் ஓடிய அந்த நீர் உருவகப்படுத்தியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இனி தொடரும் தன் பணிவாழ்வில், தந்தையாம் இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் இயேசுவுக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த, அவர், தன் பணிவாழ்வின் முதல் அடியை, ஓடும் நீரில் எடுத்து வைத்தாரோ?

ஓடும் நீரில் மற்றோர் அழகும் உண்டு. தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில், உயிர்கள், வாழவும், வளரவும், வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும், ஓடும் நீரைப் போல், பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரை, தன் பணிவாழ்வின் முதல் தளமாகத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும்.

அந்த ஆற்று நீரில் இயேசு தனியே தன் திருமுழுக்கைப் பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். எந்த மக்களை விடுவிக்க அவர் தீர்மானித்தாரோ, அந்த மக்களில் ஒருவராய் மாறினார். அவர் அப்படி கலந்து, கரைந்து நின்றது, திருமுழுக்கு யோவானுக்கு, சங்கடத்தை விளைவித்தது என்பதை, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். எனினும், இயேசு, தன் முடிவிலிருந்து மாறவில்லை.

ஓடும் நீரில் இறங்கியது, மக்களோடு மக்களாய் கரைந்தது என்ற இந்த இரு செயல்கள் வழியாக, தன் பணியின் நோக்கத்தை, இயேசு, உலகறியச் செய்தார். இயேசு எடுத்த முடிவைக் கண்டு மனம் மகிழ்ந்த விண்ணகத் தந்தை, தன் பங்கிற்கு, தன் அன்பு மகனை, உள்ள நிறைவுடன் உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.

"என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மத்தேயு 3:17) என்று விண்ணகத் தந்தை முழங்கியபோது, தன் மைந்தனுக்குரிய, தன் பணியைச் செய்யும் ஊழியனுக்குரிய இலக்கணத்தை அவர் உலகறியச் செய்தார். அந்த இலக்கணம், இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சொற்களாக நம்மை வந்தடைந்துள்ளது.

எசாயா 42: 1-4, 6-7

இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்... உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்... இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இறுதியாக, அன்புள்ளங்களே, சிறப்பான சில வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவுசெய்வோம். அடுத்துவரும் நாட்களில், பொங்கல் திருவிழாவையும், உழவர் திருவிழாவையும் கொண்டாடவிருக்கிறோம். இயற்கையும், மனித உறவுகளும் உழவர்களுக்கு உற்றதுணையாக இருந்து, அவர்களை வாழவைக்கவேண்டும் என்றும், உழவர்கள் வாழ்வதால், இவ்வுலகமும் வாழவேண்டும் என்றும், இறைவனிடம் சிறப்பாக மன்றாடுவோம்.

பற்றியெரியும் உலகப் பிரச்சனைகளில் குளிர்காய்ந்து படுத்திருக்கும் உலகத் தலைவர்கள் விழித்தெழும்வண்ணம், பற்றியெரியும் சுடர்களாக, இளையோர், தங்கள் சமுதாயக் கடமைகளை நிறைவேற்றவும், மாற்றங்களைக் கொணரவும் வேண்டுமென செபிப்போம். குறிப்பாக, இன்றைய இந்தியச் சூழலில், மதத்தை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி, மக்களைப் பிரிப்பதற்கு, நடுவண் அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள இவ்வேளையில், இஸ்லாமியர் உட்பட, அனைத்து மதத்தினருக்கும் இந்தியாவில் இடம் உண்டு என்பதை துணிந்து சொல்வதற்கு, மக்கள் சக்தி இணைந்து வரவேண்டும் என்று மன்றாடுவோம்.

நாம் அனைவருமே இறைவனின் அன்புக்குரிய குழந்தைகள் என்பதை இப்புதிய ஆண்டில் மீண்டும் ஒருமுறை உணர்வதற்கு, இறைவன் நம் அனைவருக்குமே நல்லொளியைத் தரவேண்டும் என்று, ஒருவர் ஒருவருக்காக வேண்டிக்கொள்வோம்.

11 January 2020, 13:51