தேடுதல்

இந்தியா உட்பட, கிறிஸ்தவர்கள் அதிக அளவில் துன்புறுத்தப்படும் நாடுகளைக் காட்டும் உலக வரைப்படம் இந்தியா உட்பட, கிறிஸ்தவர்கள் அதிக அளவில் துன்புறுத்தப்படும் நாடுகளைக் காட்டும் உலக வரைப்படம் 

உலக அளவில் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் அதிகரிப்பு

உலக அளவில் கிறிஸ்தவர்கள் அடக்குமுறைகளை மிக அதிகமாக எதிர்கொள்ளும் பத்து நாடுகள் – வட கொரியா, ஆப்கானிஸ்தான், சொமாலியா, லிபியா, பாகிஸ்தான், எரிட்ரியா, சூடான், ஏமன், ஈரான், இந்தியா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் ஏறத்தாழ 26 கோடி கிறிஸ்தவர்கள், அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர் என்றும், இந்நிலை கடந்த ஆண்டைவிட ஆறு விழுக்காடு அதிகம் என்றும், Open Doors என்ற அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.

உலகில் கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான ஐம்பது நாடுகளைப் பட்டியலிட்டுள்ள இவ்வறிக்கை, இவற்றில் வட கொரியா முதலிடத்தில் உள்ளது என்றும், கடந்த 18 ஆண்டுகளாக அந்நாடு அதே நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளது.

வட கொரியாவிலுள்ள 2 கோடியே 54 இலட்சம் மக்களில், 3 இலட்சம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் என அடையாளம் காணப்பட்டால், அவர்கள் அரசியல் குற்றவாளிகள் என முத்திரை குத்தப்பட்டு, உடனடியாக வதைமுகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர், ஏன் அவர்கள் அந்த இடத்திலேயே கொலையும் செய்யப்படுகின்றனர் என்று, Open Doors அமைப்பு கூறியுள்ளது.

வட கொரியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், சொமாலியா, லிபியா, பாகிஸ்தான், எரிட்ரியா, சூடான், ஏமன், ஈரான், இந்தியா ஆகிய பத்து நாடுகளை அவ்வறிக்கை வரிசைப்படுத்தியுள்ளது.

உலகில் சித்ரவதைகளை மிக அதிகமாக எதிர்கொள்ளும் சமுதாயங்களில் கிறிஸ்தவ சமுதாயமும் ஒன்று எனக்கூறும் அவ்வறிக்கை, கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும், கைது, வீடுகளையும், சொத்துக்களையும் இழத்தல், சித்ரவதை, பாலியல் வன்கொடுமை, ஏன் மரணத்தையும்கூட எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கின்றது.

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, 447 வன்முறை நிகழ்வுகளும், வெறுப்புக் குற்றங்களும் இடம்பெற்றுள்ளன, இவற்றில், பல தாக்குதல்கள், இந்து தீவிரவாதிகளால், கும்பலாக நடத்தப்பட்டுள்ளன எனவும், Open Doors அமைப்பு கூறியுள்ளது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2020, 15:38