தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் - பேராயர் José H. Gomez அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் - பேராயர் José H. Gomez 

இனப்பாகுபாடு, அநீதிகள் களையப்பட வேண்டும்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், சமுதாய உரிமைகளின் தேசிய அடையாளமாக நோக்கப்படும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் நினைவு நாள், தேசிய விடுமுறையாக, இவ்வாண்டு, சனவரி 20ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களின் இதயங்களைச் சூழ்ந்துள்ள இனப்பாகுபாடு மற்றும், அநீதிகள் களையப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாறு, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் José H. Gomez அவர்கள், இவ்வியாழனன்று வலியுறுத்தினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், சமுதாய உரிமைகளின் தேசிய அடையாளமாக நோக்கப்படும் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் நினைவு நாள், தேசிய விடுமுறையாக, இவ்வாண்டு, சனவரி 20, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, Los Angeles பேராயர் Gomez அவர்கள், மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் கனவுகள் நனவாக்கப்படுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், இன்னும் இனவெறியில் நம்பிக்கை வைத்தும், பாகுபாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்ற அனைவருக்கும் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள பேராயர் கோமஸ் அவர்கள், சமுதாய உரிமைகளின் தலைவரை மதிக்கும் முறையில் கடைப்பிடிக்கப்படும் விடுமுறை நாளை, அர்த்தமுள்ள முறையில் செலவழிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், இனப்பாகுபாடு மற்றும், அநீதிகள் களையப்படுவதற்கு இன்னும் நீண்ட பயணம் மேற்கொள்ளவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள பேராயர் கோமஸ் அவர்கள், யூதமதவிரோதப்போக்கு தொடர்பான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளார். (CNS)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2020, 15:08