தேடுதல்

Vatican News
ஹங்கேரியில் கிறிஸ்மஸ் குடில் ஹங்கேரியில் கிறிஸ்மஸ் குடில்  (ANSA)

வாரம் ஓர் அலசல்: கிறிஸ்மசை அர்த்தமுள்ள முறையில் கொண்டாட..

நம் இதயம் கடவுள் வாழும் ஆலயம். இதை உணர்ந்து, அதில் இறைமகன் பிறப்பதற்கு, நம் மனங்களில் கறைபடிந்துள்ள அழுக்குகளைக் கழுவி, தூசுகளை ஒட்டடை அடித்து, தூய்மைப்படுத்த வேண்டிய காலம் கிறிஸ்மஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்மஸ் பெருவிழாவை கோலாகலமாக கொண்டாட உலகம் முழுவதும் எல்லா ஆலயங்களிலும், பல்வேறு நிறுவனங்களிலும், இல்லங்களிலும் தயாரிப்புகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாண்டு கிறிஸ்மஸ் விழாவிற்காக, இங்கிலாந்து அரசி எலிசபெத் அவர்கள், தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரண்மனை ஊழியர்களுக்காக, ஏறத்தாழ 620 பரிசுப் பொருள்களை வாங்கியுள்ளாராம். மேலும், இதில் அவர் தனிப்பட்ட முறையில் தன் கைப்பட எழுதிய வாழ்த்து அட்டைகளும் அடங்கும். பொதுவாகவே கிறிஸ்மஸ் நாளன்று அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பக்கிங்ஹாம் அரண்மனையிலுள்ள முக்கிய அறையில் தங்களின் பரிசு மற்றும் வாழ்த்து அட்டைகளை அரசியிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். பரிசுப் பொருளைக் கொடுப்பதோடு, `ஆண்டு முழுவதும் அவர்கள் செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. கிறிஸ்மஸ் வாழ்த்துகள்' எனக்கூறி ஒவ்வொருவரையும் வாழ்த்துவது வழக்கம்" என்று முன்னாள் அரச ஊழியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கம், அரசி எலிசபெத் அவர்களின் தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் அவர்களால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

செல்வந்தர்களின் விழாத் தயாரிப்புகளும், கொண்டாட்டங்களும் வேறு. அதேநேரம், இவ்விழாவை பல்வேறு காரணங்களால் சிறப்பாக, ஏன் கொண்டாட இயலாமலே இருப்போரை, இவ்விழா நாள்களில் நினைவுகூர்வோம். இறைமகன் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதராகப் பிறந்த மாபெரும் நிகழ்வைக்  கொண்டாடுவதற்காக டிசம்பர் முதல் தேதியே, கடைகளில், பள்ளிகளில், வீடுகளில் விண்மீனைத் தொங்கவிட்டு, இது கிறிஸ்மஸ் மாதம் என்று அறிவிக்கிறோம். வீடுகளை ஒட்டடை அடித்து, கழுவிச் சுத்தம் செய்து, புது ஆடைகள் வாங்குகிறோம், பல்வேறு இனிப்புகள் செய்து உற்றாரோடு பகிர்ந்துகொள்கிறோம். கிறிஸ்மஸ் பாடல்களைப் பாடி மகிழ்கின்றோம். அதைப்போல, நம் இதயம் கடவுள் வாழும் ஆலயம் என்பதை உணர்ந்து, அதில் இறைமகன் பிறப்பதற்கு, நம் மனங்களில் கறைபடிந்துள்ள அழுக்குகளைக் கழுவி, தூசுகளை ஒட்டடை அடித்து, தூய்மைப்படுத்த வேண்டிய தருணம் இது. எனவே, கிறிஸ்மஸை அர்த்தமுள்ள முறையில், சிறப்பிக்க முதலில் நம் மனங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். முறிந்த உறவுகள் சரிசெய்யப்பட வேண்டும். புண்படுத்தியவர்களை மன்னிக்க வேண்டும். நம்மால் காயம்பட்ட உள்ளங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் அமைதியின் அரசராம் இயேசு நம் உள்ளங்களில் பிறப்பார். இவ்வேளையில், கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அண்மை தயாரிப்பு பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், அருள்பணி யூஜின், திருச்சி மறைமாவட்டம்.

வாரம் ஓர் அலசல்: கிறிஸ்மசை அர்த்தமுறையில் கொண்டாட..
23 December 2019, 15:19