தேடுதல்

கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும் - எசாயா 35:7 கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும் - எசாயா 35:7 

திருவருகைக்காலம் – 3ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது, இன்றைய உலகில் பலரது பழிதீர்க்கும் மந்திரம். இதற்கு நேர்மாறாக, பார்வையற்றோருக்குப் பார்வை வழங்கி, ஊனமுற்றோரை முழுமையாக்கி, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும், வழிகளும், உலகில் இருக்கத்தான் செய்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருவருகைக்காலம் – 3ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

இன்று, திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு. இதை, 'மகிழும் ஞாயிறு' (Gaudete Sunday) என்று கொண்டாட, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன், திருவருகைக்காலத்தின் மகிழும் ஞாயிறு, டிசம்பர் 14ம் தேதி சிறப்பிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள், சனிக்கிழமை, டிசம்பர் 13ம் தேதி, அர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அயிரஸ் நகரில், இயேசு சபை இளம்துறவி ஒருவர், அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்றார்.

1969ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி, அருள்பணியாளராக தன் பணிவாழ்வைத் துவங்கிய அவர், 1973ம் ஆண்டு முதல் 79ம் ஆண்டு முடிய, அர்ஜென்டீனா இயேசு சபையின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, அவர், ஆயர், பேராயர், கர்தினால் என, படிப்படியாகப் பொறுப்புக்களை ஏற்று, இறுதியில், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, பிரான்சிஸ் என்ற பெயருடன், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் அருள்பணியாளராக 50 ஆண்டுகளையும், ஆயராக, 27 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளார். டிசம்பர் 17, வருகிற செவ்வாயன்று, தன் உலக வாழ்வில், 83 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இறைவன் அவருக்கு நல்ல உடல் நலத்தையும், அவரது தலைமைப்பணிவாழ்வில் நிறைவையும், துணிவையும் வழங்க, நாம் செபிப்போம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அருள்பணித்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த, டிசம்பர் 13, இவ்வெள்ளியன்று, ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில், ஐ.நா.அவையின் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு - COP 25 நிறைவுக்கு வந்தது.

இக்கருத்தரங்கு துவங்குவதற்கு முந்தின நாள், ஐ.நா.அவையின் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், பருவநிலை மாற்றத்தால் நாம் சந்திக்கவிருக்கும் ஆபத்துக்களைக் குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்: "பருவநிலை மாற்றத்தைத் தடுக்க, புவி வெப்பமயமாதலைத் தடுக்க, உலக அரசுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் மிக, மிகக்குறைவு. புவி வெப்பமயமாவதால் விளையும் ஆபத்துக்களிலிருந்து மீளமுடியாத நிலையை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்" என்பது அவர் விடுத்த எச்சரிக்கை.

இதே எச்சரிக்கையை, மத்ரித் நகரிலுள்ள புகழ்பெற்ற பிராதோ (Prado) அருங்காட்சியகம், ஓவியங்களாக வடித்து, இக்கருத்தரங்கு நடைபெற்ற நேரத்தில் கண்காட்சியாக அமைத்திருந்தது. புவியின் வெப்பநிலையில் மாற்றம் ஏதுமற்ற 0°C காலத்தில், அதாவது, தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட நான்கு புகழ்பெற்ற ஓவியங்களை, " கூடுதலான 1.5°C, அனைத்தையும் மாற்றுகிறது" (+1.5°C Lo Cambia Todo - +1.5°C Changes Everything) என்ற தலைப்புடன், ‘டிஜிட்டல்’ மாற்றங்கள் செய்து, ‘ஒரிஜினல்’ ஓவியத்தையும், மாற்றம் செய்யப்பட்ட ஓவியத்தையும் பிராதோ அருங்காட்சியகம், இக்கண்காட்சியில், அருகருகே வைத்திருந்தது.

பருவநிலை மாற்றத்தால், கடல் நீர் மட்டம் உயருதல், நதிகள் வறண்டு பாலை நிலமாக மாறுதல், உலகெங்கும் கடும் பனிக்காலம் பரவுதல், கடல்வாழ் உயிரினங்கள் மடிதல் என்ற ஆபத்துக்களைச் சித்திரிக்கும்வண்ணம் நான்கு ஓவியங்களும் டிஜிட்டல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

புவியின் வெப்ப நிலை 1.5°C கூடுவது, 'அனைத்தையும் மாற்றுகிறது' என்ற எச்சரிக்கையுடன் மாற்றம் செய்யப்பட்டிருந்த ஓவியங்களைக் காணும்போது, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை பிறப்பதற்குப்பதில், விரக்தியே நம்மை நிறைக்கிறது. இதற்கு மாறாக, 'அனைத்தும் மாறிவிட்டன' என்று மனம் தளர்ந்து போயிருந்த இஸ்ரேல் மக்களுக்கு, இறைவாக்கினர் எசாயா, எதிர்காலத்தைப்பற்றிய அழகிய மாற்றங்களைக் கூறுகிறார். ஓவியங்களாக அல்ல, நம்பிக்கையும், மகிழ்வும் கலந்து, எசாயா, சொற்களில் வடித்துள்ள கனவுகளை, இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம்: அந்நாள்களில், பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்… (இறைவாக்கினர் எசாயா 35: 1-2)

இறைவாக்கினரின் இக்கூற்றைக் கேட்கும்போது, “கொஞ்சம் நிறுத்துங்கள். கட்டுக்கடங்காது செல்லும் உங்கள் கற்பனைக்கு, தயவுசெய்து, கடிவாளம் போடுங்கள்” என்று இறைவாக்கினர் எசாயாவின் கனவுகளை கட்டுப்படுத்தத் தோன்றுகிறது.

அற்புதம் என்ற பெயரில், அபத்தமான கற்பனைகளை எப்படி ஏற்றுக்கொள்வது? பாலை நிலம், லீலி மலர்களுடன் பூத்துக் குலுங்கும் என்று, இயற்கைக்கு முரணானவற்றைக் கூறுவது, கொஞ்சம் 'ஓவர்' தானே...

இறைவாக்கினரின் கூற்றுக்கு, நாம், இத்தகைய மறுப்பு சொல்வதற்கு காரணம் என்ன? எந்த மனநிலை இப்படி நம்மைப் பேசவைக்கிறது என்பதைச் சிந்திப்பது நல்லது. வாழ்வின் எதார்த்தங்களைப் பார்த்துப் பார்த்து, பயந்து, பயந்து, அடுத்த அடி எடுத்து வைத்தால் அடிபடுவோமோ என்ற அச்சத்தில், அனைத்தையும் கணக்குப் பார்க்கும் ‘practical’ சிந்தனை - நடைமுறைக்கு ஏற்றவைகளை மட்டும் நாள்தோறும் எண்ணிப்பார்க்கும் சிந்தனை - இதுபோன்றக் மறுப்புகளை எழுப்புகிறது.

நடைமுறைக்கு ஏற்றவைகளை மட்டும் நாள்தோறும் எண்ணிவந்தால்... ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு எண்ணத்துக்கும், நாம் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தால்... உலகில், கணக்குகள் எழுதப்பட்ட நூல்கள் மட்டுமே நிறைந்திருக்கும். கனவுகளைச் சொல்லும் கவிதை நூல்கள் இருக்காது. மனித சமுதாயத்தில் ஆயிரம் பேர் கணக்கெழுதியபோது, ஓரிருவர் கவிதை எழுதியதால்தான், இவ்வுலகம் இன்னும் ஓரளவு அழகுடன் சுழன்று வருகிறது.

அண்மையில், டிசம்பர் 11ம் தேதி, மாபெரும் கவிஞர் ஒருவரின் பிறந்தநாளை நினைவுகூர்ந்தோம். ஆம், 1882ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி, மகாகவி பாரதியார் பிறந்தார். அவர் பிறந்து 137 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் பல நூறு ஆண்டுகள் சென்றாலும், துணிவு மிகுந்த அவரது கவிதைகள், மனித சமுதாயத்தில், நேர்மறையான அதிர்வலைகளை உருவாக்கியவண்ணம் உள்ளன.

ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலும், வறுமையின் கோரப்பிடியிலும் சிக்கித்தவித்த பாரதியார், விடுதலைக் கனவுகளை விதைத்துச் சென்றார். ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாம் பெறவேண்டிய அரசியல் விடுதலையைப் பற்றி மட்டும் அவர் பேசவில்லை. சாதியத் தளைகள், ஆண்-பெண் என்ற வேற்றுமைத் தளைகள் என, அனைத்தையும் உடைத்து, விடுதலை பெறவேண்டும் என்ற கனவையும், இயற்கை வளங்களைச் சரிவர பராமரித்து, நாட்டின் வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் கனவையும் கண்டவர், பாரதியார். அவரைப்பற்றி இன்று பேசுவதற்கு, அண்மையில் நாம் சிறப்பித்த அவரது பிறந்தநாள் மட்டும் காரணம் அல்ல; இன்றைய ஞாயிறு வழிபாட்டின் நாயகனாக விளங்கும் திருமுழுக்கு யோவானை, பாரதியார் நினைவுபடுத்துகிறார் என்பது, மற்றொரு காரணம்.

தான் வாழ்ந்தது கடினமான ஒரு வாழ்வு என்றாலும், தனக்கு அடுத்தத் தலைமுறை, விடுதலை பெற்று, தலைநிமிர்ந்து வாழும் என்ற நம்பிக்கையுடன், கவிதைகளை உருவாக்கியவர் பாரதியார். பாரதி போலவே, தன் வாழ்வில் துன்பங்களைத் தாங்கினாலும், மக்களுக்கு நம்பிக்கை செய்தியை வழங்கியவர், திருமுழுக்கு யோவான்.

இவரைக் குறித்து இன்றைய நற்செய்தியில் இயேசு பேசும்போது, யோவான் வாழ்ந்த கடினமான வாழ்வை நினைவுபடுத்துகிறார். உண்மையான இறைவாக்கினர்கள், மெல்லிய ஆடை அணிந்து, மாளிகையில் வாழ்பவர்கள் அல்ல... பாலை நிலத்தில் பாறைகளோடு பாறையாய் மாறி, இயற்கையின் கருணைக்கு விடப்பட்டவர்கள் என்பதை இயேசு நினைவுபடுத்துகிறார்.

"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" (மத்தேயு 11:11) என்று இயேசுவால் புகழப்பட்டவர், திருமுழுக்கு யோவான். பாலை நிலத்தில் ஒலித்த யோவானின் குரலைக் கேட்க மக்கள் ஓடிச் சென்றனர். அவர்களை வரவேற்று, நம்பிக்கையையும், நற்செய்தியையும் அவர்களுக்கு வழங்கிய யோவான், அதே வேளையில், மதத் தலைவர்களையும், உரோமைய அரசையும், வன்மையாகக் கண்டித்தார். கதி கலங்கிய மதத்தலைவர்கள், ஏரோதின் துணையோடு, அவரைச் சிறையில் அடைத்தனர். யோவானின் உடல் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவரது மனம், மக்களின் விடுதலையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அந்த விடுதலை, இயேசுவின் வழியே வருமா என்ற கேள்வியை, “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” (மத்தேயு 11:3) என்று, ஏக்கத்துடன் கேட்கிறார், இன்றைய நற்செய்தியில்

யோவானின் கேள்வியும், இதற்கு இயேசு தந்த பதிலும், ஒரு சில தெளிவுகளை, ஒரு சில வாழ்க்கைப் பாடங்களை நமக்குத் தருகின்றன. உலகின் செம்மறி என்று மக்களுக்கு தான் சுட்டிக்காட்டிய இயேசு, தான் சிறையில் அடைபட்ட பின், முழு வீச்சுடன், பணியில் இறங்கியிருப்பார்; மதத்தலைவர்களையும், உரோமைய அரசையும், இந்நேரம், கதிகலங்கச் செய்திருப்பார் என்பது, யோவானின் எதிர்பார்ப்பாக இருந்தது.

யோவானின் எதிர்பார்ப்புகளும், தனது கண்ணோட்டமும், வேறுபட்டிருந்தன என்பதைச் சொல்ல இயேசு தயங்கவில்லை. யோவான் எதிர்பார்த்த புரட்சி, ஆள்பவர்களை விரட்டியடித்து, ஆட்சியைப் பிடித்து, மக்கள் வாழ்வை மாற்றுவது என்ற வரிசையில் அமைந்திருந்தது. இயேசுவின் புரட்சி, இதற்கு நேர்மாறான, தலைகீழான புரட்சி. இந்தப் புரட்சி, மக்கள், தங்கள் வாழ்வை மாற்றுவதிலிருந்து ஆரம்பமாகிறது. இந்த புரட்சியைக் குறித்து இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவும் கூறியுள்ளார்: திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார். (எசாயா 35: 4) என்று எசாயா முழங்குகிறார்.

எசாயாவின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், இறைவன் எப்படி பழிதீர்க்க வருவார் என்ற விவரம், அடுத்த வரிகளில் அடங்கியிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன், தொடர்ந்து வாசித்தால், பெருத்த ஏமாற்றம் அங்கு நமக்குக் காத்திருக்கும். பழிதீர்ப்பது என்ற வார்த்தையைக் கேட்டதும், நம் மனங்களில் ஓடும், வழக்கமான, குறுகிய எண்ணங்களைக் கொண்டு வாசிப்பதால் வரும் ஏமாற்றம் இது. அடுத்த வரிகளில் எசாயா கூறுவது இதுதான்:

அப்போது – அதாவது, ஆண்டவர் பழிதீர்க்க வரும்போது - பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; ... அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்;... துன்பமும் துயரமும் பறந்தோடும். (எசாயா 35: 5-6அ, 10) ‘பழிதீர்த்தல்’ என்ற சொல்லுக்கு இறைவன் தரும் இலக்கணம் இதுதான்.

பழிதீர்ப்பது என்றால், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற போக்கில், கணக்கு தீர்ப்பது என்பது ஒரு பொருள். ஆனால், பழிதீர்ப்பது என்றால் பழியை, குறையை, தீர்ப்பது என்றும் பொருள் கொள்ளலாம், இல்லையா? அவ்விதம், பழியைத் தீர்க்க, பழியைத் துடைக்க வந்தவர் இயேசு.

மதத் தலைவர்களையும், அதிகார வர்க்கத்தையும் பழிதீர்க்காமல் இருந்த இயேசுவிடம் “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேள்விகள் எழுப்பிய யோவானுக்கு இயேசு கூறிய பதில் இதுதான்: “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. (மத்தேயு நற்செய்தி 11: 4-5)

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது, இன்றைய உலகில் பலரது பழிதீர்க்கும் மந்திரம். இதற்கு நேர்மாறாக, பார்வையற்றோருக்குப் பார்வை வழங்கி, ஊனமுற்றோரை முழுமையாக்கி, பழியைத் தீர்க்கும் மந்திரங்களும், வழிகளும், உலகில் இருக்கத்தான் செய்கின்றன. கண்களையும், மனதையும் திறந்து, இவற்றைக் கேட்கவும், பார்க்கவும் நாம் பழக வேண்டும் என்று, இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

அளந்து, கணக்குப் பார்த்து, அன்பு காட்டும் பலர் வாழும் இவ்வுலகில், பயனேதும் கருதாமல், கணக்குப் பார்க்காமல், கவிதையாக, நல்ல கனவாக வாழ்ந்த பாரதியார், எசாயா, யோவான், போன்ற இறைவாக்கினர்கள் தொடர்ந்து நம்மிடையே வாழவேண்டும் என்றும், அத்தகைய இறைவாக்கினர்களாக நாம் மாறவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2019, 14:51