தேடுதல்

Vatican News
லெபனான் நாட்டில் பெய்ரூட் நகர் சதுக்கத்தில் வறியோருக்கும், போராளிகளுக்கும் கிறிஸ்மஸ் விருந்து லெபனான் நாட்டில் பெய்ரூட் நகர் சதுக்கத்தில் வறியோருக்கும், போராளிகளுக்கும் கிறிஸ்மஸ் விருந்து  (ANSA)

லெபனானில் புதிய அரசு விரைவில் உருவாக்கப்பட அழைப்பு

ஆளும் வர்க்கம் தனது பொறுப்புணர்வு பற்றி நினைத்துப் பார்க்காமல், தனது மீட்பை மட்டுமே நினைக்கின்றது - லெபனான் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Élias Audi

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டில், இந்த டிசம்பர் மாதத்தில் அரசின் ஊழலை எதிர்த்து இடம்பெறும் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள் போன்றவை, பதட்டநிலைகளை அதிகரித்துள்ளன மற்றும், புதிய அரசு விரைவில் உருவாக்கப்பட அழைப்பு விடுக்கின்றன என்று, கிறிஸ்மஸ் திருவழிபாடுகளில், அந்நாட்டு முதுபெரும்தந்தையரும் ஆயர்களும் தங்களின் மறையுரைகளில் எடுத்துரைத்தனர்.

அரசுக்கு எதிரான மக்களின் கிளர்ச்சிகளுக்கு ஆதரவு அளித்துள்ள லெபனான் திருஅவைத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தங்களின் கடமைகளை உணர்ந்து செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

Bkerké நகரில் அன்னை மரியா ஆலயத்தில் கிறிஸ்மஸ் திருப்பலி நிறைவேற்றிய, மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Béchara Raï அவர்கள், தேசிய அளவில் திறமைமிக்க அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய புதிய செயல்திட்ட குழு விரைவில் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.

லெபனான் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும், சமுதாய நெருக்கடிகளை மீட்டெடுக்கும் பாதையை நோக்கி இக்குழு வழிநடத்திச் செல்லும் என்ற நம்பிக்கையையும், கர்தினால் Béchara Raï அவர்கள், தன் கிறிஸ்மஸ் மறையுரையில் தெரிவித்தார்

மேலும், பெய்ரூட் நகரின் புனித ஜார்ஜ் பேராலயத்தில் கிறிஸ்மஸ் திருவழிபாட்டை நிறைவேற்றிய, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Élias Audi அவர்கள், ஆளும் வர்க்கம் தனது பொறுப்புணர்வு பற்றி நினைத்துப் பார்க்காமல், தனது மீட்பை மட்டுமே நினைக்கின்றது என்று குறை கூறினார்.

மாரனைட் முதுபெரும்தந்தை கர்தினால் Béchara Raï அவர்கள் நிறைவேற்றிய கிறிஸ்மஸ் திருப்பலியில், Michel Aoun அவர்களும் பங்குபெற்றார். இவர், புதிய அரசு உருவாக்கத்தில் ஒத்துழைக்க வேண்டியவராவார். (AsiaNews / OLJ)

27 December 2019, 15:34