தேடுதல்

Vatican News
ஹெயிட்டி நாட்டின் வீடற்றோர் - கோப்புப் படம் ஹெயிட்டி நாட்டின் வீடற்றோர் - கோப்புப் படம்  (AFP or licensors)

ஹெயிட்டி ஆயர்களின் திருவருகைக்காலச் செய்தி

ஹெயிட்டி நாட்டில், ஒரு சிலர், அளவுக்கு அதிகமான செல்வத்தில் வாழும்போது, அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள், மிகக் கேவலமான வறுமையில் வாழ்வது, ஏற்றுக்கொள்ள இயலாத அநீதி - ஹெயிட்டி ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹெயிட்டி அரசு தன்னையே சுய ஆய்வு செய்யவேண்டும் என்றும், மக்களின் நலனை மையமாகக் கொண்டு, அரசியல் முடிவுகள் எடுக்கவேண்டும் என்றும், அந்நாட்டு ஆயர்கள், தங்கள் திருவருகைக்காலச் செய்தியில் கூறியுள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஹெயிட்டி நாட்டில், ஒரு சிலர், அளவுக்கு அதிகமான செல்வத்தில் வாழும்போது, அந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மிகக் கேவலமான வறுமையில் வாழ்வது, ஏற்றுக்கொள்ள இயலாத அநீதி என்று, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

அந்நாட்டு அரசுத் தலைவர் Jovenel Moïse அவர்கள் பதவி விலகவேண்டும் என்ற போராட்டம் கடந்த இரு மாதங்களாக நடைபெறுகிறது என்றும், இந்தப் போராட்டத்தில் உருவான வன்முறைகளில், இதுவரை 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், பீதேஸ் செய்தி கூறுகிறது.

இந்தப் போராட்டத்தால் உயிரிழந்தோர், மற்றும் காயமுற்றோர் அனைவரோடும் தங்கள் அருகாமையை வெளியிட்டுள்ள ஹெயிட்டி ஆயர்கள், ஒரு புதிய நாட்டை உருவாக்க, மாற்றங்கள் தேவை என்று தங்கள் செய்தியில் கூறியுள்ளனர்.

அனைத்துவிதமான அடிமைத்தனத்திலிருந்தும் மனிதர்களை விடுவிக்க, மனு உருவெடுத்த இறைமகனின் வருகையை சிறப்பிக்கவிருக்கும் இவ்வேளையில், ஹெயிட்டி நாட்டில் நிலவும் அடிமை முறைகள் ஒழிக்கப்பட, ஆயர்கள், தங்கள் திருவருகைக்காலச் செய்தி வழியே அழைப்பு விடுத்துள்ளனர். (Fides)

04 December 2019, 14:56