தேடுதல்

Vatican News
திருத்தந்தை 15ம் பெனடிக்ட் திருத்தந்தை 15ம் பெனடிக்ட் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-3

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், முதலாம் உலகப் போருக்கு எதிராக கண்டனம் தெரிவித்த ஒரே உலகத் தலைவர் ஆவார். இவர் முதலாம் உலகப் போரை, சமுதாய, கலாச்சார வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருந்த ‘ஐரோப்பாவின் தற்கொலை’ என அழைத்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகம் தழுவிய முறையில், பெரும்பாலும் ஐரோப்பாவில், 1914ம் ஆண்டு சூலை 28ம் தேதி முதல், 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வரை இடம்பெற்ற போர், முதலாம் உலகப் போர் அல்லது பெரிய போர் என்று அழைக்கப்படுகிறது. உலக வரைபடத்தை மாற்றியமைத்த இந்தப் போர், உலகம் அதுவரை கண்டிராத பேரழிவையும் கொணர்ந்தது. இதன் விளைவாக, நூற்றாண்டுகால வல்லரசுகள் உதிர்ந்து சரிந்தன. போஸ்னியா-எர்செகொவினாவின் சரயேவோவில் (Sarajevo) வாழ்ந்த, யூகோஸ்லேவியாவின் விடுதலைக்காக ஆயுதமேந்திய விடுதலைப் போராளி Gavrilo Princip என்பவர், 1914ம் ஆண்டு சூன் மாதம் 28ம் தேதி ஆஸ்ட்ரிய பேரரசரின் மகனாகிய வாரிசு இளவரசர் Franz Ferdinand மற்றும், அவரது துணைவியார் சோஃபியாவைச் சுட்டுக்கொன்றதையடுத்து, இப்போர் தொடங்கியது. உண்மையில், அதற்கு முன்னரே ஐரோப்பிய நாடுகள் போருக்கு தயாராக இருந்துள்ளன என்று சொல்லப்படுகின்றது. இதில் ஆறு இலட்சம் ஐரோப்பிய படைவீரர்கள், ஏறத்தாழ 15 இலட்சம் இந்திய படை வீரர்கள் உட்பட ஏழு இலட்சத்திற்கு அதிகமான படைவீரர்கள் ஈடுபட்டனர். புதிய தொழில்நுட்பங்களின் வெளிப்பாடுகளாக, இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தர கனரகப் பீரங்கிகள், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிக்கப்பல்கள் போன்றவை, இந்தப் போரில்தான் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டன. இப்போரில் 74,000 இந்திய படை வீரர்கள் உட்பட, உலக அளவில், ஐந்து கோடி முதல், பத்து கோடிப் பேர் வரை உயிரிழந்தனர்.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட்

முதலாம் உலகப் போர் தொடங்கி ஒரு மாதம்கூட ஆகியிருக்காதவேளை, புனித திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி இறைவனடி சேர்ந்தார். இவருக்குப் பின், அதே ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், திருத்தந்தை 15ம் பெனடிக்ட். ஜாக்கோமோ பவ்லோ ஜொவானி பத்திஸ்தா தெல்லா கியேசா (21 நவ.1854 – 22 சன.1922) என்ற இயற்பெயரைக் கொண்ட திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், இத்தாலியின் ஜெனோவா நகரில், 1854ம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக வளர்ந்த இவர், தனது 21வது வயதில் ஜெனோவா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அருள்பணியாளராக ஆக வேண்டும் என்ற ஆவலில், உரோம் நகர் வந்து இறையியல் கற்று, 1878ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவர், தனது வாழ்வின் பெரும் பகுதியை, வத்திக்கானின் தூதரகப் பணிகளில் செலவிட்டார். இவர், 1901ம் ஆண்டு திருப்பீட நேரடிப் பொதுச் செயலராகவும், 1907ம் ஆண்டு இத்தாலியின் பொலோஞ்ஞா உயர்மறைமாவட்ட பேராயராகவும் நியமிக்கப்பட்டார். பேராயராகப் பணியாற்றிய காலங்களில், திருஅவை சமநிலை காக்கவேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார். அமைதியை ஊக்குவிப்பதிலும், மக்களின் துன்பங்களை அகற்றுவதிலும் கவனம் செலுத்தினார். ஆனால் அமைதிக்காக இவர் மேற்கொண்ட முயற்சிகள், முதலாம் உலகப் போருக்கு முன்னரே பல்வேறு தடைகளை எதிர்கொண்டன.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், பேராயராகப் பணியாற்றிய காலத்திலேயே, இத்தாலிய அரசுக்கும், திருஅவைக்கும் இடையே 1870ம் ஆண்டுவரை நிலவிய மோதல்கள் தீர்வு காணப்படாமல் இருந்தன. ஆர்த்தடாக்ஸ் சபை விவகாரத்தால் வத்திக்கானுக்கும், இரஷ்யாவுக்கும் இடையே பதட்டநிலை புகைந்துகொண்டே இருந்தது. 1870ம் ஆண்டில் ஆஸ்ட்ரியா உட்பட நாடுகள் ஜெர்மன் பேரரசுடன் இணைந்தது, ஐரோப்பாவில் பிரிந்த கிறிஸ்தவ சபையின் ஆதிக்கத்தை வலுப்படுத்தியது. இதில் ஆஸ்ட்ரிய கத்தோலிக்கர் துன்பத்திற்குள்ளாகினர். இந்த இணைப்பு, திருப்பீடத்தின் செல்வாக்கைக் குறைத்தது. மேலும், 1872ம் ஆண்டு முதல், 1878ம் ஆண்டு வரை, புருஸ்ஸியா (ஜெர்மன்) பேரரசுக்கும், உரோமன் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே மோதல்கள் நிலவின. இப்பிரச்சனை Kulturkampf என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் அது, திருஅவை கல்வி நிறுவனங்கள் மற்றும், தலத்திருஅவைக்கு அதிகாரிகளை நியமனம் சார்ந்த பிரச்சனை. இப்பிரச்சனையில், துறவு சபைகள் தடை செய்யப்பட்டன. அரசு வழங்கிய மானியம், திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்டது. பள்ளிகளிலிருந்து மறைக்கல்வி ஆசிரியர்கள் நீக்கப்பட்டனர். அருள்பணியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அருள்பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றது. குருத்துவ கல்லூரிகளில் பாதி மூடப்பட்டன. பிரான்சில், 1905ம் ஆண்டில் திருஅவையும், அரசும் தனித்தியங்கத் தொடங்கியதிலிருந்து திருஅவை சொத்துரிமையை இழந்தது.

அமைதியின் திருத்தந்தை

பொலோஞ்ஞா பேராயராகிய ஜாக்கோமோ தெல்லா கியேசா அவர்கள், கர்தினாலாக உயர்த்தப்பட்டு நான்கு மாதங்களே ஆகியிருந்தவேளை, 1914ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி, 59வது வயதில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 15ம் பெனடிக்ட் என்ற பெயரையும் அவர் தெரிவுசெய்தார். இவரது பாப்பிறைப் பணிக்காலம் முழுவதும், அதாவது 1922ம் ஆண்டு வரை, பெரும்பாலும் முதல் உலகப் போராலும், ஐரோப்பாவில் அந்தப் போரின் அரசியல், சமுதாய, மற்றும், மனிதாபிமான எதிர்விளைவுகளாலும் நிறைந்ததாய் இருந்தது. இவர், திருஅவையின் தலைமைப்பணியை ஏற்றவுடன், இப்போரில் திருப்பீடம் நடுநிலை வகிக்கும் என்பதை உடனடியாக அறிவித்தார். 1914ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி, கிறிஸ்மஸ் போர் நிறுத்தத்திற்கு உருக்கமாக அழைப்பு விடுத்தார். கிறிஸ்மஸ் நள்ளிரவில் தூதர்கள் பாடுவதைக் கேட்பதற்காகவாவது ஆயுத சப்தங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றார். இவரது வேண்டுகோளை பிரெஞ்ச் படைத்தலைவர் Joseph Joffre என்பவர் கிண்டலடித்தார். இவரது கிறிஸ்மஸ் போர்நிறுத்த விண்ணப்பம் நிறைவேற்றப்படாமலேயே, 1914ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவில், கவலையோடு திருப்பலி நிறைவேற்றினார். 1916, 1917ம் ஆண்டுகளில் அமைதிக்கு இடைநிலை வகிப்பதற்கு முயற்சித்த இவர், ‘அமைதியின் திருத்தந்தை’ என அழைக்கப்படுகிறார். முதலாம் உலகப் போருக்கு எதிராக கண்டனம் தெரிவித்த ஒரே உலகத் தலைவர், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் ஆவார். இவர் முதலாம் உலகப் போரை, சமுதாய, கலாச்சார வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருந்த ‘ஐரோப்பாவின் தற்கொலை’ என அழைத்தார்.

18 December 2019, 14:27