தேடுதல்

Vatican News
COP 25 பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஓர் அமர்வு COP 25 பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஓர் அமர்வு  (AFP OR LICENSORS)

மக்களுக்கும், அரசுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி

COP 25 மாநாடு நடைபெற்ற வேளையில், வர்த்தக உலகம் முன்வைத்த பரிந்துரைகளுடன், கத்தோலிக்க முன்னேற்ற அமைப்புக்கள் போட்டி போடவேண்டிய நிலை எழுந்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்கள் உரிமைகளுக்காக தெருவில் இறங்கிப் போராடும் மக்களுக்கும், அரசுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று கத்தோலிக்க முன்னேற்ற அமைப்புக்களின் தலைமை ஆலோசகர், Chiara Martinelli அவர்கள், CNS கத்தோலிக்கச் செய்தியிடம் கூறினார்.

மத்ரித் நகரில், டிசம்பர் 15, இஞ்ஞாயிறன்று நிறைவுற்ற COP 25 பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டுக்கு, தாங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வந்ததாகவும், இந்த மாநாட்டின் முடிவுகள் மிகுந்த ஏமாற்றம் தருகிறதெனவும் மார்த்தினெல்லி அவர்கள், எடுத்துரைத்தார்.

அண்மைய மாதங்களில், பூமிக்கோளத்தையும், சுற்றுச்சூழலையும் காக்க இளையோர் மேற்கொண்டு வந்த போராட்டங்கள், COP 25 மாநாட்டில் பங்கேற்றவர்களை பாதித்திருக்கும் என்று எண்ணியிருந்த வேளையில், இத்தகைய ஒரு ஏமாற்றம் நிகழ்ந்துள்ளது என்று, மார்த்தினெல்லி அவர்கள் கூறினார்.

COP 25 மாநாடு நடைபெற்ற வேளையில், வர்த்தக உலகம் முன்வைத்த பரிந்துரைகளுடன், கத்தோலிக்க முன்னேற்ற அமைப்புக்கள் போட்டி போடவேண்டிய நிலை எழுந்தது என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட மார்த்தினெல்லி அவர்கள், 2020ம் ஆண்டிற்குள், அரசுகளும், வர்த்தக நிறுவனங்களும் மக்களின், குறிப்பாக, இளையோரின் குரலுக்கு செவிசாய்ப்பார்கள் என்று நம்புவதாக, மார்த்தினெல்லி அவர்கள் கூறினார்.

COP 25 மாநாட்டில் கத்தோலிக்கர்களின் பங்கேற்பும், பரிந்துரைகளும் சிறந்த முறையில் அமைந்திருந்தது என்று கூறிய மத்ரித் பேராயர், கர்தினால் Carlos Osoro Sierra அவர்கள், இது வருத்தப்பட வேண்டிய காலம் அல்ல, மாறாக, நம்பிக்கை கொள்ளும் காலம் என்று கூறினார். (CNS)

19 December 2019, 16:42