தேடுதல்

Vatican News
குடியுரிமை திருத்த சட்டம் வரைவுத் தொகுப்புக்கு எதிராக சென்னையில் பேரணி குடியுரிமை திருத்த சட்டம் வரைவுத் தொகுப்புக்கு எதிராக சென்னையில் பேரணி  

குடியுரிமைக்கு, மதம், அடிப்படைக் கூறாக இருக்கக் கூடாது

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் வரைவுத் தொகுப்பு, திரும்பப் பெறப்படும் என இந்திய கத்தோலிக்கத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒரு நாட்டின் குடியுரிமைக்கு, மதம், அடிப்படைக் கூறாக ஒருபோதும் இருக்கக் கூடாது, அதேநேரம், கருத்து முரண்பாடுகள் ஏற்படும் நேரங்களில், வன்முறை ஒரு தீர்வாக அமையக் கூடாது என்று, இந்திய கத்தோலிக்கத் திருஅவை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள, முஸ்லிம்களைத் தண்டிக்கும், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் வரைவுத் தொகுப்பு குறித்து டிசம்பர் 27, இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வரைவு தொகுப்பு, அனைத்து குடிமக்கள் மத்தியில், மாபெரும் கவலையை உருவாக்கியுள்ளது என்றும், இது சட்டமாக்கப்பட்டால், நாட்டைப் பெருமளவில் பாதிக்கும் என்றும், மும்பை பேராயரான, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இந்திய மக்கள், குறிப்பிட்ட மதங்களைச் சார்ந்தவர்களாகப் பிரியும் ஆபத்தையும் இந்த வரைவுத் தொகுப்பு முன்வைக்கின்றது என்றுரைத்துள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், குடியுரிமை திருத்த சட்டம் வரைவுத் தொகுப்பு, திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு, இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றவர்களுடன் உரையாடல் நடத்தவும், நீதி, சமத்துவம் மற்றும்,நேர்மையோடு ஓர் ஒப்பந்தத்திற்கு வரவும் வேண்டுமென கர்தினால் கிரேசியஸ் அவர்கள், வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வரைவுத் தொகுப்புக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, டிசம்பர் 9ம் தேதியிலிருந்து, இந்தியா எங்கும் இடம்பெற்றுவரும் போராட்டங்களில் கத்தோலிக்கத் தலைவர்களும் இணைந்துள்ளனர்.

இந்தியாவின் பலஇன மற்றும், பல்சமயப் பண்பின் பெயரில், பல்வேறு இந்துமத அறிவாளர்களும், இந்த குடியுரிமை திருத்த சட்டம் வரைவுத் தொகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் வரைவுத் தொகுப்பு, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு இந்த வரைவுத் தொகுப்பு அனுமதியளிக்கின்றது. இதில், முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. (AsiaNews)

28 December 2019, 15:38