தேடுதல்

Vatican News
ஹாங்காங் கர்தினால் ஜான் டாங். ஹாங்காங் கர்தினால் ஜான் டாங்.  

ஹாங்காங் அரசு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்

ஹாங்காங்கில், அரசு, காவல்துறை, மற்றும், மக்களுக்கு இடையே, ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை மீண்டும் உருவாக்கப்பட வேண்டியது அவசியம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்மஸ் அண்மித்துவரும்வேளை, ஹாங்காங் பகுதியை உலுக்கியுள்ள மற்றும், பிரித்துள்ள வன்முறையை நிறுத்துமாறு, ஹாங்காங் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், ஹாங்காங் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் ஜான் டாங்.

தனது கிறிஸ்மஸ் மேய்ப்புப்பணி மடலில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் டாங் அவர்கள், அரசு, காவல்துறை, மற்றும், மக்களுக்கு இடையே, ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை மீண்டும் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும், போராட்டதாரர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இடம்பெற்ற பல்வேறு வன்முறை மோதல்கள் குறித்து தனிப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், கர்தினால் டாங் அவர்கள், ஹாங்காங் அரசை விண்ணப்பித்துள்ளார்.

செல்வந்தர் மற்றும், ஏழைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்கும் வழிகளைத் தேடுமாறும் வலியுறுத்தியுள்ள கர்தினால் டாங் அவர்கள், மக்களாட்சி, சுதந்திரம் மற்றும், சட்ட விதிமுறையின் அடிப்படை விழுமியங்கள் ஹாங்காங்கில் எப்போதும் காக்கப்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

கர்தினால் இரஞ்சித் செய்தி

மேலும், இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், வீணான ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும், ஒன்றிப்பு மற்றும் பகிர்வை வலியுறுத்தும் கிறிஸ்மஸின் உண்மையான பொருளை கண்டுணருமாறும் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஏப்ரலில் உயிர்ப்பு ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் குடும்பங்களையும், நண்பர்களையும் இழந்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் முறையில், தேவையற்ற ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும், நாட்டின் ஆலயங்கள் பாதுகாக்கப்படுவதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுமாறு, இலங்கை கத்தோலிக்கரின் பெயரால் அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் கொழும்பு கர்தினால் இரஞ்சித் அவர்களின் கிறிஸ்மஸ் செய்தி கூறுகின்றது. (AsiaNews)

21 December 2019, 15:08