தேடுதல்

Vatican News
சரக்கு கப்பல்களில் பணியாற்றும் தொழிலாளிகள் சரக்கு கப்பல்களில் பணியாற்றும் தொழிலாளிகள்  (AFP or licensors)

கடல்சார் தொழிலாளர்களுக்கு கிறிஸ்மஸ் மகிழ்வை...

கடல்சார் தொழிலாளர்களுக்கு மேய்ப்புப்பணியாற்றும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, 59 நாடுகளில் 334 துறைமுகங்களில் 227 ஆன்மீக அருள்பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தங்கள் குடும்பங்களுடன் கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாட இயலாமல் பணியாற்றும், கப்பல் தொழிலாளர்களை மறவாமல், அவர்களுக்கு உதவியுள்ளது, கடல்சார் தொழிலாளர்களுக்கு மேய்ப்புப்பணியாற்றும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.  

டிசம்பர் 25ம் தேதியன்று, ஏறத்தாழ பத்து இலட்சம் பேர், கடலில் வர்த்தக கப்பல்களில் பணியாற்றினர். அதோடு, தங்களின் குடும்பங்களின் தேவைகளுக்கென மீன்பிடித் தொழிலிலும் பலர் ஈடுபட்டிருந்தனர்.

கிறிஸ்மஸ் பெருவிழாவன்று இத்தொழிலாளர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களுக்குப் பரிசுப்பொருள்களை வழங்கி, தேவையான மற்ற மேய்ப்புப்பணிகளை ஆற்றியுள்ள அந்த பிறரன்பு அமைப்பு, தொடர்ந்துவரும் விழா நாள்களிலும் உதவுவதற்குத் தயாராக உள்ளது.

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும், கடல்சார் தொழிலாளர் பலர் தனிமையை அனுபவிக்கின்றனர் என்று, இந்த கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது. இந்த அமைப்பு, 59 நாடுகளில் 334 துறைமுகங்களில் 227 ஆன்மீக அருள்பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. உலகளவில் இடம்பெறும் வர்த்தகத்தில், 95 விழுக்காடு, கடல்வழியாக இடம்பெறுகின்றது. 

27 December 2019, 15:30