தேடுதல்

Vatican News
சிரியாவில் கிறிஸ்தவர்கள் சிரியாவில் கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

மக்களின் வாழ்வை ஒளிர்விக்க வரும் கிறிஸ்து

மத்தியக் கிழக்குப் பகுதியில் இன்று நிலவும் பல்வேறு அநீதிகள், இயேசு இவ்வுலகில் தோன்றிய காலத்தில் இருந்ததைப்போலவே உள்ளது, குறிப்பாக, அன்று நிலவிய புலம்பெயர்தல் என்ற துயரம், இன்றும் தொடர்கிறது - ஆயர் Georges Abou Khazen

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தன் பிறப்பின் வழியே, கிறிஸ்து, இவ்வுலகிற்குக் கொணர்ந்த ஒளி, இன்றும், துயரங்களில் சிக்கியிருக்கும் மக்களின் வாழ்வை ஒளிர்விக்க வருகிறது என்று, சிரியாவின் இலத்தீன் வழிபாட்டு முறை அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Georges Abou Khazen அவர்கள் கூறியுள்ளார்.

சிரியாவின் அலெப்போ நகரில் பணியாற்றும் ஆயர் Khazen அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி வெளியிட்டுள்ள ஒரு மடலில், சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்களில் பலர், மத்தியக் கிழக்குப் பகுதியில் துன்புறும் கிறிஸ்தவர்களைக் குறித்த அக்கறை ஏதுமின்றி, தங்களுக்கு திருஅவையிடமிருந்து என்ன கிடைக்கும் என்பதில் குறியாக உள்ளனர் என்று கவலை தெரிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் இன்று நிலவும் பல்வேறு அநீதிகள், இயேசு இவ்வுலகில் தோன்றிய காலத்தில் இருந்ததைப்போலவே உள்ளது என்பதை, தன் மடலில் சுட்டிக்காட்டும் ஆயர் Khazen அவர்கள், குறிப்பாக, அன்று நிலவிய புலம்பெயர்தல் என்ற துயரம், இன்றும் தொடர்வதை, குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

துயரங்கள், ஐயங்கள், போராட்டங்கள் என்ற பல இருள் நிறைந்த அம்சங்கள் பரவியிருந்த வேளையில், கிறிஸ்து என்ற ஒளி, அந்த இருளை நீக்கவும், மக்களின் உள்ளங்களில் நம்பிக்கையையும், அடுத்தவரைக் குறித்த அக்கறையையும் வளர்க்கவும் இவ்வுலகிற்கு வந்தார் என்று ஆயர் Khazen அவர்கள், தன் மடலில் எடுத்துரைத்தார்.

மீட்பரின் வருகையைக் குறித்து, வானதூதர்கள், தனிப்பட்ட ஒருவரிடம் கூறாமல், இடையர்கள் என்ற குழுமத்திற்கு அறிவித்தனர் என்பதை இம்மடலில் குறிப்பிடும் ஆயர் Khazen அவர்கள், சிரியாவில் குழுமம் என்ற உணர்வு குறைந்து வருவதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

துவக்க கால கிறிஸ்தவர்களிடையே நிலவிய அன்பும், சமத்துவமும், அவர்களை, வேற்றினத்தவர் நடுவே அடையாளப்படுத்தின என்பதை தன் கிறிஸ்மஸ் மடலில் குறிப்பிடும் ஆயர் Khazen அவர்கள், அத்தகைய பரிவும், அன்பும், இன்று, சிரியா கிறிஸ்தவர்களிடையே தேவை என்று அழைப்பு விடுத்துள்ளார். (Fides)

20 December 2019, 16:16