தேடுதல்

Vatican News
வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

கிறிஸ்மஸின்போது பாதுகாப்பு கேட்கும் பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள்

இந்த கிறிஸ்மஸ் காலத்தில் சிறைக்கைதிகளுடன் பணியாற்ற அனுமதி வேண்டி, பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள் விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்ட காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என பங்களாதேஷ் கிறிஸ்தவத் தலைவர்கள், அந்நாட்டு உள்துறை அமைச்சரைச் சந்தித்து, விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளில், சிறப்பு பாதுகாப்பு வழங்குவதுடன், தடையற்ற மின்சாரமும் வழங்கப்பட வேண்டும் என, பங்களாதேஷ் கிறிஸ்தவ இயக்கத்தின் தலைவர் நிர்மல் ரொசாரியோ அவர்களுடன் சென்ற குழு, உள்துறை அமைச்சர் Asaduzzaman Khan Kamal அவர்களைச் சந்தித்து விண்ணப்பித்தது.

இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக்கொண்ட பங்களாதேசில், அவ்வப்போது கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது பதிவாகியுள்ள நிலையில், இவ்வாண்டு சனவரி முதல் செப்டம்பர் வரையில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அந்நாட்டில், சிறுபான்மையினருக்கு எதிராக, 40 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 47 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இம்மாதம் 24 முதல் 26 வரையுள்ள கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களையொட்டியும், கிறிஸ்து பிறப்பு விழாவைத் தொடர்ந்துவரும் பங்களாதேஷ் கிறிஸ்தவர்களின் திருமணக் காலத்தையொட்டியும் பாதுகாப்பு தேவைப்படுவதாக, அமைச்சரிடம் ரொசாரியோ அவர்கள் தெரிவித்தார்.

இந்த கிறிஸ்மஸ் காலத்தில் சிறைக்கைதிகளுடன் பணியாற்ற அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் விண்ணப்பம் ஒன்று இச்சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டது.

பங்களாதேஷ் நாடு முழுவதும் ஏறக்குறைய 3500 கிறிஸ்தவ கோவில்கள் உள்ளன, இவற்றில் 90 கோவில்கள், தலைநகர் டாக்காவில் உள்ளன.

16 December 2019, 15:41