தேடுதல்

Vatican News
டிசம்பர் 8, முதல், 10, முடிய பெர்த் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய இளையோர் மாநாட்டின் இலச்சனை டிசம்பர் 8, முதல், 10, முடிய பெர்த் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய இளையோர் மாநாட்டின் இலச்சனை 

ஆஸ்திரேலிய இளையோர் மாநாட்டில் பெர்த் பேராயர்

பழக்கப்பட்ட தன் வழிகளில் செல்லும் திருஅவையை, இன்னும் புதிய, இதுவரை செல்லாத பாதைகளில் அழைத்துச்செல்ல இளையோரின் துணிவு நிறைந்த முயற்சிகள் தேவை - பேராயர் கொஸ்தெல்லோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"என் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பு" என்று, இறைவன், 800 ஆண்டுகளுக்கு முன், அசிசி நகர் புனித பிரான்சிஸுக்கு அளித்த ஆணையை, இன்று, திருத்தந்தை பிரான்சிஸ் வழியே, இறைவன் இளையோருக்கு அளித்து வருகிறார் என்று, ஆஸ்திரேலியாவின் பெர்த் பேராயர், டிமத்தி கொஸ்தெல்லோ (Timothy Costelloe) அவர்கள் தான் வழங்கிய மறையுரையில் கூறினார்.

டிசம்பர் 8, இஞ்ஞாயிறு முதல், 10, இச்செவ்வாய் முடிய ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய இளையோர் மாநாட்டில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய பேராயர் கொஸ்தெல்லோ அவர்கள், வீழ்ந்துவிடும் நிலையில் உள்ள திருஅவையைக் கட்டியெழுப்ப இளையோர் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நீங்கள் அமர்ந்திருக்கும் சொகுசு இருக்கைகளிலிருந்து எழுந்து வாருங்கள் என்று, போலந்து நாட்டில் இளையோர் உலக நாள் நிகழ்வுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த சவால் நிறைந்த அழைப்பை தான் மீண்டும் இளையோருக்கு விடுப்பதாக பேராயர் கொஸ்தெல்லோ அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

பழக்கப்பட்ட தன் வழிகளில் செல்லும் திருஅவையை, இன்னும் புதிய, இதுவரை செல்லாத பாதைகளில் அழைத்துச்செல்ல இளையோரின் துணிவு நிறைந்த முயற்சிகள் தேவை என்பதை, பேராயர் கொஸ்தெல்லோ அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெர்த் நகரில் கூடியிருந்த 5,500க்கும் அதிகமான இளையோர், சாட்சிய பகிர்வுகள், இசை நிகழ்ச்சிகள், திருவழிபாடுகள் மற்றும் கருத்தரங்குகள் என்று பல்வேறு நடவடிக்கைகளில் மூன்று நாள்கள் முழுமையாகப் பங்கேற்றனர் என்று, இந்த இளையோர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தோர் கூறினர். (ICN)

11 December 2019, 15:55