தேடுதல்

Vatican News
புதன் பொது மறைக்கல்வியுரை புதன் பொது மறைக்கல்வியுரை  (AFP or licensors)

ஜப்பானில் தூதுரைப் பணியில் வெற்றி காண்பது கடினம்

ஜப்பானில், இரண்டாம் உலகப் போருக்குப்பின், வெளிநாட்டு மொழிக் கல்வி, கலாச்சாரத்தை மாசுபடுத்தும் சக்திமிக்க கருவியாக மாறியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

ஜப்பான் கத்தோலிக்க திருஅவை, நற்செய்தி அறிவிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் அடிக்கடி தடைகளைச் சந்தித்தாலும், ஏதாவது சில வழிகளைக் கண்டு தூதூரைப் பணியாற்றி வருகின்றது என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 23ம் தேதி முதல், 26ம் தேதி வரை, ஜப்பானில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த டோக்கியோ பேராயர் Isao Kikuchi அவர்கள், ஜப்பானில் மறைப்பணி நடவடிக்கைகளில், குறிப்பிட்டுச்சொல்லுமளவுக்கு வெற்றி காண்பது கடினம் என்று கூறினார்.

இதற்குரிய காரணத்தை விளக்கிய பேராயர் Kikuchi அவர்கள், ஜப்பான் கிறிஸ்தவ சமுதாயம், 1549ம் ஆண்டிலிருந்து, சித்ரவதை மற்றும், அடக்குமுறைகளிலிருந்து மீண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினார்.

கடந்த காலத்தில், வெளிநாட்டு மறைப்பணியாளர்கள், ஆங்கிலம் மற்றும், கலாச்சார வகுப்புகள் வழியாக, மக்களை ஒன்றுகூட்டி, வகுப்பறைகளைத் திறந்தனர், எனினும், இவை தொழில் நிறுவனங்களாக மாற்றப்பட்டுவிட்டன என்றுரைத்த டோக்கியோ பேராயர், இரண்டாம் உலகப் போருக்குப்பின், வெளிநாட்டு மொழிக் கல்வி, கலாச்சாரத்தை மாசுபடுத்தும் சக்திமிக்க கருவியாக மாறியுள்ளது என்று கூறினார்.

ஆங்கில கல்வி, பல பள்ளிகளில் கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது, முதல் வகுப்பிலிருந்து உயர்நிலை பள்ளி வரை, அது தொடர்கின்றது என்றும் அவர் கூறினார்.    

ஜப்பானில் ஏறத்தாழ 35 விழுக்காட்டினர் புத்த மதத்தினர். ஏறத்தாழ 2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இவர்களில் பாதிப்பேர் கத்தோலிக்கர். (CNA)

05 November 2019, 14:54