தேடுதல்

Vatican News
"இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்" (மத்தேயு 8:5) "இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்" (மத்தேயு 8:5) 

விவிலியத்தேடல் – நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை: 1

"ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்... ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்" (லூக்கா 7:6-7) என்று, நூற்றுவர் தலைவர் சொன்ன சொற்கள், திருப்பலி நேரத்தில் கூறப்படும் ஓர் அழகிய செபத்தை உருவாக்க, வழிவகுத்துள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல் – நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை: 1

ஒத்தமை நற்செய்திகளான மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில் ஏதாவது இரு நற்செய்திகளில், பதிவுசெய்யப்பட்டுள்ள 5 பொதுவானப் புதுமைகளில், நம் தேடல் பயணத்தைத் தொடர்கிறோம். இந்த 5 புதுமைகளில், மாற்கு, லூக்கா என்ற இரு நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள, கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்தவர் நலமடையும்  புதுமையை, கடந்த மூன்று வாரங்கள் சிந்தித்தோம். இதைத் தொடர்ந்து, மத்தேயு, லூக்கா, என்ற இரு நற்செய்திகளில், பொதுவாகக் காணப்படும் ஒரு புதுமையில், இன்று நம் தேடல் பயணம் துவங்குகிறது.

நற்செய்தியாளர்கள், மத்தேயுவும், லூக்காவும் பொதுவாகப் பதிவுசெய்துள்ள புதுமை, நூற்றுவர் தலைவரின் பையன் அல்லது பணியாளர் நலமடையும் புதுமை (மத்தேயு 8:5-13; லூக்கா 7:1-10). ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள், இப்புதுமையை, யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அரச அலுவலர் மகன் நலமடையும் புதுமையுடன் (யோவான் 4:43-54) தொடர்புபடுத்தியுள்ளனர். அரச அலுவலர் மகன் நலமடையும் அப்புதுமையிலும், நூற்றுவர் தலைவரின் பையன் அல்லது பணியாளர் நலமடையும் புதுமையிலும், 'கப்பர்நாகும்' என்ற ஊரின் பெயர் குறிக்கப்பட்டிருப்பது மட்டுமே பொதுவான அம்சம். இதைத் தவிர, வேறு எவ்வித பொதுவான அம்சமும், இப்புதுமைகளுக்கிடையே இருப்பதாகத் தெரியவில்லை. யோவான் நற்செய்தியின் புதுமைகளை, சென்ற ஆண்டு நாம் சிந்தித்த வேளையில், அரச அலுவலர் மகன் நலமடைந்த புதுமையில் நாம் தேடலை மேற்கொண்டோம். இன்றைய நம் தேடலில், மத்தேயு, லூக்கா நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள நூற்றுவர் தலைவர் பற்றிய புதுமையில் நம் கவனத்தைத் திருப்புவோம்.

இயேசு ஆற்றிய புதுமைகளில் அவர் ஆற்றும் செயல்பாடுகள், புதுமையின் ஒரு பகுதி. அதை, புதுமையின் ஒரு சிறு பகுதி என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அப்புதுமை நடந்த சூழல், புதுமையில் கலந்துகொண்டவர்கள், புதுமை நடப்பதற்கு முன் இருந்த நிலைமை, நடந்தபின் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை, புதுமையின் முக்கிய பகுதிகளாக உள்ளன. இவை வழியே, நாம் பல பாடங்களைப் பயிலமுடியும். நாம் தேடலை மேற்கொண்டுள்ள இப்புதுமையில், நூற்றுவர் தலைவர் இயேசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கை, இப்புதுமையின் மையக்கருத்தாக அமைவதோடு, நம் அனைவருக்கும் பாடமாகவும் உள்ளது.

இப்புதுமையின் நாயகன் இயேசு. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இப்புதுமையின் மற்றொரு நாயகன் - நூற்றுவர் தலைவர். "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்... ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்" (லூக்கா 7:6-7) என்று, நூற்றுவர் தலைவர் சொன்ன சொற்கள், ஒவ்வொருநாளும், திருப்பலி நேரத்தில், உலகெங்கும் கூறப்படும் ஓர் அழகிய செபத்தை உருவாக்க, வழிவகுத்துள்ளன.

இப்புதுமையின் அறிமுகப் பகுதி, லூக்கா நற்செய்தியில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

லூக்கா, 7: 1-6

இயேசு, கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்று, சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பி, தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி, அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். இயேசு அவர்களோடு சென்றார்.

இயேசு, மலைமீது ஏறி அமர்ந்து, (மத். 5:1) அல்லது, சமவெளியான ஓரிடத்தில் நின்று  (லூக். 6:17) மக்களுக்கு உரை வழங்கியதைத் தொடர்ந்து, இப்புதுமை நிகழ்ந்ததாக, நற்செய்தியாளர்கள், மத்தேயு, லூக்கா இருவரும், கூறியுள்ளனர். மலைப்பொழிவு, அல்லது, சமவெளிப்பொழிவில் இயேசு சொன்ன அற்புதமான, ஆழமான உண்மைகளுக்கு, நடைமுறையில் தரப்படும் ஓர் எடுத்துக்காட்டைப்போல் இப்புதுமை அமைகிறது என்ற கோணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம். இப்புதுமையின் இரண்டாவது நாயகன் என நாம் குறிப்பிட்ட, நூற்றுவர் தலைவரை நோக்கி நம் சிந்தனைகளை முதலில் திருப்புவோம்.

இவரைப் பற்றி லூக்கா நற்செய்தி சொல்லும் 6 விவரங்கள் இதோ: 1. அவர் உரோமையப் படையில், நூற்றுவர் தலைவர். 2. நோயுற்று கிடக்கும் பணியாளர் மீது மதிப்பு வைத்திருந்தவர். 3. உரோமையராய் இருந்தாலும், யூத மக்கள் மீது அன்புள்ளவர். 4. அவர்களுக்குத் தொழுகைக்கூடம் கட்டித்தந்தவர். 5. தன் நிலையை நன்கு உணர்ந்ததால், இயேசுவை நேருக்கு நேர் சந்திக்கத் தயங்கியவர். 6. இயேசுவின் மீது தனிப்பட்ட விதத்தில் நம்பிக்கை கொண்டவர். நூற்றுவர் தலைவரின் ஆழ்ந்த நம்பிக்கையைக் கண்ட இயேசு, "இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்" (லூக்கா 7:9) என்ற உயர்ந்த நற்சான்றிதழை அவருக்கு வழங்கினார்.  

உரோமையப் படையில், நூற்றுவர் தலைவர் என்பது முதல் குறிப்பு. உரோமைய அரசில், சாதரண படைவீரனாக இருக்கும் ஒருவர், பல்வேறு திறமைகளின் அடிப்படையிலும், முக்கியமாக, உரோமையப் பேரரசின் மீது அவருக்கிருந்த விசுவாசத்தின் அடிப்படையிலும், படிப்படியாக, பதவிகளில் உயர்ந்து, நூற்றுவர் தலைவர் என்ற நிலையை அடைந்தவர். கட்டுப்பாடு, கடின உழைப்பு என்ற இரு தூண்களின் மீது, இவரது வாழ்வு எழுப்பப்பட்டிருந்தது. தன்னைவிட உயர் பொறுப்பில் இருந்தவர்கள் தந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து பணியாற்ற இவர் கற்றுக்கொண்டதால், மற்றவர்களுக்குக் கட்டளையிடும் பக்குவத்தை அடைந்தவர்.

போர்க் காலங்களில், எதிரிகளைத் தாக்குவதிலும், எதிரியின் கோட்டைகளில் ஏறிச் செல்வதிலும் முதல் வரிசையில் இருந்தவர் இவர். இக்காரணங்களால், ஒவ்வொரு போரிலும், நூற்றுவர் தலைவர்கள் பலர் கொல்லப்படுவார்கள். சுருக்கமாகச் சொன்னால், உயிருக்குப் பயந்தவர்கள் இல்லை இவர்கள். இப்புதுமையில் நாம் சந்திக்கும் நூற்றுவர் தலைவர், உயிருக்கு மட்டுமல்ல, தன் பதவிக்கும் பயந்தவரல்ல எனக் கூறலாம். பதவியைப் பற்றி பயப்படாததால்தான், உரோமையராகிய இவர், யூதரான இயேசுவிடம் உதவி கேட்டு சென்றார்.

பணியாளர் மீது மதிப்பு வைத்திருந்தார் என்பது, அவரைப்பற்றிய இரண்டாம் குறிப்பு. லூக்கா நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 'பணியாளர்' என்ற சொல்லுக்கு, ஒரு சில மொழிபெயர்ப்புக்களில், 'அடிமை' என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்தேயு நற்செய்தியிலோ, 'பணியாளர்' என்ற சொல்லுக்குப் பதிலாக, 'பையன்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'பையன்' என்பது, 'மகன்' அல்ல. ஒருவேளை, அந்தப் 'பையன்' நூற்றுவர் தலைவரின் வீட்டில் பணியாற்றிவந்த சிறுவனாக இருக்கலாம். தன்னிடம் பணிபுரிந்த சிறுவன், அல்லது அடிமையின் மீது மதிப்பு கொண்டிருந்ததால், நூற்றுவர் தலைவர், இயேசுவின் உதவியைத் தேடிச்சென்றார் என்பதை நாம் உணர்கிறோம்.

உயர் பதவியில் இருப்பவர்கள், தங்களுக்குக் கீழ் பணியாற்றுவோர் மீது, இரக்கமோ, அன்போ கொண்டிருப்பதைக் காண்பது எளிது. ஆனால், பணியாளர் மீது மதிப்பு கொண்டிருக்கும் அதிகாரிகளையோ, தலைவர்களையோ காண்பது அரிது. மற்றவர்களை மதிக்கக்கூடிய பக்குவம், அதுவும் தன்னைவிடத் தாழ்நிலையில் இருப்பவரை மதிக்கக்கூடிய பக்குவம் யாருக்கு வரும்? தன்னைப்பற்றி நன்கு அறிந்தவர்கள், தங்களது நிறைகளையும், குறைகளையும் அறிந்து ஏற்று கொண்டவர்கள், தங்கள்மீது, உண்மையான, நிறைவான, மதிப்பு கொண்டவர்களே, மற்றவரையும் உண்மையில் மதிப்பார்கள். இதற்கு மாறாக, அடுத்தவர்களை, குறிப்பாக, தங்களுக்குக் கீழ் பணியாற்றுவோரை, போட்டியாக நினைக்கும்போது மதிப்பு குறையும், அவர்களைப் பற்றிய பயம் எழும். உயர் நிலையில் இருப்பவர்கள், இந்த பயத்தை வெளிக்காட்டாமல், தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் குறை காணவும், அவர்களை மட்டம் தட்டும் திட்டங்களில் ஈடுபடவும் ஆரம்பிப்பார்கள்.

தன் பணியாளர் மீது மதிப்பு கொண்டிருந்த நூற்றுவர் தலைவர், "இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்" (லூக்கா 7:3) என்று, நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார். மத்தேயு நற்செய்தியிலோ, நூற்றுவர் தலைவர், நேரடியாக இயேசுவிடம் வந்தார் என்பதைக் கூற, "இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்" (மத்தேயு 8:5) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரடியாகவோ, யூதரின் மூப்பர்கள் வழியாகவோ, இயேசுவிடம் உதவி தேடிச்சென்ற நூற்றுவர் தலைவரைப் பற்றிய கூடுதல் விவரங்களை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம். குறிப்பாக, உரோமைய அதிகாரி ஒருவரைக் குறித்து, யூதரின் மூப்பர்கள் வழங்கிய நற்சான்றிதழை நாம் அடுத்தத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.

19 November 2019, 14:33