தேடுதல்

Vatican News
உலகத் தலைவர்கள் முன் உரையாற்றிய செவெர்ன் கல்லிஸ் சுசுகி (Severn Cullis Suzuki), மற்றும், கிரியெத்தா துன்பெரெய் (Greta Thunberg) உலகத் தலைவர்கள் முன் உரையாற்றிய செவெர்ன் கல்லிஸ் சுசுகி (Severn Cullis Suzuki), மற்றும், கிரியெத்தா துன்பெரெய் (Greta Thunberg) 

விவிலியத்தேடல்: தீய ஆவி பிடித்தவர் குணமடைதல் – பகுதி 2

தங்கள் வாழ்வில், அனுபவத்தால் உணர்ந்துள்ள உண்மைகளை, தெளிவாக, துணிவாக, உலகத்தலைவர்களிடம் கூறிய கிரியேத்தா மற்றும் சுசுகி என்ற இளம் பெண்கள், இன்றைய உலகின் இறைவாக்கினர்கள் என்று சொன்னால், அது மிகையல்ல.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: தீய ஆவி பிடித்தவர் குணமடைதல் – பகுதி 2

சுற்றுச்சூழலும், பூமிக்கோளமும் அழிவை நோக்கி வெகு வேகமாகச் செல்கிறது என்றும், இதனால், இளையோரின் எதிர்காலம் பறிக்கப்படுகிறது என்றும், கடந்த 15 மாதங்களாக, உலகெங்கும் எச்சரிக்கை விடுத்துவருபவர், கிரியெத்தா துன்பெரெய் (Greta Thunberg). சுவீடன் நாட்டைச் சேர்ந்த, 16 வயதான இளம்பெண் கிரியேத்தா அவர்கள், தன் சந்ததியினர், தற்போது சந்தித்துவரும், மற்றும், சந்திக்கப்போகும் இன்னலைகளைக் குறித்து, பல நாடுகளிலும், பன்னாட்டு அவைகளிலும், துணிவுடன் பேசி வருகிறார்.

27 ஆண்டுகளுக்கு முன், இதே எச்சரிக்கையை, கனடா நாட்டைச் சேர்ந்த செவெர்ன் கல்லிஸ் சுசுகி (Severn Cullis Suzuki) என்ற 13 வயதான இளம் பெண் விடுத்தார். 1992ம் ஆண்டு, ரியோ தெ ஜனெய்ரோ நகரில், ஐ.நா. அவை ஏற்பாடு செய்திருந்த காலநிலை மாற்றம் உலக உச்சி மாநாட்டில், 6 நிமிடங்கள் பேசிய இளம்பெண் சுசுகி அவர்கள், "உங்களால் சரி செய்ய இயலாத இயற்கையை, மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறையினருக்கு" என்ற அழுத்தந்திருத்தமானதொரு அறிவுரையை உலகத் தலைவர்கள்முன் வைத்தார்.

"உங்கள் பொருளற்ற சொற்களால், என் கனவுகளையும், குழந்தைப் பருவத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள்... உயிரினங்களின் ஒட்டுமொத்த அழிவு துவங்கிவிட்டது. இந்நிலையில், உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால், பணத்தைப்பற்றியும், பொருளாதார முன்னேற்றம் என்ற கட்டுக்கதையையும் எங்களிடம் பேசி வருவீர்கள்" என்று, இளம்பெண் கிரியேத்தா அவர்கள், ஐ.நா.வின் "காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில்" தன் முன் அமர்ந்திருந்த உலகத்தலைவர்களின் உள்ளங்களைத் துளைக்கும்வண்ணம் பேசினார்.

தங்கள் வாழ்வில், அனுபவத்தால் உணர்ந்துள்ள உண்மைகளை, தெளிவாக, துணிவாக, உலகத்தலைவர்களிடம் கூறிய இவ்விரு இளம் பெண்களும், இன்றைய உலகின் இறைவாக்கினர்கள் என்று சொன்னால், அது மிகையல்ல. இறைவாக்கினர்களுக்கே உரிய, உண்மையைக் கூறும் துணிவு என்ற பண்பு இவர்களிடம் இருப்பதால், இவர்களது கூற்றுகளில் 'அதிகாரம்' வெளியாகிறது; இவர்களுக்கு செவிமடுக்கும் மக்களில், குறிப்பாக, இளையோரில், நல்ல மாற்றங்கள் உருவாகின்றன. இத்தகைய 'அதிகாரம்' இயேசுவின் கூற்றுகளில் வெளியானதை, மக்கள் உணர்ந்தனர் என்று, சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம். மறைநூல் அறிஞரைப் போலன்றி, தனிப்பட்ட ஓர் அதிகாரத்துடன் இயேசு அவர்களுக்குக் கற்பித்து வந்தார் - மாற்கு 1: 21-22 - என்று, மாற்கு நற்செய்தியில் வாசிக்கிறோம்.

கடவுளால் அழைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, அனுப்பப்படும் இறைவாக்கினர்களின் இயல்பைப் பற்றி, பழைய ஏற்பாட்டின் இணைச்சட்ட நூல் நமக்கு விளக்குகிறது. இறைவன் சொன்ன செய்திகளைச் சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்களுக்கு விளக்கி, தங்களை அதுவரை வழிநடத்தி வந்த மோசே என்ற இறைவாக்கினர், இறக்கும் நிலையில் இருந்ததால் கலக்கம் அடைந்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் சொல்லும்வண்ணம், மோசேயின் சொற்கள் அமைந்திருந்தன:

இணைச்சட்டம் 18: 15-20

மோசே மக்களிடம் கூறியது: “ஆண்டவர் என்னைநோக்கி, ‘உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.’”

‘உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன்’ என்று, இறைவன், மோசே வழியாக சொன்னது, கிறிஸ்துவைக் குறித்து சொல்லப்பட்டது என்பது, பல விவிலிய ஆசிரியர்களின் கருத்து. மோசே துவங்கி, இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர்களாக, தலைவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் பலர், உயர் பதவியில் இருந்து அதிகாரம் செலுத்தவில்லை. உண்மையில் இவர்களில் பலர், பரிதாபமான நிலையில் வாழ்ந்தனர். ஆனாலும், இறைவன் தங்கள் உள்ளத்தில் பதித்த உண்மைகளை, பயமின்றி, மக்களிடம் உரைத்தனர். இறைவனின் பெயரால் பேசுகிறோம் என்ற அந்த அதிகாரம் ஒன்றே, அவர்களைத் துணிவுடன் செயல்பட வைத்தது. இந்த இறைவாக்கினர்களின் முழு வடிவமாக, இறை வாக்காகவே வாழ்ந்த இயேசு, 'அதிகாரம்' என்ற சொல்லுக்கு, இன்னும் பல புதிய இலக்கணங்களைத் தந்தார்.

கப்பர்நாகூம் ஊர், தொழுகைக்கூடத்தில், இயேசு அதிகாரத்துடன் கற்பித்தபோது, சாதாரண மக்கள் அவரது போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தனர் என்று கூறிய நற்செய்தியாளர் மாற்கு, அதே மூச்சில், அங்கிருந்த தீய ஆவி பிடித்த ஒருவருக்கு நேர்ந்ததைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

மாற்கு 1: 23-26

அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. "வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.

தீய ஆவி பிடித்தவர்களை இயேசு குணமாக்கும் புதுமைகள், ஒத்தமை நற்செய்திகளில் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஏழு நிகழ்வுகளாகப் பதிவாகியுள்ள இப்புதுமைகளில், இரு தருணங்களில், இயேசுவுக்கும், தீய ஆவி, அல்லது, ஆவிகளுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. கப்பர்நாகூம் தொழுகைக்கூடத்திலும், கெரசேனர் கல்லறைப் பகுதியிலும் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளும் தீய ஆவிகள், அவரிடம் எழுப்பும் முதல் கேள்வி நம் கவனத்தை ஈர்க்கிறது.

"நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. (மாற்கு 1:24, லூக்கா 4:34) என்ற சொற்கள், மாற்கு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளன.

தான் ஆக்கிரமித்துள்ள ஒரு மனிதரிடம் இயேசுவுக்கு எவ்வித அதிகாரமோ, வேலையோ கிடையாது என்பதையும், அம்மனிதர் தன் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளார் என்பதையும், தீய ஆவி தெளிவாக்குவதுபோல், உமக்கு இங்கு என்ன வேலை? என்ற கேள்வி அமைந்துள்ளது.

லூக்கா நற்செய்தியில் இந்தக் கூற்றை வாசிக்கும்போது, கூடுதலாக ஓர் எண்ணம் உருவாகிறது. "நாசரேத்து இயேசுவே" என்று, தீய ஆவி குறிப்பிட்டுப் பேசும்போது, இயேசு, கப்பர்நாகும் வருவதற்கு முன், நாசரேத்திலிருந்து துரத்தப்பட்டவர் என்பதை மறைமுகமாகக் குத்திக்காட்டுவதுபோல் தெரிகிறது.

ஒருவர் நன்மை செய்ய விழையும் நேரத்தில், அதை, தடுப்பதற்கும், கெடுப்பதற்கும் திரண்டுவரும் சக்திகள், நன்மை செய்ய முயல்பவரின் பிறப்பிடம், அவர் வாழ்வில் சந்தித்த தோல்விகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் முயற்சிகளில் ஈடுபடுவதை நாம் அறிவோம். கப்பர்நாகூம் ஊரில், அத்தகைய முயற்சியில் தீய ஆவி ஈடுபட்டிருந்தது.

கிரியேத்தா மற்றும் சுசுகி என்ற இரு இளம் பெண்கள், இன்றையத் தலைமுறையினரின் சார்பாக, சுற்றுச்சூழலை மையப்படுத்தி போராடிவரும் இறைவாக்கினர்கள் என்ற கோணத்தில் இன்றையத் தேடலை நாம் துவங்கினோம். 1992ம் ஆண்டிலும், 2019ம் ஆண்டிலும், இவ்விரு இளம் பெண்களுக்கும் செவிமடுத்த உலகத் தலைவர்களில் சிலர், குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதகங்களை விளைவிக்கும் நிறுவனங்களிடமிருந்து பெருமளவு தொகைகளை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பெற்றுள்ள தலைவர்கள், இவ்விரு பெண்களின் குறைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் குறியாய் உள்ளனர். இவ்விருவரும் வயதில் மிகவும் குறைந்தவர்கள் என்றும், அவர்களுக்கு அனுபவ அறிவோ, அறிவியல் விவரங்களோ போதாது என்றும் கூறி, இவ்விருவரையும் அமைதிப்படுத்த முயன்று வருகின்றனர்.

இவ்விரு இளம் பெண்களும் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மக்கள், சமூக வலைத்தளங்கள் வழியே, தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். அறிவியலின் அடிப்படையில், இவ்விருவரும் கூறும் உண்மைகளுக்கு மாற்றுக்கருத்தாக, வேறு தகுதியான உண்மைகளை வெளியிடுவதற்குப் பதில், இவ்விருவரின் பிறப்பு, வளர்ப்பு ஆகியவற்றைத் தாக்கும் வகையில் தங்கள் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவ்விரு பெண்களின் பெற்றோரும், இவர்களை சரிவர வளர்க்கவில்லை, இவர்கள் இருவரும் இடதுசாரி அரசியல்வாதிகளின் கைப்பாவைகள் என்பன போன்ற கருத்துக்களை பதிவுசெய்து வருவது, தீய சக்திகள் பயன்படுத்தும் தந்திரங்களை மீண்டும் நம் நினைவில் பதிக்கின்றது.

தான் வளர்ந்த ஊரான நாசரேத்தில் சந்தித்த எதிர்ப்பை மீண்டும் நினைவுறுத்தும் வகையில், 'நாசரேத்து இயேசுவே' என்று தீய ஆவி குத்திக்காட்டுவதைப் பொருள்படுத்தாமல், அந்தத் தீய ஆவியை விரட்டியடித்தார் இயேசு. அதே வண்ணம், சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் வர்த்தக சக்திகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில், இளையோருக்கு ஓர் உந்துசக்தியாக விளங்கும் கிரியெத்தா துன்பெரெய் (Greta Thunberg) அவர்கள், தனக்கெதிராக எழும் அவதூறுகளுக்குச் செவிமடுக்காமல், தன் சுற்றுச்சூழல் போராட்டத்தை துணிவோடு முன்னின்று நடத்த, இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

05 November 2019, 14:38