தேடுதல்

Vatican News
2020, பாகிஸ்தானில் இளையோர் ஆண்டு என்ற அறிவிப்பு 2020, பாகிஸ்தானில் இளையோர் ஆண்டு என்ற அறிவிப்பு 

2020, பாகிஸ்தானில் சிறப்பிக்கப்படும் இளையோர் ஆண்டு

கத்தோலிக்க இளையோர் மீது மட்டுமல்லாமல், ஏனைய இளையோர் மீது, குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டு, அதனால் மனமுடைந்து, வாழும் இளையோர் மீது கவனம் செலுத்த, இந்த இளையோர் ஆண்டு அழைப்பு விடுக்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தான் தலத்திருஅவையில், 2020ம் ஆண்டு, இளையோரின் ஆண்டாக கொண்டாடப்படும் என்று, தலத்திருஅவை அறிவித்துள்ளதென ஃபீதேஸ் செய்தி கூறுகிறது.

லாகூர் நகரில் உள்ள திரு இருதய பேராலயத்தில், அண்மையில் நிகழ்ந்த ஒரு விழாவில், கர்தினால் ஜோசப் கூட்ஸ், மற்றும் பாகிஸ்தான் திருப்பீடத்தூதர், பேராயர் Christophe El Kassis, மற்றும் ஏனைய ஆயர்கள், இளையோர் ஆண்டு மெழுகுதிரி ஒன்றை ஏற்றி, இளையோரின் ஆண்டைப்பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

பாகிஸ்தானில் வாழும் இளையோர், உயிர்த்த இயேசுவுடன் ஒன்றித்து, தங்கள் உடன்பிறந்தோர் அனைவருக்கும், உற்சாகத்துடன் பணியாற்ற தான் வாழ்த்துவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த செய்தியை, பேராயர் El Kassis அவர்கள் வாசித்தார்.

இளையோர் ஆண்டின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ள ஹைதராபாத் மறைமாவட்டத்தின் ஆயர் Samson Shukardin அவர்கள், பாகிஸ்தானில் வாழும் அனைத்து இளையோரின் வாழ்வு மேன்மையடைய, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சி என்ற அனைத்து துறைகளிலும் கத்தோலிக்கத் திருஅவை கூடுதல் கவனம் செலுத்த இந்த இளையோர் ஆண்டு உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக கூறினார்.

கத்தோலிக்க இளையோர் மீது மட்டுமல்லாமல், ஏனைய இளையோர் மீது, குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டு, அதனால் மனமுடைந்து, போதைப்பொருள் பயன்பாடு போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கும் இளையோர் மீது கவனம் செலுத்த, இந்த இளையோர் ஆண்டு அழைப்பு விடுக்கிறது என்று, ஆயர் Shukardin அவர்கள், விண்ணப்பித்தார். (Fides)

20 November 2019, 14:49