தேடுதல்

Vatican News
தாய்லாந்தில் திருத்தந்தையின் பயணம் தாய்லாந்தில் திருத்தந்தையின் பயணம்  (AFP or licensors)

தாய்லாந்து, ஜப்பான் திருத்தூதுப்பயணம் குறித்து கர்தினால் போ

சுற்றுச்சூழலின் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள தாய்லாந்திலும், ஜப்பானிலும் திருத்தந்தையின் செய்திகள் மேலும் பல நேர்மறையான தாக்கங்களை உருவாக்கும் – மியான்மார் கர்தினால் போ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாய்லாந்திலும், ஜப்பானிலும் வாழும் அனைவருக்கும், குறிப்பாக, அந்நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு, திருத்தந்தையின் பயணம், அருள் நிறைந்த தருணமாக இருக்கும் என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ (Charles Maung Bo) அவர்கள் கூறியுள்ளார்.

ஆசிய ஆயர்களின் வரவேற்பு

ஆசிய ஆயர்களின் வரவேற்பு என்ற தலைப்பில், மியான்மார் நாட்டின் கர்தினால் போ அவர்கள் எழுதியுள்ள ஒரு நல்வரவு செய்தியை, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் வலைத்தளமும், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவும் வெளியிட்டுள்ளன.

நாம் வாழும் இன்றைய காலத்திற்கு ஏற்ற ஓர் இறைவாக்கினராக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் தேவையான மனிதாபிமான செய்திகளை வெளியிட்டுவரும் உலகத் தலைவராகவும் விளங்குகிறார் என்று கர்தினால் போ அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையையும், மகிழ்வையும் கொணரும் பயணம்

இரு ஆண்டுகளுக்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மியான்மார் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, தன் செய்தியில் நினைவுகூரும் கர்தினால் போ அவர்கள், திருத்தந்தையின் வரவு தங்கள் நாட்டில் விதைத்த நம்பிக்கையையும், மகிழ்வையும், தாய்லாந்து மற்றும், ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் பெறவேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

கிழக்கு நாடுகளின் ஆன்மீகத்தை விரும்பும் திருத்தந்தை

இறைவனின் படைப்பில் காணப்படும் அனைத்தையும் மதிப்புடன் நடத்தச் சொல்லித்தரும் கிழக்கு நாடுகளின் ஆன்மீகத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெரிதும் விரும்புகிறார் என்பது, 'இறைவா உமக்கே புகழ்' என்ற அவரது திருமடலில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது என்று கர்தினால் போ அவர்கள் தன் செய்தியில் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுச்சூழலின் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள தாய்லாந்திலும், ஜப்பானிலும் திருத்தந்தையின் செய்திகள் மேலும் பல நேர்மறையான தாக்கங்களை உருவாக்கும் என்பதையும், கர்தினால் போ அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது.

13 November 2019, 15:01