தேடுதல்

தாய்லாந்து திருத்தூதுப் பயணம் தாய்லாந்து திருத்தூதுப் பயணம் 

மிகுந்த எதிர்பார்ப்புடன் தாய்லாந்து திருத்தூதுப் பயணம்

தாய்லாந்தின் 6 கோடியே 80 இலட்சத்திற்கு அதிகமான மக்களில், ஏறத்தாழ 0.5 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் புத்த மதத்தினர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கர் மிகச் சிறுபான்மையினராக வாழ்கின்ற தாய்லாந்தில், நவம்பர் 20ம் தேதி முதல், 23ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தை, அம்மக்கள் மிகுந்த மகிழ்வு மற்றும், ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்தில் கடந்த பத்து ஆண்டுகளாக மறைப்பணியாற்றும் இத்தாலிய அருள்பணியாளர் Rafaelle Sandonà அவர்கள்,  திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் பற்றி வத்திக்கான் வானொலிக்கு அளித்த நேர்காணலில், இப்பயணம், தாய்லாந்து கத்தோலிக்கரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் என்று கூறினார்.

புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற தாய்லாந்தில், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம், பல்சமய உரையாடலை ஊக்குவிக்கும் என்றுரைத்த அருள்பணி Sandonà அவர்கள், 35 ஆண்டுகளுக்குப்பின், திருத்தந்தை ஒருவரைக் காணவிருக்கும் கத்தோலிக்கர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் என்று கூறினார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், தாய்லாந்திற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட 35 ஆண்டுகளுக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாடு செல்கிறார்.  

தாய்லாந்தின் 6 கோடியே 80 இலட்சத்திற்கு அதிகமான மக்களில், ஏறத்தாழ 0.5 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் புத்த மதத்தினர். முஸ்லிம்கள் 4 விழுக்காட்டிற்கும் சற்று அதிகம்.

கடந்த 350 ஆண்டுகால வரலாற்றில், தாய்லாந்து கத்தோலிக்கத் திருஅவை 11 மறைமாவட்டங்களாக வளர்ந்து, ஏறத்தாழ 3,90,000 கத்தோலிக்கரைக் கொண்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2019, 14:51