தேடுதல்

Vatican News
பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடு விலகிக்கொள்ளும் என்ற அறிக்கையை எதிர்த்து லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆர்ப்பாட்டம் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடு விலகிக்கொள்ளும் என்ற அறிக்கையை எதிர்த்து லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆர்ப்பாட்டம்  (2017 Getty Images)

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதால் அதிர்ச்சி

நமது பூமிக்கோளம், அதிர்ச்சி தரும் வேகத்தில் வெப்பமடைந்து வருவதும், இதனால், வறியோரின் வாழ்வு பெருமளவு பாதிக்கப்படுவதும் நம் கண் முன் நிகழ்ந்துவரும் கொடுமைகள் - கத்தோலிக்க துயர் துடைப்பு பணி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2015ம் ஆண்டு பாரிஸ் நகரில் நிகழ்ந்த காலநிலை மாற்றம் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு விலகிச் செல்வதாக அறிவித்துள்ள முடிவை, அரசு மீண்டும் ஆய்வு செய்யவேண்டும் என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின், கத்தோலிக்க துயர் துடைப்பு பணி என்ற பிறரன்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நமது பூமிக்கோளம், அதிர்ச்சி தரும் வேகத்தில் வெப்பமடைந்து வருவதும், இதனால், வறியோரின் வாழ்வு பெருமளவு பாதிக்கப்படுவதும் நம் கண் முன் நிகழ்ந்துவரும் கொடுமைகள் என்று கத்தோலிக்க துயர் துடைப்பு பணி கூறியுள்ளது.

2015ம் ஆண்டு பாரிஸ் மாநகரில் நிகழ்ந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட 188 நாடுகள் பூமிக்கோளத்தின் வெப்ப மாற்றத்தை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழ் வைப்பதற்கு முயற்சி செய்வதாக மேற்கொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகப்போவதாக அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் 2017ம் ஆண்டு கூறியிருந்தார்.

இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடு விலகிக்கொள்வதாக, நவம்பர் 4, இத்திங்களன்று அறிவித்ததையடுத்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர், அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களுக்கு ஆலோசனைகளை அனுப்பி வருகின்றனர் என்று CNA கத்தோலிக்க செய்தி கூறுகிறது.

பூமிக்கோளத்தையும், சுற்றுச்சூழலையும் காப்பதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 60 மறைமாவட்டங்கள், 100 பங்குத்தளங்கள், மற்றும் 200 துறவு இல்லங்கள் அறிவித்துள்ளன என்று CNA கத்தோலிக்கச் செய்தி மேலும் கூறுகிறது. (CNA)

06 November 2019, 15:50