தேடுதல்

குவஹாத்தி பெருமறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், தாமஸ் மேனம்பரம்பில் குவஹாத்தி பெருமறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், தாமஸ் மேனம்பரம்பில் 

2019ம் ஆண்டின் அமைதி தூதராக பேராயர் மேனம்பரம்பில்

குவஹாத்தி பெருமறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், தாமஸ் மேனம்பரம்பில் அவர்களுக்கு ‘2019ம் ஆண்டின் அமைதி தூதர்’ என்ற விருது, டிசம்பர் 9ம் தேதி வழங்கப்படவுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் குவஹாத்தி பெருமறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், தாமஸ் மேனம்பரம்பில் (Thomas Menamparampil) அவர்களுக்கு ‘2019ம் ஆண்டின் அமைதி தூதர்’ என்ற விருது, டிசம்பர் 9ம் தேதி வழங்கப்படவுள்ளதென்று, ஆசிய செய்தி கூறுகிறது.

பன்னாட்டு மனித உரிமைகள் கழகம், புதுடில்லியில் ஏற்பாடு செய்துள்ள ஒரு விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்றும், இவ்விருது, தனக்கு கிடைத்த பெருமை அல்ல, மாறாக, அமைதியை நிலைநாட்ட, தன்னுடன் உழைக்கும் பலருக்கு கிடைத்துள்ள ஊக்கம் என்றும் பேராயர் மேனம்பரம்பில் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

1936ம் ஆண்டு, கேரளாவின் பாலையில் பிறந்த பேராயர் மேனம்பரம்பில் அவர்கள், 1981ம் ஆண்டு திப்ருகார் மறைமாவட்டத்தின் ஆயராக அருள்பொழிவு பெற்று, பின்னர், 1992ம் ஆண்டு, புதிதாக நிறுவப்பட்ட குவஹாத்தி மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்றார்.

1995ம் ஆண்டு, இந்த மறைமாவட்டம் உயர் மறைமாவட்டமாக உயர்ந்ததையடுத்து, பேராயராக பணியாற்றிய மேனம்பரம்பில் அவர்கள், அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு இனத்தவருக்கிடையே நிகழ்ந்து வந்த மோதல்களைத் தீர்ப்பதற்கு வெகுவாக உழைத்தார்.

அமைதியையும், ஒப்புரவையும் வளர்க்க, குவஹாத்தி முன்னாள் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி, பன்னாட்டு மனித உரிமைகள் கழகம், 2019ம் ஆண்டின் அமைதி தூதுவர் என்ற விருதை வழங்கவுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2019, 15:12