தேடுதல்

Vatican News
தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்கள் தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்கள் 

சமத்துவம், நீதி உடன்பிறந்தநிலைக்காக போராடுவோம்

தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஏறத்தாழ 4,50,000 கத்தோலிக்கர் உள்ளனர். அங்கு திருஅவை 200க்கும் அதிகமான பள்ளிகளை நடத்தி வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தனது மறைமாவட்டத்தின் சூழல்கள், கிறிஸ்தவர்களின் வாழ்வுக்கு கடினமாக இருந்தாலும், சமத்துவம், நீதி மற்றும், உடன்பிறந்தநிலைக்காகப் போராடுவதை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்று, தமிழக ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.  

Aid to the Church in Need என்ற திருஅவையின் பிறரன்பு அமைப்புக்குப் பேட்டியளித்த, தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்கள், தனது மறைமாவட்ட கிறிஸ்தவர்கள், விசுவாசத்தை நடைமுறைபடுத்துவதற்கு எதிராக, அடிக்கடி கட்டுப்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே மொழி கொள்கையுடன், ஒரேவிதமான நாட்டை அமைப்பதற்கு, நடுவண் அரசு கொள்கைகளை உருவாக்கி வருகின்றது என்று கூறியுள்ள ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்கள், 137 கோடி மக்கள் தொகையுடன், உலகில் இரண்டாவது பெரிய நாடாகவும், 29 மாநிலங்களையும் கொண்டுள்ள ஒரு நாட்டில், ஒரேவிதமான அமைப்பில் வாழ்வது இயலாதது மற்றும், கடினமானது என்றும் கூறினார்.

மக்கள் தொகையில் அடுத்த ஆண்டில் இந்தியா, சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்ற சில கணிப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன என்றும், இந்த ஆண்டு, மக்களவைத் தேர்தல்களுக்குப் பின்னர், நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது என்றும், ஆயர் ஸ்டீபன் அவர்கள் கூறினார்.

தற்போது நாட்டின் சூழல், ஊக்கமளிப்பதாய் இல்லை என்றும், மத்திய அரசு, எதிர்விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல், நிறையத் தீர்மானங்களை அமைக்கின்றன, அவை, எதையும் முன்னறிவிக்க இயலாத நிலைக்கு உட்படுத்துகின்றன என்றும், தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்கள் கூறினார். (Zenit)

02 November 2019, 14:58