தேடுதல்

Vatican News
பார்வையற்ற பர்த்திமேயுவை இயேசு குணமாக்குதல் பார்வையற்ற பர்த்திமேயுவை இயேசு குணமாக்குதல் 

விவிலியத்தேடல்: பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் – பகுதி 3

நீங்காத்துயரங்கள் ஒழிந்து, புதுவாழ்வை கண்டுகொள்ளவேண்டும் என்று ஏங்கித் துடிக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் சிறந்ததோர் அடையாளம் பர்த்திமேயு

விக்டர் தாஸ் – வத்திக்கான்

பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் – பகுதி 3

பார்வையற்ற பர்த்திமேயு பார்வைபெறுதல் நிகழ்வை, ஒரு கற்பனைக்காட்சியாக  கண்முன்கொண்டு, அதில் வரும் கதாப்பாத்திரங்களை குறித்து சிந்தித்து வரும் நாம், இன்றைய தேடலில், நமது பார்வையை, இந்நிகழ்வின் மற்றொரு மையமாக விளங்கும், பார்வையற்ற பர்த்திமேயுவின் மேல் செலுத்தி,  நம் தேடல் பயணத்தை நிறைவுசெய்வோம்.

உயிருள்ள இறைவனாம் இயேசு கிறிஸ்துவை, உண்மையிலேயே கண்டுகொள்ள வேண்டும் என்றும், அதன்வழியாக தங்களின் தீராத்துன்பங்களும் நீங்காத்துயரங்களும் ஒழிந்து, புதுவாழ்வை கண்டுகொள்ளவேண்டும் என்றும், ஏங்கித் துடிக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் சிறந்ததோர் அடையாளம் பர்த்திமேயு என்றுசொன்னால், அது மிகையாகாது. தனது தனிமையான இருளிலும், ஆழ்ந்த வறுமையிலும், இயேசுவே மெசியா, தாவீதின் மகன் என்று நம்பியதோடுடல்லாமல், அதை உரக்கச்சொல்லி, உலகிற்கு உணர்த்திய பர்த்திமேயு, இயேசுவால் அழைக்கப்படுவதற்கு முன்பே, தன்னுடைய நற்செய்திப்பணியைத் துவங்கிவிட்டாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. பர்த்திமேயுவின் ஐந்து செயல்பாடுகள் குறித்து சிந்திக்க முயல்வோம்.

முதலாவதாக, பர்த்திமேயு தன்னுடைய கையாலாகாத் தண்மையை உணர்ந்து, அன்றாடப்பிழைப்பிற்காய் இரந்துண்ணும் தொழிலை செய்துகொண்டிருக்கிறார்.  இரண்டாவதாக, தன்னுடைய மனக்கண்ணால் கூர்ந்துநோக்கும் திறமையாலும், செவிப்புலனின் கூர்மையினாலும், தன்னைச்சுற்றி ஒரு மாற்றத்தை அல்லது ஒரு வித்தியாசமான சூழலை உணர்ந்து, அதுபற்றி வினவுகின்றார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், "இது என்ன?" என்று வினவினார். (லூக்கா 18:36)

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், எப்படி, இயேசு, மக்கள் கூட்டத்தில், கடும் இரைச்சலுக்கு மத்தியில், பர்த்திமேயுவின் குரலைக் கேட்டாரோ, அதேபோல், பர்த்திமேயுவும், இயேசுவின் தெய்வீக குரலைக்கேட்டிருக்கவேண்டும், அல்லது, இயேசு, அவரை நெருங்கும்போது, அவரது இறைபிரசன்னத்தை உணர்ந்திருக்கவேண்டும்; எனவேதான், பர்த்திமேயு, ‘இது என்ன?’ என்று கேட்டிருக்கிறார்.

எரியும் புதரில் மோசேயையும், வீசும் காற்றில் எலியாசையும், இடியின் ஒலியில் திருத்தூதர் பவுலையும் ஆட்கொண்ட, அல்லது, அழைத்த இறைப்பிரசன்னம், பர்த்திமேயுவையும் ஆட்கொண்டிருக்கவேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவருக்கு பார்வை இல்லை என்றாலும், அவர் தனது செவிப்புலனை நன்கு பயன்படுத்திக் கொண்டார். அதுபோல, நம்மிடம் எல்லாத்திறமைகளும் இல்லையென்றாலும், நம்மிடம் இருப்பதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது, பர்த்திமேயு நமக்கு சொல்லித்தரும் பாடம்.

மூன்றாவதாக, பர்த்திமேயு, தன்மீது இரக்கம் காட்டும்படி, இயேசுவை அழைக்கின்றார். இந்நிகழ்வைப் பதிவு செய்யும்போது, ஒத்தமை நற்செய்தியாளர்கள், ஒரே பொருள்தரும் இரு சொற்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது, நற்செய்தியாளர்கள் மாற்கு, மற்றும், மத்தேயு அகிய இருவரும், "கத்துதல்" என்ற சொல்லையும், நற்செய்தியாளர் லூக்கா, "கூக்குரலிடுதல்" என்ற சொல்லையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. இவை இரண்டுமே, தேவையின் அடிப்படையில் எழக்கூடிய, அல்லது, எழுப்பப்படக்கூடிய உணர்வு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இங்கே, கத்துதல் அல்லது கூக்குரலிடுதல் என்பது, பர்த்திமேயுவினுடைய ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடு என  நாம் புரிந்துகொள்ளமுடிகிறது.

நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார். (மாற்கு 10:47,48)

உண்மையான, ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கை என்பது, எத்தனை இடர்வரினும், மென்மேலும் ஆழப்படக்கூடியது, அல்லது, எத்தனை தடைகள் வந்தாலும், துளிர்க்கக்கூடியது என்பதற்கு, பார்வையற்ற பர்த்திமேயுவின் நம்பிக்கை, மிகச்சிறந்ததோர் எடுத்துக்காட்டு. எந்த அளவிற்கு பேசாதிருக்குமாறு அதட்டினார்களோ, அந்தளவிற்கும் அதிகமாகவே, எப்படியாவது இயேசுவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுவிடவேண்டும் என்று, பர்த்திமேயு விடாமுயற்சியோடு இருந்தார் என்பதை நாம் உணரமுடிகிறது.

The Fourfold Gospel விவிலிய விளக்கவுரை, பர்த்திமேயுவின் இச்செயலைப்பற்றி விளக்கும்போது, பழைய ஏற்பாட்டில், இறைமனிதரோடு யாக்கோபு மேற்கொண்ட மற்போரில், யாக்கோபு, "நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்" என்று விடியுமட்டும் மற்போரிட்டு ஆசீரை பெற்றுக்கொண்ட நிகழ்வோடு (தொடக்கநூல் 32: 24-26) ஒப்பிட்டு, யாக்கோபின் அதே மனநிலை பர்திமேயுவை  நிறைத்திருந்தது என்று குறிப்பிடுகிறது.

நான்காவதாக, இயேசு தன்னை அழைக்கிறார் என்றதும், பர்த்திமேயு குதித்தெழுந்து, இயேசுவிடம் செல்கிறார். மாற்கு நற்செய்தியாளர் மிக அழகாக இதை பதிவுசெய்கிறார். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். (மாற்கு 10:50)

துள்ளிக்குதித்தல் என்பது மகிழ்ச்சியின் அடையாளம். அதுவும் பல துன்பங்களுக்கு இடையில், நாம் விரும்பிய ஒன்று, வெகு நாட்கள் காத்திருந்து கிடைக்கும்போது, அது நம்மில் ஏற்படுத்தும் களிப்பு, நம்மை துள்ளிக்குதிக்கச் செய்யும். பார்த்திமேயு அத்தகைய ஒரு அனுபவத்தால் ஆள்கொள்ளப்பட்டார் என்பது, வெள்ளிடைமலை. காலம் காலமாய் காத்திருந்த மீட்பராம் இயேசு, அன்னை மரியாவின் வயிற்றில் கருவுற்றிருக்கிறார் என்பதை அறிந்து, எலிசபெத்தம்மாளின் வயிற்றில் குழந்தை பேருவகையால் துள்ளியதை (லூக்கா 1 : 44) நாம் இங்கு நினைவுக்கூர்தல் நன்று.

பர்த்திமேயு, தன்னுடைய மேலுடையை எறிந்துவிட்டு, இயேசுவிடம் வந்தது, தான் இதுவரை வாழ்ந்துவந்த இருள் வாழ்விலிருந்து, இயேசு தரவிருக்கும் அருள் வாழ்விற்குள் நுழைவதன் அடையாளமாக நாம் கண்ணோக்கலாம்.  ‘இவன் குருடன், இவன் ஒன்றுக்கும் உதவாதவன், இவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்’ என்பது போன்ற பரிகாச வார்த்தைகளை, தன்மேல் ஆடையாய் சுற்றிக்கொண்டிருந்த பர்த்திமேயு இனி இந்த மேலுடை தேவையில்லை என்றுச்சொல்லி தூக்கியெறிந்துவிட்டு, இயேசு தரும் புதுவாழ்வை, புத்தாடையாய் அணிந்துகொள்ள இயேசுவிடம் வருகிறார்.  இதன்மூலம், நாமும் இயேசுவிடம் வருவதற்கு நம்மில்  தடையாக இருக்கின்ற பாவம் உள்ளிட்ட அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வரவேண்டும் என்பதை பர்த்திமேயு நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

ஐந்தாவதாக, பர்த்திமேயு தன்னுடைய விருப்பத்தை இயேசுவிடம் தெரிவித்து பார்வைப்பெற்று இயேசுவைப் பின்தொடர்கின்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். (மாற்கு 10:50)

வயிற்றுப்பிழைப்பிற்காய் இரந்துண்ணும் பர்த்திமேயுவிடம், ‘உமக்கு நான் என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்?’ என்று இயேசு கேட்டபோது பர்த்திமேயுவின் மனதில் எதைக்கேட்பது ‘பணமா? குணமா?’ என்ற தடுமாற்றம் இருந்திருக்கக்கூடும். ஆனால், பர்த்திமேயு, குணம் வேண்டும் என்று சொல்லி, பார்வையை பெற்றுக்கொண்டதோடல்லாமல், இயேசுவை, இறைவனை, முகமுகமாய் தரிசிக்கும் பாக்கியத்தையும் பெற்றுக்கொள்கிறார்.  இயேசு, வழியோரத்தில் அமர்ந்திருந்தவரை தன் வழியில், தன்னைப் பின்தொடர செய்கின்றார். பார்வை கொடுத்து, புதுவாழ்வு வழங்கிய இயேசுவுக்கு, தன் வாழ்வை அர்ப்பணிக்கும் விதமாய், பர்த்திமேயு, இயேசுவைப் பின்பற்றி, அவருடன் வழிநடந்து சென்று, நமக்கு ஒரு நற்சான்றாக  விளங்குகிறார்.   

பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் நிகழ்வு, நம் அன்றாட வாழ்வில் நிறைவைக்காண, நம்மைச்சுற்றி நிகழும் செயல்பாடுகளில் அக்கறை கொண்டவர்களாக இருந்து, எப்பொழுதும் இறையுதவி நாடி, நமது விருப்பங்களில் மகிழ்ச்சியை கண்டுகொள்ளவும், இறைவனின் குரல் கேட்டு அதன்படி இறைவழி நடக்கவும் அழைப்புவிடுக்கிறது.

22 October 2019, 16:00