தேடுதல்

Vatican News
இயேசு, மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். - மாற்கு 1,22 இயேசு, மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். - மாற்கு 1,22 

விவிலியத்தேடல்: தீய ஆவி பிடித்தவர் குணமாதல் – பகுதி 1

‘அதிகாரம்’ என்பது, நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்கமுடியும், தீர்க்கவும் முடியும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தீய ஆவி பிடித்தவர் குணமாதல் – பகுதி 1

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள பொதுவான 12 புதுமைகளில், இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து, நாம், விவிலியத் தேடலை மேற்கொண்டோம். கடந்த 40 வாரங்களுக்கும் மேலாக, நமது தேடல் பயணம் தொடர்ந்துள்ளது. இந்த 12 புதுமைகளில், இறுதி இரு புதுமைகளை மையப்படுத்தி, கடந்த 6 வாரங்கள், நம் தேடல் பயணத்தை வழிநடத்தியவர், அருள்பணி விக்டர் தாஸ். அவருக்கு, வத்திக்கான் வானொலி குடும்பத்தினர் சார்பில் நன்றி.

12 பொதுவானப் புதுமைகளைத் தொடர்ந்து, இந்த மூன்று நற்செய்திகளில் ஏதாவது இரண்டில், அதாவது, மத்தேயு-மாற்கு, அல்லது, மாற்கு-லூக்கா, அல்லது, லூக்கா-மத்தேயு என்று, இரு நற்செய்திகளில், சொல்லப்பட்டுள்ள 5 புதுமைகளில், நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.

நாம் இதுவரை சிந்தித்த 12 பொதுவானப் புதுமைகள், மாற்கு நற்செய்தியில் எந்த வரிசையில் பதிவுசெய்யப்பட்டிருந்தனவோ, அதை அடித்தளமாகக் கொண்டு, நம் தேடல் பயணத்தை மேற்கொண்டோம். அந்த வரிசையில், முதல் பொதுவானப் புதுமை, சீமோன் பேதுருவின் மாமியாரை இயேசு குணமாக்கும் புதுமை என்றும், இப்புதுமை, கப்பர்நாகும் ஊரில் நிகழ்ந்ததென்றும் குறிப்பிட்டோம். கப்பர்நாகும் ஊரில், பேதுருவின் வீட்டில் நிகழ்ந்த இப்புதுமைக்கு முன்னதாக, அதே ஊரின் தொழுகைக்கூடத்தில், இயேசு ஆற்றிய ஒரு புதுமையை, நற்செய்தியாளர்கள் மாற்கும், லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர். இயேசு ஆற்றிய முதல் புதுமையாக, இவ்விரு நற்செய்தியாளர்களும் கூறும் அப்புதுமையில் – தீய ஆவி பிடித்த ஓருவரை இயேசு குணமாக்குகிறார். இப்புதுமையில் நம் தேடலை இன்று துவங்குகிறோம்.

மாற்கு நற்செய்தியின் முதல் பிரிவு, திருமுழுக்கு யோவான் முழங்கும் உரையுடன் ஆரம்பமாகி, இயேசுவின் திருமுழுக்கு, சோதனைகள், சீடர்களை அழைத்தல் என்ற மூன்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. இவற்றைத் தொடர்ந்து, கப்பர்நாகும் ஊரில், தொழுகைக்கூடத்தில் நிகழ்ந்த இப்புதுமை கூறப்பட்டுள்ளது.

லூக்கா நற்செய்தியிலோ, இயேசுவின் பிறப்பு, குழந்தைப்பருவ நிகழ்வுகள், மற்றும் திருமுழுக்கு பெறுதல் ஆகிய நிகழ்வுகள், முதல் மூன்று பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தொடர்ந்து, நான்காவது பிரிவின் முதல் பகுதியில், பாலை நிலத்தில், இயேசு சந்தித்த சோதனைகள், அவர் வளர்ந்த ஊரான நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில் வழங்கிய உரை, மற்றும், அதனால் எழுந்த எதிர்ப்பு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. தான் வளர்ந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படாத இயேசு, கப்பர்நாகும் ஊரில், தொழுகைக்கூடத்தில், தன் முதல் புதுமையை ஆற்றினார் என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்.

இப்புதுமையை, நான்கு பகுதிகளாகப் பிரித்து, நம் தேடலை மேற்கோள்வோம். 1 - அறிமுகப்பகுதி; 2 - தீய ஆவி பிடித்தவரின் அறிக்கை; 3 - தீய ஆவி பிடித்தவர் நலம் பெறுதல்; 4 – இப்புதுமை, மக்களிடம் உருவாக்கிய வியப்பு என்று, நான்கு பகுதிகளில் நாம் சிந்திப்போம்.

இப்புதுமையின் அறிமுகப்பகுதியில், நற்செய்தியாளர்கள் மாற்கும், லூக்காவும் ஏறத்தாழ ஒரேவிதமான சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். இப்புதுமையின் அறிமுகப்பகுதியை, மாற்கு நற்செய்தியிலிருந்து கேட்போம்:

மாற்கு 1: 21-22 (லூக்கா 4: 31-32)

அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

ஓய்வுநாள்களில், இயேசு, தொழுகைக்கூடத்தில் கற்பித்தது, அவரது போதனை, மக்களை வியப்பில் ஆழ்த்தியது, அவர் அதிகாரத்தோடு கற்பித்தது என்ற மூன்று அம்சங்கள், மாற்கு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளிலும் ஒரே விதமாகக் கூறப்பட்டுள்ளன. இயேசு அதிகாரத்தோடு கற்பித்தார் என்பதை வலியுறுத்த, நற்செய்தியாளர் மாற்கு, கூடுதலாக ஒர் ஒப்புமையை பயன்படுத்தியுள்ளார்.

தொழுகைக்கூடத்தில் மக்களுக்கு கற்பித்துவந்த மறைநூல் அறிஞர்களைப் போல அல்லாமல், தனித்துவம் மிக்க அதிகாரத்துடன் இயேசு கற்பித்தது, மக்களை வியப்படையச் செய்தது என்பதை, அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார் என்று சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார் மாற்கு. இயேசு பெற்றிருந்த அதிகாரம் எத்தகையது என்பதை சிந்திப்பது, நமக்கு ஒரு சில வாழ்வுப் பாடங்களைச் சொல்லித்தரக்கூடும்.

‘அதிகாரம்’ என்ற சொல்லைக் கேட்டதும், இன்றைய உலகை, தங்கள் அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கும் ஒரு சில தலைவர்களின் உருவங்கள் நம் நினைவுகளில் தோன்றியிருக்கும். இந்தத் தலைவர்கள், அதிகாரம் என்ற சொல்லுக்கு, தவறான இலக்கணம் வகுத்துக்கொண்டிருப்பவர்கள். இவர்களை, நமது ஊடகங்கள், மீண்டும், மீண்டும் நம்மீது திணிப்பதால், அதிகாரம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகமும், கலக்கமும் நமக்குள் உருவாகின்றன.

உலகில் இன்று 195 நாடுகள் உள்ளன. இவற்றில் அரசுத் தலைவர்களாகவும், பிரதமர்களாகவும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ 300 இருக்கும். இவர்களில், உலகினரின் கவனத்தை அடிக்கடி ஈர்ப்பது, ஒரு சில நாடுகளின் தலைவர்களும், பிரதமர்களும் மட்டுமே. ஊடகங்களால், மீண்டும், மீண்டும், வெளிச்சமிட்டுக் காட்டப்படும் இந்தத் தலைவர்கள், தங்கள் ஆணவத்தால், தொடர்ந்து தவறுகள் செய்வதை, ஊடகங்கள் பேசி வருகின்றன. "Power corrupts; absolute power corrupts absolutely" அதாவது, "அதிகாரம், கேடு விளைவிக்கிறது; முழுமையான அதிகாரம், கேட்டினை, முழுமையாக விளைவிக்கின்றது" என்ற ஆங்கிலக் கூற்றின் எடுத்துக்காட்டுகளாக வாழும் இத்தலைவர்கள், ‘அதிகாரம்’ என்ற சொல்லுக்கு தவறான இலக்கணங்களாகத் திகழ்கின்றனர்.

‘அதிகாரம்’ என்று தமிழில் பயன்படுத்தப்படும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச் சொல்லுக்கு Oxford அகராதியில் வேறுபட்ட இரு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம் என்ற அம்சங்களைக் கொண்டது. இரண்டாவது வகை அர்த்தம்தான், நாம் இன்று சிந்திக்க வேண்டியது. இதில், Authority என்ற வார்த்தைக்கு ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’ என்று அர்த்தம் தரப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் தனது அறிவு, பண்பு ஆகியவற்றால், பிறர் மீது நேர்மறை தாக்கங்களை உருவாக்கும் திறமையே Authority என்ற சொல்லின் இரண்டாவது அர்த்தம்.

இந்த இரண்டாவது அர்த்தத்தை வார்த்தைகளால் விளக்குவதற்குப் பதில், ஒரு கற்பனைக் காட்சியின் வழியே புரிந்துகொள்ள முயல்வோம். உயர்ந்த பதவியில் இருக்கும் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள் ஒவ்வொரு தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும், அவர்களைச்சுற்றி பாதுகாப்பிற்காக, பலர் வருவர். அந்தத் தலைவரைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், கரவொலி எழுப்ப வேண்டியிருக்கும்.

அந்நேரம், அந்த அரங்கத்திற்குள், புனித மதர் தெரேசா, அல்லது, காந்தியடிகள், அல்லது, மக்களின் மனங்களில் உயர்ந்த இடம் பிடித்திருக்கும் ஓர் உன்னத மனிதர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி அறிவிப்புக்கள் தேவையில்லை, அவரைச்சுற்றி பலர் நடந்து வரவும் தேவையில்லை. அவர் அங்கு நுழைந்ததும், அந்த அரங்கத்தில் உருவாகும் மரியாதை, தனிப்பட்ட வகையில் இருக்கும். அங்கு இருப்பவர்கள், எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல், எழுந்து நிற்பார்கள். கரவொலி எழுப்புவதற்குப் பதில், அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள். இதுதான் உள்ளூர உருவாகும் மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம், அந்த மாமனிதர்கள் நம் உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான் 'Authority' என்ற வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது வகையான அர்த்தம்.

இந்த இரண்டாவது வகையில் மற்றோர் அம்சமும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான புலமைத்துவம், அந்தப் புலமைத்துவத்தின் அடிப்படையில் அதைப் பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ அவர் சுயமாகப் பெறும் அதிகாரம்... இது, இந்த இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றோர் அம்சம். பல ஆண்டுகள், பல்லாயிரம் சோதனைகளை மேற்கொண்டு, பல நூறு தோல்விகளைச் சந்தித்து, மின்விளக்கை உருவாக்கியவர், தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை நாம் அறிவோம். மின்விளக்கைப் பற்றிப் பேச இவரைவிட யாருக்கு அதிகாரம் இருக்கமுடியும்? எடிசன் எந்த ஒரு பள்ளியிலும் பயின்றதாகத் தெரியவில்லை. கல்வி பயிலவே அருகதையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர், தன் சொந்த படைப்பாற்றல் கொண்டு 1000க்கும் அதிகமான கண்டுபிடிப்புக்களை உலகறியச் செய்தார். தன் கண்டுபிடிப்புக்களைப் பற்றி பேசும் அதிகாரமும் பெற்றார்.

‘அதிகாரம்’ என்பது, நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்கமுடியும், தீர்க்கவும் முடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல பிரச்சனைகளை உருவாக்கியவண்ணம் உள்ளது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகளால் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது உயர்ந்த அறிவு இவற்றைக் கொண்டு ஒருவர் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம், அவரது வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில், பொதுவாக, ஆணவம் இருக்காது. அடுத்தவரை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆவல் இருக்காது. ஒருவர் சுயமாக தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மன சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும்.

இயேசுவின் அதிகாரம், இந்த வகையைச் சார்ந்தது. அவர் எந்த ஒரு குருவிடமோ, பள்ளியிலோ பயிலவில்லை. இறைவனைப்பற்றி தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்தவற்றை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். எனவே, அவர் சொன்னவை, மக்களை வியப்பில் ஆழ்த்தின. மோசேயின் சட்டங்களிலிருந்து, மனப்பாடம் செய்தவற்றைச் சொல்வதுபோல், மறைநூல் அறிஞர்கள் கூறிவந்த பாடங்களுக்கும், இயேசு தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும் வேறுபாடுகள் இருந்தன. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர் இந்த அதிகாரத்துடன் போதித்தார்.

மக்களுக்கு கற்பிப்பதற்காக இயேசு பயன்படுத்திய இந்த அதிகாரத்தை இன்னும் சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ளவும், அந்த அதிகாரத்தால், கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புக்களையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

29 October 2019, 14:57