தேடுதல்

"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) 

பொதுக்காலம் - 30ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

தன் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய அம்சங்கள், உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில், அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது, இன்னும் உயர்ந்ததொரு மனநிலை.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 30ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

அக்டோபர் 27, இஞ்ஞாயிறன்று, தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில், இறைவன், அனைவருக்கும், ஒளிமிகுந்த வாழ்வை வழங்கவேண்டுமென வாழ்த்துகிறோம், வேண்டுகிறோம்.

‘ஒளிமிகுந்த வாழ்வு’ என்பதை, செல்வம் நிறைந்த, ஒளிமயமான எதிர்காலம் என்ற கோணத்தில் மட்டும் எண்ணிப்பார்க்காமல், உள்ளங்களில் அறிவொளி பெறுவதையும் எண்ணிப்பார்க்க, இந்தத் திருநாள் நம்மை அழைக்கிறது. அறிவொளி பெற்றவர்களாய், தீபாவளியை, அர்த்தமுள்ள வகையில் எவ்விதம் கொண்டாடுவது என்பதைக் கூறும் சில காணொளித் தொகுப்புகள், சமூக வலைத்தளங்களில் வலம் வந்தவண்ணம் உள்ளன. அவற்றில் ஒன்று, பின்வரும் காட்சியைச் சித்திரிக்கிறது:

இளைஞர் ஒருவர், சில 100 ரூபாய் நோட்டுக்களை, சாலையோரமாக அடுக்கிவைக்கிறார். பின்னர் ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து, அந்த ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்துகிறார். அந்நேரம், அவ்வழியே, ஒரு வீட்டுத்தலைவர், தீபாவளிக்கென வாங்கிய பட்டாசு, மத்தாப்பு பைகளைச் சுமந்தவண்ணம் வருகிறார். ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்திக் கொண்டிருக்கும் இளைஞரைத் தடுக்க முயற்சி செய்கிறார், அம்மனிதர். "சார், இப்படி பணத்தை நெருப்புவைத்து கொளுத்துகிறீர்களே, உங்களுக்கென்ன புத்தி கெட்டுப்போச்சா?" என்று கேட்கும் அவரிடம், பையிலிருக்கும் பட்டாசு கட்டுகளைக் காட்டி, "நீங்க செய்வது மட்டும் புத்தியுள்ள செயலா?" என்று திருப்பிக் கேட்கிறார், இளையவர். தன் கையிலிருந்த பட்டாசுக் கட்டுக்களை, கேள்விக்குறியுடன் பார்க்கும் அந்த வீட்டுத்தலைவரிடம், "சாம்பலாகும் இந்தப் பட்டாசுகளுக்கு நீங்கள் செலவழித்தப் பணத்தைக் கொண்டு, எத்தனையோ வறியோர் வீடுகளில் ஒளியேற்றியிருக்க முடியும். தீபாவளியைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் அவர்களுக்கு, உடையும், உணவும் வாங்கித் தந்திருக்கலாமே" என்று கூறுகிறார் இளைஞர்.

வறியோரின் இல்லங்களில் நம்பிக்கை ஒளியேற்ற, தீபாவளி ஒரு தகுந்த தருணம் என்பதை இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்ற மன்றாட்டுடன் இன்றைய சிந்தனைகளைத் துவக்குவோம்.

அக்டோபர் 27, இஞ்ஞாயிறன்று, மற்றொரு முக்கிய நிகழ்வு, வத்திக்கானில் இடம்பெறுகிறது. அமேசான் பகுதியை மையப்படுத்தி, அக்டோபர் 6ம் தேதி துவங்கிய ஆயர்களின் சிறப்பு மாமன்றம், இந்த ஞாயிறு நிறைவுபெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை, தன் குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாமன்றம், தீபாவளித் திருநாளன்று நிறைவு பெறுவது, பொருத்தமாக உள்ளது. தீபாவளிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், இடையே உள்ள தொடர்பை நினைவுறுத்துகிறது.

சுற்றுச்சூழலை சீரழிக்காமல், பறவைகளையும், மிருகங்களையும் துன்புறுத்தாத வண்ணம் தீபாவளியைக் கொண்டாடமுடியும் என்பதற்கு, தமிழ்நாட்டின் ஒருசில கிராமங்களில் வாழும் மக்கள், நமக்கு வழிகாட்டிகள். காசைக் கரியாக்காமல், வறியோரின் வயிற்றை நிரப்பி, சுற்றுச்சூழலை சீரழிக்காமல், பிற உயிரினங்களை வதைக்காத வண்ணம் தீபாவளியைக் கொண்டாடும்போது, அது உண்மையில் ஒளி மிகுந்த வாழ்வை அனைவருக்கும் உருவாக்கும்.

தீபாவளித் திருநாளை அடையாளப்படுத்தும் தீபங்கள், இஞ்ஞாயிறு வழிபாட்டு வாசகங்களுடன் நம்மைத் தொடர்பு படுத்துகின்றன. ஏற்றப்படும் தீபம், தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஒளிர்விப்பதை, தன் பணியாகக் கொண்டுள்ளது. தான் எவ்வளவு தூரம் ஒளிவிடுகிறோம் என்பதை மக்கள் காணவேண்டும் என்பதற்காக விளக்குகள் எரிவதில்லை. தான் எரிந்து, தன்னைச் சுற்றியுள்ள உலகை ஒளிர்விக்கும் விளக்கு, பணிவுக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. ஒளியின் திருநாளன்று, பணிவுப்பாடங்களைக் கற்றுக்கொள்ள, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில், ஒன்றன்பின் ஒன்றாகக் கூறப்பட்டுள்ள இரு உவமைகள், (லூக்கா 18:1-8; 18:9-14) சென்ற ஞாயிறும், இந்த ஞாயிறும் நமக்கு நற்செய்தி வாசகங்களாக அமைந்துள்ளன. "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்" என்று, இன்றைய உவமையை, இயேசு ஆரம்பிக்கிறார். இறைவன், கோவில், வேண்டுதல் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வுவமை, செபிப்பது பற்றிய ஒரு பாடம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், பணிவு என்ற பாடத்தைச் சொல்லித்தரவே, இயேசு, இந்த உவமையைச் சொன்னார் என்பதை, இவ்வுவமையின் அறிமுக வரிகள் நமக்குச் சொல்கின்றன: தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார் (லூக்கா 18: 9) என்று நற்செய்தியாளர் லூக்கா இவ்வுவமையை அறிமுகம் செய்துள்ளார்.

சென்ற ஞாயிறன்று நாம் சிந்தித்த 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற உவமையை இயேசு சொன்னதற்கான காரணத்தை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறியிருந்தார்: "அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்" (லூக்கா 18: 1).

சென்றவாரம் நாம் சிந்தித்த உவமையில், இடைவிடாமல் செபிக்கவேண்டும் என்ற பாடத்தை மட்டும் அல்ல, கூடுதலாக ஒரு பாடத்தையும் இயேசு சொல்லித்தந்தார் என்பதை உணரலாம். அதாவது, வீதியோரம், நீதிமன்றம், இறை நம்பிக்கையற்ற நடுவரின் வீட்டு வாசல் என்று, எவ்விடமானாலும், அங்கெல்லாம் இறைவனிடம் செபிக்கமுடியும் என்பதை, சென்ற வார உவமையின் வழியாகச் இயேசு சொல்லித் தந்துள்ளதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த வார உவமையில், தற்பெருமையுடன் வாழ்வது தவறு என்ற கருத்தை வலியுறுத்த, இயேசு, கோவிலை, தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார். பொதுவாக, தற்பெருமை தாராளமாக வெளிவரும் இடங்களான, அறிஞர்கள் அவை, அரண்மனை, அரசியல் மேடை, விளையாட்டுத் திடல் போன்ற கதைக்களங்களைப் பயன்படுத்தாமல், ஒரு கோவிலை தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார் இயேசு.

உள்ளம் என்ற கோவிலில் இறைவன் குடியிருந்தால், நாம் செல்லும் இடமெல்லாம் புனித இடங்களாகும்; அங்கெல்லாம் நம்மால் செபிக்கமுடியும். அதேநேரம், புனித இடம் என்று கருதப்படும் கோவிலே என்றாலும், அங்கு செல்லும் நம் உள்ளத்தில், 'நான்' என்ற அகந்தை நிறைந்திருந்தால், கோவிலும் சுயவிளம்பர அரங்கமாக மாறும். அங்கு நம்மை நாமே ஆராதனை செய்துவிட்டுத் திரும்புவோம் என்ற எச்சரிக்கை, இந்த உவமையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றில், ஓர் இளம் அருள்பணியாளர், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பீடத்திற்கருகே, பளிங்கினால் செய்யப்பட்ட அன்னை மரியாவின் உருவச் சிலை வைக்கப்பட்டிருந்தது. வயதான ஒரு பெண்மணி, அந்த உருவச் சிலைக்கு முன், அன்னையின் அழகிய முகத்தை உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தார். ஒவ்வொரு நாளும், அன்னையின் உருவத்திற்கு முன், அந்தப் பெண், இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்ட இளம் அருள்பணியாளர், அத்திருத்தலத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த வயதான அருள்பணியாளரிடம் சென்று, அந்தப் பெண்ணின் பக்தியைப் பற்றி பாராட்டிப் பேசினார்.

அவர் கூறியதைக் கேட்ட அந்த வயதான அருள்பணியாளர், ஒரு புன்சிரிப்புடன், "சாமி, நீங்கள் இப்போது காண்பதை வைத்து ஏமாறவேண்டாம். பல ஆண்டுகளுக்கு முன், இந்த ஊரைச் சேர்ந்த சிற்பி ஒருவர், அன்னை மரியாவின் சிலையைச் செதுக்க, ஓர் அழகிய இளம்பெண்ணை 'மாடலாக'ப் பயன்படுத்தினார். அந்த இளம்பெண்தான் நீங்கள் இப்போது காணும் அந்த வயதானப் பெண்மணி. அவர் ஒவ்வொருநாளும், அன்னையின் திரு உருவத்திற்கு முன் அமர்ந்திருப்பது, பக்தியால் அல்ல. மாறாக, அவர், தன் இளமையையும், அழகையும் ஆராதிக்கவே அங்கு அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.

புனிதம் நிறைந்த ஆலயத்தில், வழிபாட்டில் கலந்துகொள்வோரும், வழிபாட்டை நடத்துவோரும், இறைவனுக்கு முன், அன்னை மரியாவுக்கு முன், புனிதர்களுக்கு முன், தங்களையே ஆராதிக்க முடியுமா? முடியும் என்று இயேசு, இன்றைய உவமை வழியே நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) என்ற வார்த்தைகளுடன், இயேசு, இந்த உவமையைத் துவக்கியதும், சூழ இருந்த மக்கள், கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி முடித்திருப்பர். பரிசேயர் இறைவனின் ஆசீர் பெற்றிருப்பார்; வரிதண்டுபவர், இறைவனின் கண்டனத் தீர்ப்பைப் பெற்றிருப்பார் என்ற மனநிலையோடு கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களின் எண்ணங்களை, தலைகீழாகப் புரட்டிப்போட்டார், இயேசு.

இந்தத் தலைகீழ் மாற்றம் உருவாகக் காரணம், இவ்விருவரும் தங்களைப்பற்றி கொண்டிருந்த தன்னறிவு; அதன் விளைவாக, அவர்கள் இறைவனிடம் கொண்ட உறவு. இவ்விருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயரும், வரிதண்டுபவரும் கூறிய வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன:

பரிசேயர் சொன்னது, 27 வார்த்தைகள். வரிதண்டுபவர் சொன்னதோ, 4 வார்த்தைகள். இருவரும் 'கடவுளே' என்ற வார்த்தையுடன் ஆரம்பித்தனர். இந்த முதல் வார்த்தையைக் கேட்டதும், இதைத் தொடரும் வார்த்தைகள், செபமாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், பரிசேயர் பயன்படுத்திய ஏனைய வார்த்தைகளில், அவர் சொன்னது, சுய விளம்பரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சுய விளம்பரத்தில் அவர், தன்னை, பிறரோடு ஒப்பிட்டுப்பேசிய வார்த்தைகளே அதிகம் (16). வரிதண்டுபவரோ, தன்னை யாரோடும் ஒப்பிடாமல், 'தான் ஒரு பாவி' என்பதை மட்டும் நான்கு வார்த்தைகளில் கூறியுள்ளார்.

பரிசேயரின் கூற்று, இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப, அவர் மேற்கொண்ட முயற்சி. சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன்மேல் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆவலில், பரிசேயர், கடவுளுக்கே கடிவாளம் மாட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இதற்கு மாறாக, வரிதண்டுபவர், தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான், இதுதான் நான், இவ்வளவுதான் நான்." வரிதண்டுபவர் கூறிய நான்கு சொற்கள், வானத்தைப் பிளந்து, இறைவனை அடைந்தன. இதையே, இன்றைய முதல் வாசகத்தில், சீராக்கின் ஞானம் அழகாகக் கூறியுள்ளது: "தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை." (சீராக் 35:17)

தன் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய அம்சங்கள், உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில், அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது, இன்னும் உயர்ந்ததொரு மனநிலை. எனவே இயேசு, வரிதண்டுபவரை உயர்த்தி, பரிசேயரை தாழ்த்தி, தன் உவமையை நிறைவு செய்தார்: “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” (லூக்கா 18: 14)

இந்த உவமையைக் கேட்கும் வேளையில், 'கடவுளே, நான் அந்த பரிசேயரைப்போல் இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்' என்ற எண்ணம், ஒரு செபத்தின் வடிவில், நம் உள்ளத்திலிருந்து எழ வாய்ப்புண்டு. அப்படி எழுந்திருந்தால், நமக்கும், அந்தப் பரிசேயருக்கும் வேறுபாடு இல்லை என்ற கசப்பான உண்மையை, இயேசு நம்மை நோக்கி கூறியிருப்பார்.

தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது தாழ்ச்சி. இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். “தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தனையில் பதிக்கிறார், திருவள்ளுவர்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல், தன்னை எரித்து பிறருக்கு ஒளியூட்டும் விளக்கை மையமாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளன்று, பணிவான மனதோடு பணியாற்றும் பாடத்தை, தீபங்களிடமிருந்து கற்றுக்கொள்ள இறைவன் நமக்குத் துணை செய்வாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2019, 13:46