தேடுதல்

Vatican News
'சிறப்பான மறைபரப்புப்பணி மாதமாக'க் கொண்டாடப்படும் அக்டோபர் மாதம் 'சிறப்பான மறைபரப்புப்பணி மாதமாக'க் கொண்டாடப்படும் அக்டோபர் மாதம் 

பொதுக்காலம் - 29ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

மறைபரப்புப் பணியில், இறைவனைப் பறைசாற்றுதல் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இறைவனை நோக்கி எழுப்பப்படும் செபங்களும் முக்கியம் என்பதை நாம் ஆழமாக உணர, இந்த ஞாயிறன்று செபத்தைப் பற்றிய வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 29ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

அக்டோபர் 20, இஞ்ஞாயிறன்று, உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களாகிய நாம், 'மறைபரப்புப்பணி ஞாயிறை'க் கொண்டாடுகிறோம். பொதுவாக, எந்த ஒரு திருநாளையும் பற்றி குறிப்பிடும்போது, அத்திருநாளை கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடுகிறது என்றே நாம் பெரும்பாலும் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறும்போது, அந்தத் திருநாளில் நாம் பங்கேற்பாளர்களாக இல்லாமல், பார்வையாளர்களாக மாறும் உணர்வைப் பெறுகிறோம். இந்த வழக்கத்திற்கு மாறாக, 'மறைபரப்புப்பணி ஞாயிறை' நாம் கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, இந்தத் திருநாளில் நாம் முழுமையாகப் பங்கேற்கும் உணர்வைப் பெற வாய்ப்பு உண்டு. உண்மையிலேயே, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டிய திருவிழா இது!

மறைபரப்புப்பணி என்றதும், அது, ஆயர்கள், குருக்கள், துறவியருக்கென ஒதுக்கப்பட்ட பணி என்று எண்ணி, நம்மில் பலர் ஒதுங்கிவிடக்கூடும். ஆனால், இந்த நாளைக் குறிக்க, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Mission Sunday, அதாவது, “அனுப்பப்படும் ஞாயிறு” என்ற பதம், இந்நாளைக் குறித்த தெளிவுகளைத் தருகிறது.

இவ்வாண்டின் மறைபரப்புப்பணி ஞாயிறுக்கென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்கு, “Baptized and Sent” அதாவது, "திருமுழுக்கு பெற்று, அனுப்பப்பட்ட..." என்று தலைப்பிட்டுள்ளார். இச்செய்திக்கு, "அருள்பொழிவு பெற்று அனுப்பப்பட்ட..." என்று தலைப்பிட்டிருந்தால், அது, அருள்பொழிவு பெற்றுள்ள பணியாளர்களை குறிக்கும். ஆனால், மறைபரப்புப்பணி, திருமுழுக்கு பெற்ற அனைவருக்கும் உரியது என்பதை தெளிவுபடுத்த, இத்தலைப்பைத் தெரிவுசெய்துள்ளார் திருத்தந்தை.

அக்டோபர் 13, கடந்த ஞாயிறு, வத்திக்கானில் புனிதராக உயர்த்தப்பட்ட ஐவரில் ஒருவர், கர்தினால் ஜான் ஹென்றி நியூமன். அவர் தனது தியான உரை ஒன்றில் கூறிய சொற்கள் நம் நினைவில் அலைமோதுகின்றன: "ஒரு தனிப்பட்ட பணியை ஆற்றுவதற்கென்று கடவுள் என்னைப் படைத்துள்ளார். மற்றவர்கள் யாரிடம் ஒப்படைக்காத ஒரு தனிப்பட்ட பணியை அவர் என்னிடம் மட்டுமே ஒப்படைத்துள்ளார்." என்று புனித நியூமன் கூறியுள்ளார்.

மனிதராய் பிறந்த நாம் ஒவ்வொருவரும், இவ்வுலகில் தனிப்பட்டதொரு பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை, இந்த நாள் நமக்கு நினைவுறுத்துகிறது. "உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், இறைவனிடமிருந்து வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும், 'இறைவன் மனிதரைக் குறித்து இன்னும் களைப்படையவில்லை' என்ற செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது" என்று சொன்னவர், இந்திய மகாக்கவி இரவீந்திரநாத் தாகூர். மனிதர்களைக் குறித்து இறைவன் இன்னும் களைப்போ, சலிப்போ அடையவில்லை என்ற நம்பிக்கை செய்தியை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரப்புவது, மிக மிக முக்கியமான, அவசரமானத் தேவை.

வார்த்தைகளால், பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்தி இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றிய பலரில், Dr. Albert Schweitzer அவர்களும் ஒருவர். அவர் வாழ்வில் நடந்த நிகழ்வு இது...

ஆல்பர்ட் அவர்கள், ஆப்ரிக்காவில், வறியோர் நடுவே மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு உலக அமைதி நொபெல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவ்விருதைப் பெற்ற அடுத்த ஆண்டு, அவர், அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு சென்றார். அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்கள், பெரும் தலைவர்கள் என்று, பலர், அவர் வரவிருந்த இரயில் நடைமேடையில் காத்திருந்தனர்.

ஆல்பர்ட் அவர்கள் இரயிலை விட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்க வேண்டும் என்று வேண்டியபடி அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றார் ஆல்பர்ட். அந்த நடைமேடையில், இரு பெட்டிகளைச் சுமந்தபடி தவித்துக் கொண்டிருந்த வயதான கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார். பின்னர், அவருக்காகக் காத்திருந்தவர்களிடம் திரும்பிவந்தார் ஆல்பர்ட். இதைக்கண்ட ஒரு பத்திரிகையாளர் மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையை, என் கண்முன் காண்கிறேன்" என்று கூறினார்.

இளமையில் நற்செய்தியையும், கிறிஸ்தவ மறையையும் வார்த்தைகளாய் பறைசாற்றிப் புகழ்பெற்ற ஆல்பர்ட் அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில் நற்செய்தியை வாழ்வாக்கினார். ஆல்பர்ட் அவர்களைப் போன்றோர், தங்கள் வாழ்வையே மறைபரப்புப் பணியாக மாற்றியதைக் கொண்டாட, இந்த ஞாயிறன்று நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நாம் கொண்டாடும் மறைபரப்புப்பணி ஞாயிறு, கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கத்தோலிக்கத் திருஅவையின் மறைபரப்புப் பணியைக் குறித்து, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் எழுதிய 'Maximum illud' என்ற திருத்தூது மடல், 1919ம் ஆண்டு வெளியானது. அம்மடல் வெளியானதன் முதல் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தை 'சிறப்பான மறைபரப்புப்பணி மாதமாக'க் கொண்டாட அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பியக் கண்டத்திலிருந்து, ஆப்ரிக்க, ஆசிய கண்டங்களில் மறைபரப்புப் பணியாற்றச் சென்ற அருள்பணியாளர்களும், துறவியரும், அறிந்தும், அறியாமலும், ஐரோப்பிய கலாச்சாரத்தையும், காலனியக் கருத்தியல்களையும், கிறிஸ்தவ மதத்துடன் இணைத்து, மக்கள் நடுவே பரப்பிவந்தனர். இந்தப் போக்கைத் தருத்தியமைக்க, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், 'Maximum illud' என்ற திருத்தூது மடலை வெளியிட்டார்.

மறைபரப்புப்பணி என்பது, மற்றொரு நாட்டை ஆக்ரமிக்கச் செல்லும் அரசியல் படையெடுப்பு அல்ல என்பதை, திருத்தந்தை, மிகத்தெளிவாக இம்மடலில் கூறினார். ஒரு சில நாடுகளில், மறைபரப்புப் பணியாளர்கள், ஆர்வம் மிகுதியாலும், தவறான கண்ணோட்டத்தாலும், மறைபரப்புப் பணிகளை, அரசியல் வழிகளில் ஆற்றிவந்தனர் என்பதை அறிந்த திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், இம்மடல் வழியே, தன் வேதனையை வெளிப்படுத்தினார்:

ஒரு சில நாடுகளில் நடைபெறும் மறைபரப்புப்பணியில் இறையரசின் வளர்ச்சியைக் காட்டிலும், ஒரு சில நாடுகளின் இலாபத்தை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் கண்டு, நான் வேதனையடைகிறேன்... இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வோர், மறைபரப்புப்பணியாளர்கள் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்கள். உண்மையான மறைபரப்புப்பணியாளர், தன் நாட்டின் தரகராக அல்ல, மாறாக, கிறிஸ்துவின் தூதராகச் செயலாற்றுபவர். (எண் 20)

இத்திருத்தூது மடலின் இறுதிப்பகுதியில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், மறைபரப்புப்பணியில் அனைத்து கத்தோலிக்கர்களையும் மூன்று வழிகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மூன்று வழிகளில் முதல் வழி, செபம். உலகெங்கும் நிகழும் மறைபரப்புப்பணிகளுக்கும், பணியாளர்களுக்கும் செபிப்பது, ஒவ்வொரு கத்தோலிக்கரும், அவரவர் இருந்த இடத்திலேயே ஆற்றக்கூடிய உதவி என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

மறைபரப்புப்பணியையும், செபத்தையும் இணைத்து திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ள கருத்து, இன்று நாம் கொண்டாடும் மறைபரப்புப்பணி ஞாயிறையும், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள வாசகங்களையும் இணைக்க உதவியாக உள்ளது. மறைபரப்புப்பணி ஞாயிறன்று செபத்தைப் பற்றிய வாசகங்கள் ஏன் என்று சிந்திக்கும்போது, மனதில் முதலில் தோன்றுவது, குழந்தை இயேசுவின் புனித தெரேசா.

புனித குழந்தை இயேசுவின் தெரேசா, மறைபரப்புப்பணியாளர்களின் காவலர் என்ற பெருமைக்குரியவர். பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து, கிறிஸ்துவை, பல கோடி மக்களுக்கு அறிமுகம் செய்த, புனித பிரான்சிஸ் சேவியரும், ஒரு மைல் கூட பயணம் செய்யாமல், தான் வாழ்ந்த துறவு மடத்தில், செபங்கள் செய்த, புனித தெரேசாவும், மறைபரப்புப் பணியாளர்களின் காவலர்கள் என்று, திருஅவை அறிவித்துள்ளது.

புனித சேவியர், தன் போதனைகளால், பல்லாயிரம் உள்ளங்களை இறைவனிடம் அழைத்து வந்ததுபோல், புனித தெரேசாவும், தன் செபங்களால், பல்லாயிரம் மனங்களை இறைவனிடம் கொணர்ந்தார். மறைபரப்புப் பணியில், இறைவனைப் பறைசாற்றுதல் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இறைவனை நோக்கி எழுப்பப்படும் செபங்களும் முக்கியம் என்பதை நாம் ஆழமாக உணர, இந்த ஞாயிறன்று செபத்தைப் பற்றிய வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன என்று எண்ணிப் பார்க்கலாம்.

செபத்தின் வலிமையால், எதிர்வரும் சக்திகளை முறியடிக்கலாம் என்பதை விடுதலைப் பயண நூல் வாசகம் (விடுதலைப் பயணம் 17:8-13) சொல்கிறது. மனம் தளராமல் செபிப்பதால், நீதியை நிலை நிறுத்தமுடியும் என்பதை, இன்றைய நற்செய்தி (லூக்கா நற்செய்தி 18:1-8) சொல்கிறது. தொடர்ந்து செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க, தொடர்ந்து செபியுங்கள்... என்பவை, இன்றைய வாசகங்கள் வழியே நமக்குத் தரப்பட்டுள்ள பாடங்கள். இவை, சவால்கள் நிறைந்த, அதே வேளை, வாழ்க்கைக்குத் தேவையானப் பாடங்கள்.

”அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்” (லூக்கா 18: 1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. செபிப்பதை குறித்து, நற்செய்தியாளர் லூக்கா பதிவுசெய்துள்ள உவமைகளில், நள்ளிரவில் நண்பர் என்ற உவமையை (லூக்கா நற்செய்தி 11: 1-13) சில வாரங்களுக்கு முன் நம் ஞாயிறு வழிபாட்டில் சிந்தித்தோம். நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் என்ற உவமையை இன்று சிந்திக்கிறோம்.

'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையில், மூடிய கதவைத் தொடர்ந்து தட்டிக்கொண்டிருந்த நமது நாயகன், ஒரே இடத்தில் நின்று, ஒரு சில மணித்துளிகளில் தன் தேவையை நிறைவேற்றிக் கொண்டார். இன்றய நற்செய்தியில் நாம் சந்திக்கும் கைம்பெண்ணோ, பல நாட்கள், ஏன்? பல மாதங்கள், பல ஆண்டுகள், விடாமுயற்சியுடன், நீதிமன்றத்திற்கும், நடுவரின் வீட்டுக்கும், நடுவர் சென்ற அனைத்து இடங்களுக்கும் நடையாய் நடந்து சென்று, தான் தேடியதைப் பெற்றார் என்பதை உணரலாம். எவ்வளவு காலம் இந்தக் கைம்பெண் தன் முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லூக்கா நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. "நடுவரோ நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை" (லூக்கா 18:4) என்ற ஒரே ஒரு குறிப்பை மட்டுமே இந்த உவமையில் காண்கிறோம்.

ஏழைகளுக்கு நீதி கிடைக்க, அல்லது அவர்கள் விண்ணப்பித்த கோரிக்கைகளை நிறைவேற்ற நீதி மன்றங்களும், அரசு அலுவலகங்களும் எத்தனை காலம் எடுக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த கதைதானே! இவர்களில் பலர் எதிர்பார்த்து, காத்திருந்த தீர்ப்புகளோ, விண்ணப்பித்திருந்த கோரிக்கைகளோ அவர்களின் மரணத்திற்குப் பிறகு வந்தடைந்த செய்திகளையும் நாம் அவ்வப்போது கேட்டுவருகிறோம். பல ஆண்டுகள், நீதி மன்றங்களின் வாசல்களிலும், அரசு அலுவலகங்களின் வாசல்களிலும் தவமிருந்து தங்கள் வேண்டுதல்களின் பலன்களைக் காணவிழையும் பல கோடி ஆதரவற்ற ஏழை மக்களின் பிரதிநிதியாக இந்த உவமையின் நாயகியான கைம்பெண்ணை நாம் சந்திக்கிறோம்.

இறைவனுக்கு அஞ்சாமல், மனிதர்களை மதிக்காமல், ஊழலில் ஊறிப்போன நடுவரிடம், ஒரு கைம்பெண் நீதி பெறுகிறார். நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்து, பாறையாகிப்போன நடுவரின் மனதை, தன் தொடர்ந்த வேண்டுதல் முயற்சிகளால் தகர்த்துவிடுகிறார் அந்தக் கைம்பெண்.

கடுகளவு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்துவிழும், நம்மை எதிர்கொள்ளும் தீய சக்திகள் அடிபணியும், மனசாட்சியை மழுங்கடித்துள்ள நீதிபதிகளும் நீதி வழங்கமுடியும் என்ற நம்பிக்கையை நாம் இவ்வுலகில் பரப்ப அழைக்கப்பட்டுள்ளோம். நம்பிக்கையற்ற உலகில், நம்பிக்கையை வளர்ப்பது, நாம் ஆற்றக்கூடிய தலைசிறந்த மறைபரப்புப்பணி!

19 October 2019, 14:16