தேடுதல்

Vatican News
இலங்கையில் தேர்தல் பிரச்சாரம் இலங்கையில் தேர்தல் பிரச்சாரம்  (ANSA)

தேர்தலில் மனசாட்சிப்படி வாக்களியுங்கள், இலங்கை திருஅவை

நவம்பர் 1, வருகிற வெள்ளியன்று இலங்கையில் நடைபெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை அறிக்கை வெளியிட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நாட்டின் பொருளாதார மற்றும், சமுதாய முன்னேற்றத்தின் சவால்களைக் கருத்தில்கொண்டு, இன மற்றும், சமய வன்முறையை நிறுத்தி, பொதுவான நன்மைக்கு உழைக்கும் வேட்பாளர்களுக்கு, மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு, இலங்கை தலத்திருஅவை விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நவம்பர் 1, வருகிற வெள்ளியன்று இலங்கையில் நடைபெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலங்களை சட்டவிரோதமாக ஆக்ரமித்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஒப்புரவுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை கத்தோலிக்கரும், ஏனைய கிறிஸ்தவ சபையினரும், அரசுத்தலைவர் தேர்தலில் ஆர்வமுடன் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ள காரித்தாஸ் அமைப்பு, நாட்டை ஞானத்தோடு வழிநடத்திச்செல்லும் நேர்மையான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுமாறு, ஒவ்வொரு நாளும் செபமாலை செபிக்குமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நல்ல நிர்வாக மேலாண்மை திறமை, அனைத்து மக்களின் மாண்பை மதித்தல், சமுதாய நீதி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், ஊடகத்துறையில் ஒலிவுமறைவற்ற நிலை, சமத்துவம், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தல், மனித வர்த்தகத்தைத் தடுத்தல், சிறார் நலத்தில் அக்கறை, மீள்குடியமர்த்தலில் ஆர்வம் போன்ற விவகாரங்களில் ஆர்வமுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்குமாறும், இலங்கை மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 2 கேடியே 20 இலட்சம் மக்களில், பெரும்பாலானவர்கள் புத்த மதத்தினர். கத்தோலிக்கர் 6.1 விழுக்காட்டினர் மற்றும், பிரிந்த கிறிஸ்த சபையினர் 1.3 விழுக்காட்டினர்.(Fides)

29 October 2019, 15:20