தேடுதல்

Vatican News
சிலேயில் அரசை எதிர்த்து பேரணி சிலேயில் அரசை எதிர்த்து பேரணி  (IVAN ALVARADO)

துன்புறும் இலத்தீன் அமெரிக்கர்களுடன் துறவிகள்

சிலேயில், விலைவாசி உயர்வு மற்றும், அரசியல்வாதிகளின் அக்கறையற்ற நிலையை எதிர்த்தும், சீர்திருத்தத்தை வலியுறுத்தியும், பத்து இலட்சம் மக்கள், வரலாறு காணாத பேரணியை நடத்தினர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதிகளில், கடுமையான அடக்குமுறைகளால் துன்புறும் ஏராளமான மக்களின் நம்பிக்கைகள் மற்றும், வேதனைகளில் தாங்களும் தோழமையுணர்வு கொள்வதாக, அப்பகுதி துறவறத்தார் தெரிவித்துள்ளனர்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதிகளில் துன்புறும், குறிப்பாக, அண்மை வாரங்களாக, உரிமைகள் மற்றும், சமுதாய நீதிக்காகப் போராடும் மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கடுமையான வன்முறைகளால், துன்பங்களை அனுபவிக்கும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாக, CLAR எனப்படும், இலத்தீன் அமெரிக்க துறவு சபைகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இலத்தீன் அமெரிக்க கண்டத்தில், பல்வேறு சூழல்களில், சட்டத்தை அமல்படுத்துகின்றவர்கள் மற்றும், உரிமைக்காகப் போராடும் மக்களுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களால் ஏற்பட்டுள்ள வன்முறையும், பதட்டநிலைகளும் கவலை தருகின்றன எனவும், அக்கூட்டமைப்பு கூறியுள்ளது.

சிலே நாட்டில், விலைவாசி உயர்வு மற்றும், அரசியல்வாதிகளின் அக்கறையற்ற நிலையை எதிர்த்தும், சீர்திருத்தத்தை  வலியுறுத்தியும், இவ்வெள்ளியன்று பத்து இலட்சம் மக்கள் வரலாறு காணாத போராட்டத்தை நடத்தியுள்ளதை அக்கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பொலிவியா நாட்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் அதிகம் சந்தேகமடைந்துள்ள மக்கள், சனநாயகத்தைப் பாதுகாக்கப் போராடி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அத்துறவியர் அமைப்பு, ஹெய்ட்டி நாட்டில், பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல்களே வறுமைக்குக் காரணம் எனச் சொல்லி, மக்கள் போராடி வருவதையும் கூறியுள்ளது.

நிக்கராகுவாவில், அரசின் அமைப்புமுறை, பேச்சு சுதந்திரம், ஏன், சமய சுதந்திரத்தையும்கூட தடைசெய்துள்ளது எனவும், சனநாயகத்தைப் பார்ப்பதற்கு மக்கள் ஆவலாக உள்ளனர் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.     

அமைதி மற்றும், நீதிக்காகத் தாகம் கொண்டுள்ள இம்மக்களை, அமைதியின் புனிதராகிய அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, வாழ்வின் கடவுள்முன் சமர்ப்பிப்பதாகவும் CLAR அமைப்பு தெரிவித்துள்ளது. (Fides)

26 October 2019, 15:40