தேடுதல்

Vatican News
உஸ்பெகிஸ்தான் நாட்டின் நுழைவாயில்களில் ஒன்று உஸ்பெகிஸ்தான் நாட்டின் நுழைவாயில்களில் ஒன்று 

உஸ்பெகிஸ்தானில் சிறப்பு மறைப்பணி மாதம்

கஜகஸ்தானிலுள்ள ஏறத்தாழ 1 கோடியே 80 இலட்சம் மக்களில் 70 விழுக்காட்டுக்கும் மேலானோர் முஸ்லிம்கள் மற்றும், 26 விழுக்காட்டுக்கும் மேலானோர் கிறிஸ்தவர்கள், இவர்களில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களே அதிகம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் கத்தோலிக்க சமுதாயம், சிறப்பு மறைப்பணி மாதத்தில் ஒவ்வொரு நாளும் செபமாலை செபித்து, உலகெங்கும் இருக்கின்ற மறைப்பணித்தளங்களுக்கு அதை அர்ப்பணித்து வருகின்றது என்று, அந்நாட்டு அப்போஸ்தலிக்க நிர்வாகி, பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணி Jerzy Maculewicz அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

இந்நாட்டில் மறைப்பணியாற்றும் பெரும்பாலான பிரான்சிஸ்கன் சபையினர், அக்டோபர் 4, அசிசி நகர் புனித பிரான்சிஸ் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி, இந்த அக்டோபர் மாதம் முழுவதிலும், விசுவாசிகள், திருவருள்சாதனங்கள் பெறுவதற்கு ஊக்குவித்து வருவதாகவும் அருள்பணி Jerzy Maculewicz அவர்கள் கூறினார்.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த உஸ்பெகிஸ்தானில் ஏறத்தாழ மூவாயிரம் பேர் திருமுழுக்குப் பெற்றவர்கள், இவர்களில் 700 பேர், தலைநகர் தாஷ்கண்ட்டில், கிறிஸ்தவ வாழ்வில் மிகுந்த ஈடுபாட்டுடன் உள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது. (Fides)

கஜகஸ்தானில் சிறப்பு மறைப்பணி மாதம்

மேலும், மற்றொரு முன்னாள் சோவியத் யூனியன் குடியரசாகிய கஜகஸ்தானிலுள்ள, சிறுபான்மை கத்தோலிக்க சமுதாயம், கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் செயல்களில் தங்களைப் புதுப்பித்து வருகின்றனது என்று, மறைப்பணியாளர் ஒருவர் கூறினார்.

இக்குடியரசில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், 19ம் நூற்றாண்டிலிருந்தே, கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏனெனில், இரஷ்யப் பேரரசால், போலந்து, லித்துவேனியா, பெலாருஷ்யா, உக்ரைன், மற்றும் இரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், கஜகஸ்தானிற்கு நாடுகடத்தப்பட்டனர்.

மேலும், சோவியத் யூனியனின் ஸ்டாலின் ஆட்சியின்கீழ், 1930கள் மற்றும், 40களில், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சோவியத் வதைமுகாம்களுக்கு கடத்தப்பட்டனர் மற்றும், இவர்களில் கத்தோலிக்கர் 5 இலட்சம் என்று, Astana பேராயர் Tomasz Peta அவர்கள் கூறினார்.

1991ம் ஆண்டில் சோவியத் யூனியன் கலைந்ததைத் தொடர்ந்து, நாடுகடத்தப்பட்டிருந்த பலர், தங்களின் சொந்த நாடுகளுக்கும், இல்லங்களுக்கும் திரும்பினர் என்று கூறப்பட்டுள்ளது. இன்று கஜகஸ்தானிலுள்ள ஏறத்தாழ 1 கோடியே 80 இலட்சம் மக்களில் 70 விழுக்காட்டுக்கும் மேலானோர் முஸ்லிம்கள் மற்றும், 26 விழுக்காட்டுக்கும் மேலானோர் கிறிஸ்தவர்கள், இவர்களில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களே அதிகம். (AsiaNews)

29 October 2019, 15:21