தேடுதல்

Vatican News
பெங்களூரில் கண் தான விழிப்புணர்வு பேரணி   பெங்களூரில் கண் தான விழிப்புணர்வு பேரணி  

கிளேரிசியன் சபை-கண் தான விழிப்புணர்வு பேரணி

உலகிலுள்ள ஏறத்தாழ 3 கோடியே 90 இலட்சம் பார்வையற்றோரில், ஏறத்தாழ ஒரு கோடியே 20 இலட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கண் தானம் வழங்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கத்தில், பெங்களூர் கிளேரிசியன் துறவு சபையினர் ஐந்து நாடுகளில் 227 இடங்களில் மாபெரும் கண் தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளனர்.

கிளேரிசியன் சபை அருள்பணி ஜார்ஜ் கண்ணன்தானம் (George Kannanthanam) மற்றும், அச்சபை அருள்பணியாளர்களின் முயற்சியால், உலக பார்வை நாளான, அக்டோபர் 10ம் தேதி, ‘பார்வையற்ற நடை’ என்ற பெயரில் இடம்பெற்ற பேரணிகளில், குறைந்தது ஒரு இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.

பார்வையற்றோர் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்து, அவர்களுடன் தோழமையுணர்வைத் தெரிவிக்கும் முறையில், பேரணிகளில் கலந்துகொண்டவர்கள், கண்களைக் கட்டியபடியே நடந்துசென்றனர்.

இவ்வாறு சென்றவர்களை, தன்னார்வலர்கள் வழிநடத்திச் சென்றனர். இந்தியாவின் பெங்களூரு, சண்டிகார், ஷில்லாங், டெல்லி, குவாகாத்தி, காலிகட் ஆகிய நகரங்களிலும், பிலிப்பீன்ஸ், மக்காவோ உட்பட ஏனைய நாடுகளிலும் இப்பேரணிகள் நடத்தப்பட்டன.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகிலுள்ள ஏறத்தாழ 3 கோடியே 90 இலட்சம் பார்வையற்றோரில், மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது ஏறத்தாழ ஒரு கோடியே 20 இலட்சம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர்.

இந்தியாவில் 2018ம் ஆண்டில் உயிர்துறந்த 90 இலட்சம் பேரில், 68 ஆயிரத்து 409 பேரே தங்களின் விழிவெண்படலத்தைத் தானம் செய்துள்ளனர் என்று அருள்பணி கண்ணன்தானம் அவர்கள் கூறினார். (AsiaNews/Agencies)

கண் தானம்

இதற்கிடையே, அக்டோபர் 15, இச்செவ்வாய் அதிகாலையில் மராடைப்பால் உயிரிழந்த, திருச்சி மறைமாவட்ட முன்னாள்  ஆயர் அந்தோனி டிவோட்டா அவர்களுடைய கண்கள், அவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் திருச்சி புனித ஜோசப் மருத்துவமனைக்கு கண்தானம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

19 October 2019, 15:08