தேடுதல்

Vatican News
புனித அன்னை தெரேசாவின் திருவுருவம் வைக்கப்பட்ட நிகழ்வு புனித அன்னை தெரேசாவின் திருவுருவம் வைக்கப்பட்ட நிகழ்வு 

நல்லிணக்கத்தை ஊக்குவிக்க புனித அன்னை தெரேசா திருவுருவம்

புனித அன்னை தெரேசா, ஓர் அன்னையைப் போல, நம் இதயங்களில் வாழ்கிறார் - மேற்கு வங்காள ஒரு மசூதியின் இமாம் Sahidulla Khan

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும், இந்தியாவின் சமயச்சார்பற்ற விழுமியங்களையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில், மேற்கு வங்காள மாநிலத்தில், ஒரு புகழ்பெற்ற சந்தையின் நடுவில், புனித அன்னை தெரேசாவின் திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா நகருக்கு 15 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Nepalgunge Hatt சந்தை அமைந்துள்ள இடத்தில், புனித அன்னை தெரேசாவின் 109வது பிறந்த நாளான, ஆகஸ்ட் 27, இச்செவ்வாயன்று, இந்நிகழ்வு நடைபெற்றது.

பல்சமய உரையாடலை ஊக்குவிக்கும், Nepalgunge More Bebasahi எனப்படும் குழுவின் முயற்சியால், பலரும் கூடுகின்ற முக்கியமான சந்தையில், பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, புனித அன்னை தெரேசாவின் திருவுருவத்தை வைத்துள்ளனர்.

இந்நிகழ்வில், கத்தோலிக்கர் சார்பாக கலந்துகொண்ட Baruipur மறைமாவட்ட வாரிசுரிமை ஆயர் Shyamal Bose அவர்கள் பேசுகையில், தான் பயிற்சி மாணவராக இருந்த சமயத்தில் அன்னை தெரேசா அவர்களைச் சந்தித்தேன் எனவும், ஏழைகளின் முகங்களில் அவர் கடவுளைக் கண்டார் எனவும் கூறினார்.

உள்ளூர்  மசூதியின் இமாம் Sahidulla Khan அவர்கள் பேசுகையில், ஓர் அன்னையைப் போல, அவர் நம் இதயங்களில் வாழ்கிறார் என்றார். அந்த சந்தைக் குழுவின் செயலர், Sathya Ranjan Panja அவர்கள் பேசுகையில், விவேகானந்தர் உருவச்சிலைக்கு அருகில், புனித அன்னை தெரேசாவின் உருவச்சிலையும் இருக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் விரும்பியதால், அவரின் பிறந்த நாளை, இதற்குத் தெரிவு செய்தோம் என்று தெரிவித்தார். (AsiaNews / Agencies) 

31 August 2019, 15:53