தேடுதல்

Vatican News
இலங்கையில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக இலங்கையில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக 

பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள், மறைசாட்சிகள்

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய, பாரபட்சமற்ற விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று, கத்தோலிக்கர் வலியுறுத்தி வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் ஏப்ரல் 21ம் தேதி உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள், மறைசாட்சிகள் என்று, இரு கர்தினால்கள் அறிவித்துள்ளனர்.

கொழும்பு நகருக்கு இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, Tewatta  தேசிய லங்கா அன்னை மரியா பசிலிக்காவில் நோயாளிகளை ஆசிர்வதிக்கும் ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்ட, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் குவால்தியெரோ பஸெஸ்த்தி அவர்களும், இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், இவ்வாறு தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 25, இஞ்ஞாயிறன்று நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், Katuwapitiya மற்றும், கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில், நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், தங்கள் விசுவாசத்திற்காக உயிரிழந்த அனைவரும் மறைசாட்சிகள் என்று, கர்தினால் பஸெஸ்த்தி அவர்கள் கூறினார் என்றார்.

வருகிற செப்டம்பர் 3ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கும்போது, இது குறித்து கலந்துபேசவிருப்பதாக, கர்தினால் பஸெஸ்த்தி அவர்கள் உறுதி கூறினார் என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் தெரிவித்தார்.

Katuwapitiyaயிலுள்ள புதையிடம், வருங்காலத்தில் புனிதர்களின் தளமாக அமையும் என்றும் கூறிய, கர்தினால் இரஞ்சித் அவர்கள், இத்தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்ற விவரம் இதுவரை அரசு அறிவிக்காமல் இருப்பதால், இந்த அழிவுக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை என்றும் கூறினார்.   

இலங்கையில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 258 பேர் உயிரிழந்தனர். (UCAN)

27 August 2019, 15:19