தேடுதல்

Vatican News
கம்போடியாவில், புனித லூயிஸ் மற்றும் மரி மார்ட்டின் ஆகிய இருவரின் புனிதப் பொருள்களை ஏந்திச்செல்லும் பக்தர்கள் கம்போடியாவில், புனித லூயிஸ் மற்றும் மரி மார்ட்டின் ஆகிய இருவரின் புனிதப் பொருள்களை ஏந்திச்செல்லும் பக்தர்கள் 

புனிதப் பெற்றோரின் புனிதப் பொருள்கள், கம்போடியாவில்

புனித குழந்தை இயேசு தெரேசாவின் பெற்றோர்களின் புனிதப் பொருள்கள், கம்போடியா நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித குழந்தை இயேசு தெரேசாவின் பெற்றோர்களான புனித லூயிஸ் மற்றும் மரி மார்ட்டின் ஆகிய இருவரின் புனிதப் பொருள்கள், கம்போடியா நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு, மக்களின் வணக்கத்தைப் பெற்று வருகின்றன என்று, ஆசிய செய்தி கூறியுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து, ஆகஸ்ட் 27ம் தேதி, கம்போடியாவின் Phnom Penh நகரை அடைந்த இப்புனிதப் பொருள்கள், செப்டம்பர் 16ம் தேதி முடிய, அந்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியா நாட்டில், குடும்பங்களை மையப்படுத்திய மூன்றாண்டு கொண்டாட்டங்கள், 2017ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருவதையொட்டி, பெற்றோர்களாக, புனிதர்களாக வாழ்ந்த லூயிஸ் மற்றும் மரி மார்ட்டின் ஆகிய இருவரின் புனிதப் பொருள்கள், அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளன என்று, இப்பயணங்களை ஒருங்கிணைக்கும் அருள்பணி Gianluca Tavola அவர்கள் கூறினார்.

புனித குழந்தை தெரேசாவின் பெற்றோர்களான லூயிஸ் மற்றும் மரி மார்ட்டின் ஆகிய இருவரும், 2008ம் ஆண்டு, அக்டோபர் 19ம் தேதி, Lisieux நகரில் அமைந்துள்ள புனித குழந்தை தெரேசாவின் பசிலிக்காவில் அருளாளர்களாக உயர்த்தப்பட்டனர்.

2105ம் ஆண்டு, வத்திக்கானில், குடும்பங்களை மையப்படுத்தி நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின்போது, அக்டோபர் 18ம் தேதி, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விருவரையும் புனிதர்களாக உயர்த்தினார்.

திருமணமான கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் புனிதர்களாக உயர்த்தப்பட்டது, திருஅவை வரலாற்றில், அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. (AsiaNews)

29 August 2019, 14:51