தேடுதல்

 Open Arms பணியாளரின் மீட்புப்பணி Open Arms பணியாளரின் மீட்புப்பணி  

இத்தாலிய இவாஞ்சலிக்கல் சபை - புலம்பெயர்ந்தோரை ஏற்க தயார்

ஏற்கனவே கடும் துயரங்களை அனுபவித்துள்ள புலம்பெயர்தோரின் நலவாழ்வுமீது அக்கறை கொண்டு, ஐரோப்பிய ஒப்பந்தத்தின்படி, அவர்களை ஏற்பதற்கு தயார் – இத்தாலிய கிறிஸ்தவ சபைகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் தலைவர், போதகர் லூக்கா மரியா நெக்ரோ அவர்களும், வால்தேசி கிறிஸ்தவ சபை தலைவர்  யூஜெனியோ பெர்னார்தினி அவர்களும் இணைந்து, ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் டேவிட் சசோலி அவர்களுக்கு எழுதிய மடலில், ஆகஸ்ட் 2ம் தேதி Open Arms கப்பலால் மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  

கடந்த நான்கு நாள்களுக்குமுன், இத்தாலிய பிரதமர் ஜூசப்பே கோந்தெ, மற்றும் துணைப் பிரதமர் மத்தேயோ சால்வினி அவர்களுக்கும் மடல் எழுதியுள்ள, இவ்விரு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், ஏற்கனவே தங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்திலுள்ள புலம்பெயர்தோர்மீது இரக்கம் காட்டி, அவர்களின் இன்னல்களை அகற்றுவதற்கு, மனிதாபிமான, தொழில்நுட்ப மற்றும் தற்காலிக உதவிகளை வழங்குமாறு விண்ணப்பித்துள்ளனர்.

இவ்விரு கிறிஸ்தவ சபைகளும், சான் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புடன் இணைந்து, மத்தியதரைக்கடல் வழியாக இத்தாலி வருகின்ற புலம்பெயர்தோருக்கு, மனிதாபிமான உதவிகளை ஆற்றி வருகின்றன.  

Open Arms என்ற கப்பல், 160க்கும் அதிகமான புலம்பெயர்தோருடன், 11வது நாளாக, கடலிலே நிற்கின்றது. காசநோயாளி ஒருவர் அங்கு இருந்ததால், அவர், இரவோடு இரவோடு கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் ஆகிய இருவரும், இத்திங்கள் காலையில், கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டு, மால்ட்டா நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2019, 15:01